Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அலோன்சா - கால்பந்து உலகம் மிஸ் செய்யும் மிரட்டல் மிட்ஃபீல்டர்! #VikatanExclusive

மிட்ஃபீல்டர்கள் - ஒரு கால்பந்து அணியின் பில்லர்கள். அளவாக, அதேநேரத்தில் அனலாக ஓடி; அளந்தெடுத்து பாஸ் கொடுத்து; இஞ்ச் பெர்ஃபெக்ட் கிராஸ் வைத்து; டைமிங் ஹெட்டர் செய்து; ஆட்டத்தை, அணியை மெருகெற்றும் வல்லவர்கள். கோல் அடிப்பதை விட, அசிஸ்ட் செய்வதிலேயே பரம திருப்தி அடையும் புண்ணியவான்கள். அட்டாக்கிங்கில் மிரட்டி, டிஃபன்சில் நீக்குப்போக்காக பம்மி, மிட்ஃபீல்டில் ‛பாஸ்’ ஓவியம் வரைந்து, அணியின் பிம்பத்தை மெருகேற்றும் நம்பிக்கை நட்சத்திரங்கள். டெக்னிக்கல் ரீதியாக கில்லாடிகள்.

அலோன்சா

ஒரு அணி சிறப்பாக விளையாடுகிறது எனில் அற்கு காரணம் மிட்ஃபீல்டர்ஸ் எனும் நடுக்கள ஆட்டக்காரர்கள்தான். மான்சஸ்டர் யுனைடட் அணி ஒரு காலத்தில் கால்பந்து உலகை ஆளக் காரணம் ஸ்கோல்ஸ், கிக்ஸ் எனும் மீட்ஃபீல்டர்ஸ். அவர்கள் கோலோச்சிய காலத்தில் அந்த அணி பல தொடர்களில் சாம்பியன். ஜாம்பவான்களின் ஓய்வுக்கு பின், அவர்களுக்கு நிகரான மாற்று வீரர்கள் கிடைக்கவில்லை. இன்னும் அந்த அணி மீண்ட பாடில்லை. அதாவது பழைய ராஜாங்கம் இல்லை.

உலகின் முண்ணணி கால்பந்து தேசங்களில் ஒன்று ஸ்பெயின். சீரான இடைவெளியில் சிறந்த நடுக்கள ஆட்டக்காரர்களை உற்பத்தி செய்யும் அட்சய தொழிற்சாலை. சேபி அலோன்சோ, அந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதில் ஆச்சரியமில்லை. அவர் கடந்த வாரம் ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். 

Lived it. Loved it. 

Farewell beautiful game. 

- இதுதான் அந்த ட்வீட். 

அலோன்சா ஓய்வு முடிவை அறிவித்தபோது ஒட்டு மொத்த கால்பந்து ரசிகர்களுமே வருந்தினர். கால்பந்து உலகில் ஒரு சில வீரர்களுக்குத்தான் எதிரணி ரசிகர்களின் பாராட்டு கிட்டும். சேபி அலோன்சோ அப்படிப்பட்டவர். மாற்று அணியினராலும் மதிக்கப்பட்டவர். 

1981 நவம்பர் 25-ல் ஸ்பெயினின் தொளோசா நகரில் கால்பந்து வீரரின் மகனாக பிறந்தார் சேபி அலோன்சோ. அவருடைய தந்தை பெரிக்கோ அலோன்சோ முன்னணி வீரர். ஸ்பெயினின் ரியல் சொசைடாட் கிளப் அணிக்காக தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் லா லிகா கோப்பையை வென்றவர். இனம் இனத்தோடுதானே சேரும்! தந்தை, சகோதரர்கள் கால்பந்து பயிற்சி செய்வதைப் பார்த்து பார்த்து, ‛நானும் கால்பந்து வீரன்’ ஆவேன். சபதம் ஏற்றார் அலோன்சா. மற்ற சிறுவர்களைப் போல் கோல் அடிப்பதில் முனைப்பு காட்டவில்லை. பந்தை பெர்ஃபெக்டாக பாஸ் செய்வது, கோல் அடிக்க அசிஸ்ட் செய்வது அலோன்சாவுக்குப் பிடித்த அம்சங்கள்.

