Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விசா தாமதம்... உலக ரிலே தொடரை மிஸ் செய்தது இந்தியா! எப்போது திருந்தும் இந்திய தடகள சங்கம்?

‘நாங்கள் எவ்வளவோ முயற்சித்தோம். விசா கிடைக்கவில்லை. வேர்ல்ட் ரிலே தொடரை மிஸ் செய்தது ஒன்றும் பெரிய பிரச்னை இல்லை. அடுத்த ஆண்டு எப்படியும் அதில் பங்கேற்க முயற்சி செய்வோம்’ என்றார் அடிலே சுமரிவாலா. பொறுப்பே இல்லாமல் பதில் சொல்லும் அவர்தான் இந்திய தடகள சங்கத்தின் தலைவர். 

தடகள சங்கம், தடகள வீராங்கனைகள்

அமெரிக்காவில் ஒரு கான்ஃப்ரன்ஸ். உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டில் இருந்தும் தடகள சங்கத்தின் தலைவர் பங்கேற்க வேண்டும் என்றால், இப்படித்தான் விசா எடுக்காமல், அந்த கான்ஃப்ரன்ஸை ஸ்கிப் செய்வாரா சுமரிவாலா? கான்ஃப்ரன்ஸ் தொடங்குவதற்கு நான்கு நாள்களுக்கு முன்புதான் விசா எடுப்பாரா? இவர்கள் ஒருபோதும் திருந்தப்போவதே இல்லை. அதுசரி... ஒலிம்பிக், காமன்வெல்த் போன்ற பெரிய போட்டிகளுக்கே, வீரர்களையும் அவர்கள் உடமைகளையும் உரிய நேரத்தில் கொண்டு சேர்க்காதவர்கள்தானே இவர்கள். 

உலக ரிலே தடகளப் போட்டி பஹாமாஸ் தீவில் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் ஆறு வீரர்கள், ஆறு வீராங்கனைகள், இரண்டு பயிற்சியாளர்கள் உள்பட 15 பேர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், புதன்கிழமை வரை வீரர்கள் பஹாமாஸ் செல்வது உறுதியில்லாமல் இருந்தது. காரணம், அவர்களுக்கு விசா கிடைக்கவில்லை. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை அணுகி விசா பெறுவதில், இந்திய தடகளம் தாமதம் செய்தது. விசா கிடைக்காத தகவலை வியாழக்கிழமைதான் வீரர்களிடம் தெரிவித்தது தடகள சங்கம். ‘‘சில விஷயங்கள் நடப்பது நம் கையில் இல்லை. அதற்காக இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமும் இல்லை’’ என்கிறார் சுமரிவாலா. 

முதன்முறையாக உலக ரிலே தொடரில் பங்கேற்க இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் இருக்கின்றனர் வீரர்கள். ‘‘முதன்முறையாக இந்தத் தொடரில் பங்கேற்பதை நினைத்து உற்சாகமாக இருந்தோம். விசா நடைமுறைகள் குறித்து எங்களுக்கு தெளிவான விளக்கம் தரவில்லை. அமெரிக்க தூதரகத்துக்கே நாங்கள் கடந்த சனிக்கிழமைதான் சென்றோம். அதுவே லேட். அதற்கு முந்தைய நாள் முழுவதும் பயிற்சியில் ஈடுபட்டோம். கடைசியில் இப்போது போக முடியாது என கைவிரித்து விட்டனர். உங்களுக்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம். இந்த ஏமாற்றம் எங்களுக்குப் பழகி விட்டது. இந்திய தடகள சங்கம் இப்படித்தான். இது இன்னுமொரு எபிசோட். அவ்வளவே’’ என்றார் ஒரு வீரர் விரக்தியுடன்.

அமெரிக்கா அருகே இருக்கும் தீவில் சனிக்கிழமை ஒரு டோர்னமென்ட். அதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான், விசா பெறுவதற்கான வேலைகளைப் பார்க்கின்றனர். நினைத்ததும் வாங்கிவிட விசா என்ன அரிசி, பருப்பா? அதுவும்  கேட்ட உடனே கொடுத்து விட அமெரிக்கா என்ன மளிகைக்கடை அண்ணாச்சியா? இதுதான் தடகள சங்கம். தடகள சங்கம் மட்டுமல்ல மற்ற விளையாட்டு அமைப்புகளும் இப்படித்தான். உலக ரிலே தொடரையே ஒரு போட்டியாக கருதாத ஒருவர்தான், தடகள சங்கத்தின் தலைவர். மற்ற விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகளும் அப்படியே.

அடுத்ததாக, ஏப்ரல் 24 முதல் 30 வரை சீனாவில் உள்ள நகரங்களில் மூன்று கட்டங்களாக ஏசியன் கிராண்ட் ப்ரீக்ஸ் தொடர் நடக்க உள்ளது. இதில்  400 மீ ஓட்டத்தில் தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான முகமது அனாஸ், ஏசியன் கேம்ஸில் 400 மீ ஓட்டத்தில் வெண்கலம் வென்ற பூவம்மா இருவரும் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை. ஒருவேளை இவர்கள் இருவரும் சீனா செல்லவில்லை எனில், தொடர் ஓட்டம் முதல் பல போட்டிகளில் இந்தியா பதக்க வாய்ப்பை நழுவ விடும்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close