Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

IPL தெரியும்.. தமிழகத்தின் YSL போட்டி பற்றி தெரியுமா? #YSL

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்... தமிழ்நாட்டில் நடந்த YSL போட்டிகளைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் `யூத் ஸ்போர்ட்ஸ் லீக்’. விளையாட்டில் ஆர்வமுள்ள திறமையாளர்களை தமிழ்நாடு முழுக்கக் கண்டறிந்து, முறையான பயிற்சிகள் கொடுத்து லீக் போட்டியை நடத்துகிறார்கள். கடந்த வருடப்  போட்டியில் கிரிக்கெட் மட்டும் நடத்தியவர்கள், இந்த வருடம் கபடி, நீச்சல் போட்டிகளையும் சேர்த்து நடத்துகிறார்கள்.

YSL

இந்த YSL  என்ற புது ஐடியாவை, தமிழகத்துக்குக் கொண்டுவந்தது ஞானவேல் என்கிற விளையாட்டுப் பயிற்சியாளர்தான். இதை எடுத்து நடத்தி விரிவுப்படுத்தியது ஆடிட்டர் ஏ.எஸ்.குமார். தற்போது காந்த் என்பவரும் உடனிருந்து இந்தத் திட்டப்பணிகளைக் கவனித்துவருகிறார். மூவரும் இந்த ஒய்எஸ்எல் திட்டத்தின் இயக்குநர்கள்.

 

“என்னால் முடிந்த அளவுக்குப் பலருக்கும் உதவிசெய்கிறேன். நம் கிராமங்களில் திறமையான பல இளைஞர்கள்  இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குப் போதிய வாய்ப்புகளோ, வசதிகளோ கிடைப்பதில்லை. `அவர்களைக் கண்டுபிடித்து, அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான களத்தை அமைத்துத் தரவேண்டும்’ என, ஞானவேல் என்னிடம் கூறியிருந்தார். இந்த யோசனை மிகவும் புதிதாக இருந்தது. சிரமங்களைப் பார்க்காமல் நாங்கள் 2010-ம் ஆண்டிலேயே இந்தத் திட்டத்துக்கு அஸ்திவாரம் போட்டுவிட்டோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளின் பட்டியலைத் தொகுத்து, ஒரு டேட்டாபேஸை உருவாக்கினோம். விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களைக் கண்டுபிடிக்க, பல நடைமுறைச் சிக்கல்களும் இருந்தன. அவற்றையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிசெய்தோம். இங்கே பல விளையாட்டுகள் இருந்தாலும், கிரிக்கெட் மீதுதான் பலருக்கும்  ஆர்வம் இருக்கிறது. அதனால், முதலில் கிரிக்கெட் போட்டியை நடத்துவது என முடிவுசெய்தோம். ஐந்து வருட உழைப்பின் பலனாக, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கிரிக்கெட் போட்டியை நடத்தினோம். நாங்கள் நினைத்ததைவிடப் பெரிய ஹிட் ஆனது. நல்ல கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது” என உற்சாகமாகச் சொல்கிறார் ஆடிட்டர் ஏ.எஸ்.குமார்.

 

ஒய்எஸ்எல்


 ஞானவேல் அதைத் தொடர்கிறார். “முதலில் கிரிக்கெட் போட்டி நடத்துவது என முடிவுசெய்ததும், தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நிர்வாகியை நியமித்தோம். `ஒவ்வொரு கல்லூரிக்கும் கிராமத்துக்கும் சென்று போட்டிகள் நடத்துகிறோம்’ என அறிவித்தோம். போட்டியில் கலந்துகொள்ள வரும் இளைஞர்களுக்கு, முக்கியமான தகுதிகள் இரண்டு. விளையாட்டில் ஆர்வமும் திறமையும் இருக்க வேண்டும்.  18 வயதிலிருந்து 25 வயதுக்கு உள்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இப்படித் தமிழ்நாடு முழுக்க கிரிக்கெட்டில் ஆர்வம்கொண்ட 6,000 இளைஞர்கள், நாங்கள் நடத்திய போட்டிகளில் கலந்துகொண்டனர். அவர்களில் சிறந்த விளையாட்டு வீரர்களாக 120 பேரைத் தேர்வுசெய்தோம். இவர்கள் எவரும் முறையான கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிப் பயிற்சிபெற்றவர்கள் கிடையாது. முறையான பேட்டும்  பந்தும்கூட இவர்களிடம் இல்லை. 

 

ஒய்எஸ்எல்

 

அடுத்தகட்டமாக அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்க நினைத்தோம். தஞ்சாவூரில் ஒரு மாதமும், சென்னையில் 40 நாள்களும்  தங்கவைத்து சர்வதேசத் தரத்தில் பயிற்சி வழங்கினோம். இதற்கான முழு செலவையும் நாங்களே ஏற்றுக்கொண்டோம். பயிற்சி வழங்கியதும், அவர்களை ஆறு அணிகளாகப் பிரித்தோம். ஏ.எஸ்.குமார் சார் மூலம், ஆறு பெரிய கம்பெனிகள் இந்த ஆறு அணிகளையும் வாங்கினார்கள். அதன்பிறகு ஐ.பி.எல் எப்படி நடக்குமோ... அதேபோல இந்த ஒய்எஸ்எல் போட்டியை நடத்தினோம். அந்தப் போட்டியில் ‘மாம்பலம் அய்யர்ஸ்’ என்ற அணி இறுதியில் வென்றது. அந்த அணியில் இருந்த இரண்டு பேர், தற்போது வெளிநாடு சென்று விளையாடுகிறார்கள். பலருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். அதற்கு முழு காரணம் ஏ.எஸ்.குமார் சார்தான்” என்கிறார் ஞானவேல்.

இன்னோர் இயக்குநரான ஸ்ரீகாந்த் , “இந்த ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை கிரிக்கெட் போட்டிகளுடன் நீச்சல், கபடி, வாலிபால், ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். மக்கள்தொகை குறைவாக உள்ள நாடுகளில் எல்லாம் விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பிடிக்கிறார்கள். ஆனால், கோடிக்கணக்கான இளைஞர்கள்கொண்ட நம் நாடு, விளையாட்டில் 8-வது இடத்தில் உள்ளது. விரைவில் முதல் இடத்துக்குக் கொண்டுவர இதுபோல இளைஞர்களைக் கண்டறிந்தால்தான் முடியும்” என நம்பிக்கையாகச் சொல்கிறார். 

ஏ.எஸ்.குமார், ஞானவேல், ஸ்ரீகாந்த் மூவர் முகங்களிலும் வெற்றியின் பெருமிதம் ஜொலிக்கிறது.

-

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close