Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புஜாராவைத் தெரியும். ஹனீஃப் முகமதுவை தெரியுமா? மறக்க முடியாத டெஸ்ட் போட்டிகள்!

ராஞ்சி டெஸ்ட்  டிராவில்  முடிந்தாலும் ஆஸ்திரலியாவிற்கு பதிலடியாக அமைந்த இந்தியாவின் அபார பேட்டிங்கை அனைவரும் பாராட்டினர். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது புஜாரா-சாஹா கூட்டணியின் 7வது விக்கெட் தான். இந்த ஜோடி 199 சேர்ந்தது. புஜாரா இரட்டைச்சதமும், சாஹா சதமும் அடித்தனர். இதில் புஜாராவின் மாரத்தான் இன்னிங்ஸ் தான் மீம்ஸ், வீடியோ மீம்ஸ் என அனைத்து சமூகவலைத்தளங்களிலும் ஹிட் டாபிக். இதைப்போன்று இதுவரை உலக அரங்கில் பௌலர்களை கலங்கடித்த நீ....ள ...மா...ன இன்னிங்ஸ் சிலவற்றை பார்ப்போம்.

டாப் 3  நீளமான இன்னிங்ஸ்கள்(பந்துகள்):

1.எல். ஹட்டன்(இங்கிலாந்து) :- 

டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய ஹட்டன்

இது இரண்டாம் உலகப் போருக்கு முன்பே 1938ல் நடைபெற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா  இடையேயான தொடரில் நிகழ்ந்தது.  364 ரன்கள் எடுக்க 847 பந்துகள் எடுத்து பௌலர்களைப்  பிழிந்தெடுத்தார்  இங்கிலாந்து அணிக்காக ஆடிய ஹட்டன். ‘டைம்லெஸ் போட்டி’யாக (அதாவது முடிவு வரும் வரை ஆட்டம் தொடரும்) நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஹட்டன் ஆட்டத்தின் உதவியுடன் 903 ரன்கள் எடுத்தது . இதுவே இன்று வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா இரண்டு இன்னிங்ஸ்களில் 201, 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதனால், ஒரு இன்னிங்ஸ் 579 ரன் வித்தியாசத்தில்   படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்விதான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் மிகப்பெரிய தோல்வி. ஹட்டனின் இந்த சாதனையும், மோசமான தோல்விக்கான சாதனையும் இன்று வரை முறியடிக்கபடவில்லை.

2.ஜி.எம்.டர்னர்(நியூஸிலாந்து)

1972ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 259 ரன்கள் எடுக்க 759 பந்துகள் பிடித்தார் டர்னர். இது 126 ஒவர்கள் 3 பந்துகள் ஆகும். மேற்கிந்திய தீவுகளின் 365 ரன்களைத் தொடர்ந்து ஆடிய இவரும் ஜார்விஸ் என்ற தொடக்க ஆட்டக்காரரும் முதல் விக்கெட்டுக்கு 387 ரன்கள் சேர்த்தனர். இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.

3.ஆர்.பி. சிம்ப்சன்(ஆஸ்திரேலியா):

 ஆர்.பி. சிம்ப்சன்

மிகவும் நல்ல பேட்டிங் களம் மான்சேஸ்டர் பிட்ச்.  ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு இடையேயான  நான்காவது டெஸ்ட் போட்டி அது. முதல் இன்னிங்ஸில் 743 பந்துகளில் 311 ரன்கள் அடித்தார் சிம்ப்சன். 1964ல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 656 ரன்கள், இங்கிலாந்து 611 ரன்கள் என எடுக்க மூன்றாவது இன்னிங்ஸில் வெறும் 2 ஒவர்கள் வீசப்பட்டு ட்ராவில் முடிந்தது ஆட்டம். இதுதான் அவரது முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஞ்சி டெஸ்ட் மூலம் முதல்முறையாக 500 பந்துகளுக்கு மேல் பேட்டிங் செய்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் புஜாரா. முன்பு 495 பந்துகள் ஆட்டமிழக்காமல் இருந்தார் டிராவிட். இந்த நீளமான இன்னிங்ஸ் லிஸ்டில் 30வது ரேங்க்கில் உள்ளார் புஜாரா.