உள்ளூர் ஆட்டங்களில் அலோன்சோ காட்டிய முனைப்பைப் பார்த்து, அப்படியே கொத்திச் சென்றது ரியல் சொசைடாட். 18 வயதில் பெரிய கிளப்பில் இடம். முந்தைய சீசனில் சொதப்பியதால் 2001-02 சீசனில், அணியில் பல மாற்றங்கள் செய்தாக வேண்டிய கட்டாயம். அணியின் பயிற்சியாளராக இருந்த டோஷாக், வெறும் இருபது வயதே நிரம்பிய அலோன்சோவை கேப்டனாக நியமித்தார்.  கால்பந்து உலகின் புருவங்கள் உயர்ந்தது. ஒரு இளம் வீரருக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் அது. 

அடித்துப் பிடித்து 2002-03 சீசன் முடிவில் அலோன்சோ தலைமையிலான  ரியல் சொசைடாட், புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது. அவர்களைப் பொறுத்தவரை இது சாதனை. பெரும் சாதனை. இது சாத்தியமாகக் காரணம் நடுக்களத்தில் அலோன்சா ஆடிய கதக்களி. இந்த நாட்டியத்தைப் பார்த்து, ‛வாடா மவனே...’ என அள்ளி அணைத்துக் கொண்டது ஸ்பெயின் அணி. 2003-ல் ஸ்பெயின் அணியில் இடம். தேசிய அணியில் அடியெடுத்து வைத்த அதே ஆண்டில் தேடி வந்தது ஸ்பெயினின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருது.

அலோன்சாவின் இந்த புகழுக்குக் காரணம் டோஷாக். ''அலோன்சோ நடுக்களத்தில் விளையாடும்போது அவர் ஒட்டு மொத்த அணியின் திறமையும் மேம்படுத்துகிறார்’- இது டோஷாக் சொன்ன வார்த்தைகள். இதை உன்னிப்பாக கவனித்தனர் மற்ற மேனேஜர்கள். விளைவு, 2004-ல் லிவர்பூல் அணி இவரை விலைக்கு வாங்கியது. அந்த கிளப்பில் இணைந்த முதல் சீசனிலேயே, சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று தந்தார். ஃபைனலில் ஏசி மிலன் அணிக்கு எதிராக அவர் அடித்த கோல் முக்கியத்துவம் வாய்ந்தது. அலோன்சா, டாரஸ், கெராகர், ஜெரார்டு, ஆகியோர் இணைந்து விளையாடிய காலகட்டம் தான் லிவர்பூல் அணியின் பொற்காலம். 

கால்பந்து வீரர் அலோன்சா

2004 முதல் 2009 வரை லிவர்பூல் அணியில் விளையாடிய அலோன்சோ, அந்த அணிக்கு சூப்பர் கோப்பை, ஃபா கோப்பை, கம்யூனிட்டி கோப்பை என பல கோப்பைகளை வென்று தந்தார். இருப்பினும் லிவர்பூல் அணிக்காக தன்னால் ஒரு பிரீமியர் லீக் தொடரை வென்று  தர முடியவில்லை என்ற ஏக்கம் கடைசிவரை இருந்தது. 

அலோன்சோ பழகுவதிலும் எளிமையானவர். களத்தில் மட்டுமே ஆக்ரோஷம் காட்டுவார். லிவர்பூல் அணியின் பயிற்சியாளராக இருந்த பெனிட்டஸ், அலோன்சோவை ரியல் மாட்ரிட் அணிக்கு விற்க முயன்றபோதும், லிவர்பூலை விட்டு செல்ல மனமில்லாமல் இருந்தார். இருந்தாலும் அணியின் நலன் கருதி ரியல் மாட்ரிட் அணியின் ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்டார். ரியல் மாட்ரிட் அணிக்குத் தாவிய பின் அவரது ஆட்டம் மேலும் மெருகேறியது. 2009- 2014 வரை ரியல் மாட்ரிட் வென்ற பல்வேறு கோப்பைகளிலும் அணிக்கு முக்கிய பங்காற்றினார். ரியல் மாட்ரிட் பத்தாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் வென்று சாதனை படைத்த போதும் இவர் அந்த தொடரில் முத்திரை பதித்திருந்தார். 

