Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கவாஸ்கர் காலத்தில் இருந்தே நீடிக்கும் பகை... ஆஸ்திரேலியாவும் சர்ச்சையும்!

சமீபத்தில் முடிந்த பெங்களூரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து ‘சிக்னல்’ வந்தபின்பே, டி.ஆர்.எஸ் கோரினார். உடனுக்குடன் தைரியமாக தானாக முடிவெடுப்பதுதான் கேப்டனின் கெத்து. அதைவிடுத்து, ஸ்மித் இப்படிச் செய்கிறாரே... அவருக்கு என்ன புத்தி மழுங்கி விட்டதா என புலம்பினர் ரசிகர்கள். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் கூட ஸ்மித்தின் செயலை ஏற்கவில்லை. இந்த நேரத்தில்தான் Brain fade என்ற வார்த்தையும் பிரபலமானது. 

ஆஸ்திரேலிய அணி

‘ஆமாம், நானே பார்த்தேன். இரண்டு முறை ஸ்மித், டிரெஸ்ஸிங் ரூமில் ஆலோசனைக் கேட்டு அப்பீல் செய்தார். இது நியாயமே இல்லை’ என பிரஸ் கான்ஃபரன்ஸில் பொங்கி விட்டார் இந்தியக் கேப்டன் விராட் கோலி. ‘அப்படீன்னா... ஸ்மித் ஒரு மோசடிப் பேர்வழின்னு சொல்றிங்களா’ என நிருபர் கேட்க, ‘நான் சொல்லலை. நீங்கதான் அப்படிச் சொல்றீங்க...’ என உஷாரானார் கோலி. 

கிரிக்கெட் அரங்கில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல் என்றாலே, சர்ச்சைக்குப் பஞ்சம் இருக்காது. இந்த தொடரும் அதற்கு விதிவிலக்கல்ல. ஸ்லெட்ஜிங் உள்பட ஏதாவது ஒரு வழியில் ஏழரையைக் கூட்டுவது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்களின் ஜீனிலேயே கலந்திருக்கிறது. “the spirit of the game”- என்பது அவர்கள் அகராதியிலேயே கிடையாது. சில சமயங்களில் இந்திய வீரர்களும், ஏடாகூடமாகப் பேசுவதுண்டு. கவாஸ்கரே ஒருமுறை ‘விளையாட்டு உணர்வை’ அடித்துத் தொங்கவிட்டிருந்தார். அதுபோன்ற சுவாரஸ்யங்களின் தொகுப்பே இந்த கட்டுரை.

1980, மெல்போர்ன் டெஸ்ட்
ஆஸ்திரேலியாவின் வேகப்புயல் டென்னிஸ் லில்லி பந்தில், எல்.பி.டபுள்யு முறையில் அவுட்டானார் இந்தியக் கேப்டன் சுனில் கவாஸ்கர். அம்பயர் அவுட் என கை விரலை உயர்த்த, ஆஸ்திரேலிய வீரர்கள் கொண்டாட்டத்துக்குத் தயாராகினர். ஆனால், நம்ம ஆள் ‘இது அவுட்டே இல்லை’ என கடும் விரக்தியில், வெளியேறவே இல்லை. டென்னிஸ் லில்லி, கவாஸ்கர் அருகே சென்று பந்து காலில் பட்டதாக சைகை செய்ய, வேறு வழியில்லாமல் பெவிலியன் திரும்பினார் கவாஸ்கர். ஆனாலும், சூடு ஆறவில்லை. கேப்டன் அல்லவா? நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த சேத்தன் சவுகானையும் தன்னுடன் பெவிலியனுக்கு வருமாறு இழுத்துச் சென்றார். 

நடப்பதை எல்லாம் பவுண்டரி லைனுக்கு அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்த இந்திய அணியின் மேலாளர் ஷாகித் துரானி, சேதன் சவுகானை களத்துக்கு திரும்புமாறு சொன்னார். கவாஸ்கரும் வேண்டாவெறுப்பாக பெவிலியன் திரும்பினார். இக்கட்டான நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்டதாக அணி மேலாளரைப் பாராட்டினர் வர்ணனையாளர்கள். ‘ஒரு கேப்டனாக நான் அப்படி நடந்திருக்க கூடாது. என் தவறுக்கு எந்த நியாயமும் கற்பிக்க முடியாது’ என்றார் பின்னாளில் கவாஸ்கர். இதில் வேடிக்கை என்னவெனில் அவுட் கொடுத்ததோடு வேலை முடிந்து விட்டது என ஜம்மென கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார் அம்பயர். வீடியோவைப் பார்த்துருங்களேன். புரியும்.