நீளமான இன்னிங்ஸ்(நிமிடங்கள்):

1.ஹனிஃப் முஹம்மத்(பாகிஸ்தான்)

ஹனிஃப் முஹம்மத்

1958ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 970 நிமிடங்கள் பேட்டிங் செய்து 337 ரன்கள் எடுத்தார் முஹம்மத். முதல் இன்னிங்ஸில் 579 ரன்கள் எடுத்தது மேற்கிந்திய தீவுகள் அணி, பின் ஆடிய பாகிஸ்தான், 106 ரன்களுக்கு சுருண்டது. இன்னிங்ஸ் தோல்வி உறுதி என்ற நிலையில் ஆடிய, பாகிஸ்தான் அணியை காப்பாற்றியது இவரது இன்னிங்ஸ் தான். 6 நாட்கள் நடந்தும்  டிராவான இப்போட்டி  இன்றும் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

2.கேரி  கிறிஸ்டன் (தென்னாபிரிக்கா)

கேரி  கிறிஸ்டன்

1999ல் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டி தொடரின் 3வது டெஸ்ட் போட்டி.  இரண்டாவது இன்னிங்ஸில் சவால்  மிகுந்த ஆடுகளத்தில் 275 ரன்கள் எடுக்க 878 நிமிடங்கள் களத்தில் இருந்தார் கிறிஸ்டன். அதாவது 14 மணி நேரம் 48 நிமிடங்கள்!   சொல்லப்போனால் ஃபாலோ ஆனில் இருந்த ஆணியை மீட்டு டிராவில் போட்டியை முடித்தது இவரது ஆட்டம் தான். 210 ரன் பின்னடைவில் இருந்த அணி 572/7 என்ற ஸ்கோரில் ஆட்டத்தை முடித்தனர். கடைசி நாளுக்கு முன் வெறும் 41 ரன் முன்னிலையே இருந்ததால் கடைசி நாள் வரை இங்கிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் 33 ரன்களில் இருந்தபோது நோ பாலில் கேட்ச் ஆகி தப்பினார். அதிக பந்துகள் பிடித்த வீரர்கள் பட்டியலிலும் இவர் 642 பந்துகள் பிடித்து 5வது இடத்தில இருக்கிறார்.

3.அலைஸ்டர் குக்(இங்கிலாந்து)

இந்த லிஸ்ட்லேயே மிக சமீபத்தில் நடந்த போட்டி இதுவாக தான் இருக்கும். 2015ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 523 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஆடிய   இங்கிலாந்து அணியில் 836 நிமிடங்கள் களத்தில் இருந்து 263 ரன்கள் அடித்தார் குக். அணி 598 ரன்கள் எடுத்தது. அடுத்த இன்னிங்ஸில் பாகிஸ்தான் 173 ரன்களுக்கு சுருண்டது. கடைசி 11 ஓவர்களில் 99 ரன்கள் எடுக்கவேண்டிய  சூழலில் 74 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால்  டிராவில் ஆட்டம் முடிந்தது. மிக சுவாரஸ்யமாக சென்ற இப்போட்டியில் கூடுதலாக 3,4 ஓவர்கள் கிடைந்திருந்தால் இங்கிலாந்து வெற்றி கூட பெற்றிருக்கலாம்.

அதிக நேரம் பேட்டிங் பிடித்த இந்தியர் ராகுல் டிராவிட் தான். 740 நிமிடங்கள் பேட்டிங் செய்து 270 ரன்கள் எடுத்திருந்தார் டிராவிட். பாகிஸ்தானுக்கு எதிரான இப்போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்தியா. தற்போது புஜாரா 668 நிமிடங்கள் பேட்டிங் பிடித்து அசத்தியுள்ளார்.

இப்படி நீளமான இன்னிங்ஸ் பல டிராவிலேயே முடிந்துள்ளது. அதேபோல் தான் ராஞ்சி டெஸ்டும் முடிந்துள்ளது. என்னதான் இருந்தாலும் இந்த டி20 யுகத்தில் இதைப் போன்ற நீளமான இன்னிங்ஸ்களை பார்ப்பது அரிதாகியே வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கிய அம்சமே அதுதானே...!

-ம.காசி விஸ்வநாதன்.

(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close