நடுக்கள ஆட்டக்காரராக இருப்பினும் தன்னுடைய ஷாட்களினால் மிகவும் பிரபலமடைந்தார். ஃப்ரீ கிக், பெனால்டி கிக் போன்றவற்றில் கைதேர்ந்தவர். தான் விளையாடிய அனைத்து அணிக்களுக்குமே அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடியவர். 

ஸ்பெயின் அணிக்காக 114 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். ஒரு உலகக் கோப்பை, இரண்டு யூரோ கோப்பை வென்ற ஸ்பெயின் அணியில் இடம்பெற்றது அவர் செய்த பெரும் பாக்கியம். "ஒரு அணி நடுக்களத்தில் வெற்றி பெற்றால் அந்த போட்டியிலும் எளிதாக வெற்றி பெறலாம்" என்ற பாலிசியைப் பின்பற்றும் அலோன்சா,  2012-ம் ஆண்டு லா லிகாவின் சிறந்த நடுக்கள ஆட்டக்காரர் விருதை வென்றதோடு, 2013, 2014-ம் ஆண்டுகளில் பதினோரு பேர் அடங்கிய சாம்பியன்ஸ் லீக்கின் சிறந்த அணியிலும் இடம் பிடித்துள்ளார். 

இந்த தலைமுறையின் சிறந்த பயிற்சியாளர்களான பெப் கார்டியோலா, ஜோசே மொரினியோ, பெனிட்டஸ் மற்றும் ஆன்சலோட்டி அனைவரும் ஒரே கருத்தையே முன்வைக்கின்றனர். "எங்கள் அணியின் நடுக்கள ஆட்டத்தை மேம்படுத்தினோம்" என்பதுதான் அது. இந்த நான்கு பேருடைய அணிகளிலும் அலோன்சோ விளையாடி இருக்கிறார். வாட்டே மேஜிக்!

தன் ஆட்டத்தைப் பற்றியும் அணிக்கு என்ன தேவை என்பதையும் தெளிவாக தெரிந்து வைத்திருந்தார். அதனாலேயே தான் விளையாடிய அனைத்து அணிகளிலும் முத்திரை பதிக்க முடிந்தது. அலோன்சோ தன்னுடைய ஸ்டைலை பற்றி பேசும்போது, "களத்தில் உள்ள 90 நிமிடங்களும் அணியை சீராக வழிநடத்த உதவுவேன். என்னைச் சுற்றி எதிரணி வீரர்கள் சூழ்ந்து இருக்கும் போதுதான் என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். என்னைப் பொறுத்தவரை பந்தை எதிரணியிடம் இருந்து பறிப்பது மட்டும் ஆக்ரோஷமான ஆட்டம் இல்லை. வேகமாக பந்தை பாஸ் செய்து, சீரான வேகத்தில் களத்தில் முன்னேறுவதும் ஆக்ரோஷமான  ஆட்டம் தான்" என நுணுக்கமாக விவரிக்கிறார். 

அலோன்சா கால்பந்து வீரர்

ரியல் மாட்ரிட் அணியிலிருந்து ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிக்கு 2014-ல் மாறினார். அணி மாறினார். ஆட்டம் மாறவில்லை. போர் தளபதி போல அலோன்சோ, நடுக்களத்தில் தன் படைகளை வழிநடத்தி வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக அனைவருடனும் நட்புடன் பழகும் இவரது குணத்தால் தன்னுடன் விளையாடிய வீரர்களையும் பயிற்சியாளர்களையும் கவர்ந்தார்.

அத்தனை கோப்பைகளையும் விருதுகளையும் வென்ற போதிலும் சாதாரணமாகவே இருந்தார். பேயர்ன் முனிச் அணியுடனான ஒப்பந்தம் 2017 சீசனுடன் முடிகிறது. அத்துடன் கால்பந்துக்கு குட்பை சொல்லி விட்டார். நடுக்களத்தில் ஒரு வீரர் எப்படி ஆட வேண்டும், எப்படி ஆடக்கூடாது, ஒரு நடுக்கள வீரர் எப்படியெல்லாம் அணிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்கு  அலோன்சா சிறந்த உதாரணம். மீண்டும் ஒரு தேர்ந்த மிட்ஃபீல்டரை மிஸ் செய்யப் போகிறது கால்பந்து உலகம்.  

- வசந்த் குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close