1999, அடிலெய்ட் டெஸ்ட் 
சச்சின் ஆஸ்திரேலியர்களின் சிம்மசொப்பனம் எனில், சச்சினின் சிம்மசொப்பனம் வேகப்புயல் மெக்ரத். இரண்டாவது நாள் டீ பிரேக் முடிந்து மேட்ச் நடக்கிறது. சச்சினின் விக்கெட்டை வீழ்த்தியே தீர வேண்டும் என ‘அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப்’ நோக்கி அனலாக வீசுகிறார் மெக்ரத். சச்சின் அதை சீண்டவே இல்லை. ஆம். சச்சினுக்கு மெக்ரத் வீசியது ஆறு மெய்டன் ஓவர்கள். பின்னாளில் மெக்ரத்தைப் புகழும்போது சச்சின் இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார். ஆனால், விஷயம் அதுவல்ல.

மெக்ரத் வீசிய அந்த பந்து பெளன்ஸ் ஆகும் என எதிர்பார்த்து குனிந்தார் சச்சின். அது அவ்வளவாக பெளன்ஸ் ஆகவில்லை (அதான் மெக்ரத்). பந்து சச்சினின் தோள்பட்டை மீது பட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்டு அலறினர். சத்தத்தைக் கேட்டு அதிர்ந்த அம்பயர் டெயரில் ஹார்பெர், யோசிக்கவே இல்லை. கைவிரலை மேலே தூக்கி விட்டார். சச்சின் உடனடியாக பெவிலியன் நோக்கி நகர்ந்து விட்டார். ‘பந்து கையில் பட்டது போல இருந்தது. அம்பயர் அவுட் கொடுத்து விட்டார்’ என்றனர் வர்ணனையாளர்கள். அவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் கொதித்தனர். ‘ஸ்டம்ப்புகள் இன்னும் ஆறு இஞ்ச் உயரமாக இருந்தால், அதற்கு எல்.பி.டபிள்யு கொடுக்கலாம்’ என கிண்டல் செய்தார் கவாஸ்கர். மன சாட்சியே இல்லாமல் அப்பீல் செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு சிறிதும் இல்லை ஆஸ்திரேலிய வீரர்களிடம். அதான் ஆஸி!

2001, மும்பை டெஸ்ட் 
ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள். ராகுல் டிராவிட் புல் ஷாட் அடித்ததை ஸ்கொயர் லெக் திசையில் இருந்த மைக்கேல் ஸ்லாட்டர் ஃப்ரன்ட் டைவ் அடித்து பிடித்தார். பந்து தரையில் பட்டதாக சந்தேகம் எழ, களத்தில் இருந்த அம்பயர்கள், தேர்ட் அம்பயரின் உதவியை நாடினர். முடிவில், அது நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது. ஆத்திரமடைந்த ஸ்லாட்டர் நேராக, டிராவிட்டிடம் சென்று வம்பிழுத்தார். டிராவிட் அசரவில்லை. உடனே அம்பயர் வெங்கட்ராமனிடமும் அதிருப்தி தெரிவித்தார் ஸ்லாட்டர். போட்டி முடிந்தபின், டிராவிட் ஆஸ்திரேலிய டிரெஸ்ஸிங் ரூமுக்குச் சென்று விவாதித்தார். இரு தரப்பிலும் நீண்ட நேரம் விவாதம் நடந்தது. ஸ்லாட்டர் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். அத்துடன் அந்த பிரச்னைக்கு முடிவுக்கு வந்தது. முந்தைய செயல்பாட்டைக் கருத்தில் கொண்டு, ஐ.சி.சி மேட்ச் ரெஃப்ரி கேமி ஸ்மித், ஸ்லாட்டரை எச்சரிக்கை மட்டும் செய்து மன்னித்தார்.

2008, சிட்னி டெஸ்ட்
இதுதான் உச்சம். Monkeygate எனும் வார்த்தை இந்தியா, ஆஸ்திரேலியா மட்டுமல்லாது கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. பொதுவாக ஆஸ்திரேலியர்கள்தான் களத்தில் வம்பிழுப்பார்கள். இந்தமுறை ஹர்பஜன் அவர்களைச் சீண்டினார். ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் சைமண்ட்ஸைப் பார்த்து, ‛குரங்கு’ என ஹர்பஜன் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டது. இனரீதியாக திட்டியதற்காக ஹர்பஜனுக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து பி.சி.சி.ஐ முறையிட்டது. ‘ஆஸ்திரேலியர்கள் விளையாட்டு உணர்வுடன் நடந்துகொள்ளவில்லை’ என அனில் கும்ப்ளே குற்றம் சாட்டி இருந்தார். சச்சின் தன் சுயசரிதைப் புத்தகத்திலும் இந்த சம்பவம் குறித்து எழுதியுள்ளார். 

- தா.ரமேஷ் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close