Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விராட் கோலி பரிசளித்த ஜெர்சி.. நினைவுகளைப் பகிர்ந்த சாகித் அஃப்ரிடி!

விளையாட்டு வீரர்களில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவராலும் விரும்பப்படும் சிலர் இருப்பார்கள். டிவில்லியர்ஸ், பூஃபான், உசேன் போல்ட், செரினா, அஃப்ரிடி போன்றோர் அந்த வரிசையில் வி.ஐ.பி-கள். கிரிக்கெட் களத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரும் புதிருமாக இருந்தாலும் அதையும் தாண்டி இந்திய வீரர்களுடன் நட்பு பாராட்டியவர் சாகித் அஃப்ரிடி.

கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற சாகித் அஃப்ரிடிக்கு, இந்திய கேப்டன் விராட் கோலி ஜெர்சி ஒன்றை நினைவுப்பரிசாக அனுப்பிவைத்தார். விராட் கோலியின் 18-ம் எண் ஜெர்சியில், அனைத்து இந்திய வீரர்களும் கையொப்பமிட்டிருந்தனர். ஜெர்சியைப் பெற்றுக்கொண்ட அஃப்ரிடி, ட்விட்டரில் நன்றியும் தெரிவித்திருந்தார். 

இந்திய கேப்டன் விராட் கோலியுடன் அப்ரிடி

தற்போது 37 வயதான அஃப்ரிடி 21 ஆண்டுகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் பிரகாசித்தவர். டெஸ்ட், ஒருநாள்,  கடைசியாக டி20 போட்டிக்கும் விடைகொடுத்தார். சர்வதேசக் களத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, இந்திய வீரர்களுடன் தான் கொண்டிருந்த நட்புறவு குறித்து அஃப்ரிடி கட்டுரை எழுதியுள்ளார். அதில், `இந்திய வீரர்களில் கௌதம் கம்பீர்தான் தைரியமானவர்' என சாகித் அஃப்ரிடி குறிப்பிட்டுள்ளார். '2007-ம் ஆண்டு கான்பூரில் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் இருவரும் மைதானத்தில் கண்டபடி திட்டி சண்டைப் போட்டுக்கொண்டோம். ஒரு முறை இரு முறை அல்ல; பல முறை கெளதம் கம்பீருடன் மோதியிருக்கிறேன். எங்களது சண்டை மீடியாக்களுக்கும் தீனி போட்டிருக்கின்றன. அதேவேளையில், இதுவும் விளையாட்டின் ஒரு பகுதி என்றே கருதவேண்டியுள்ளது. கௌதம் கம்பீருக்கு குட்லக்' என அஃப்ரிடி குறிப்பிட்டுள்ளார். 

இந்திய வீரர்களில் ஹர்பஜன், யுவராஜ், ஜாகீர் கான் ஆகியோருடன் நல்ல நட்பு இருந்ததாக அஃப்ரிடி தெரிவித்துள்ளார். `இந்திய அணி பாகிஸ்தானுக்கோ அல்லது நாங்கள் அங்கே வந்தால் மிகுந்த உற்சாகம்கொள்வோம். இந்தியாவுக்கு வந்தால் எனக்கு வேறு நாட்டில் இருப்பது போன்ற உணர்வே எழாது. பெரும்பாலான நேரங்களில் நாங்கள் இணைந்தே வெளியே செல்வோம். இவர்களில் யார் வீட்டுக்காகவது நான் போவேன்... சாப்பிடுவேன். இவர்கள் அனைவரும் என்னிடம் உரிமையுடன் பழகியவர்கள். திருமணம், குழந்தைகள் என ஆகிவிட்ட காரணத்தால் அதிகம் சந்தித்துக்கொள்ள முடியவில்லை. எப்போதாவது நாங்கள் சந்தித்துக்கொள்ளும்போது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளத் தவறுவதில்லை. எங்களிடையே அத்தகைய அன்பும் நட்பும் உண்டு' எனக் கூறியுள்ளார். 

இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் சாகித்  அஃப்ரிடி தனது கட்டுரையில் புகழாரம் சூட்டியுள்ளார். `விராட் கோலி எனது மரியாதைக்குரியவர். சிறந்த பேட்ஸ்மேன். அவரது ஃபிட்டான உடலுக்குள் பரிசுத்தமான இதயம் இருக்கிறது. கொல்கத்தாவில் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டி முடிந்ததும்  என்னிடம் வந்த விராட் கோலி, இந்திய ஜெர்சியைப் பரிசளித்தார். அந்த ஜெர்சியைப் பார்க்கும்போதெல்லாம் கொல்கத்தா போட்டியும் இந்தியாவும்தான் நினைவுக்கு வருகின்றன' என்று விராட் கோலியைப் புகழ்ந்துள்ளார். 

அப்ரிடிக்கு விராட் வழங்கிய ஜெர்சி

இந்திய வீரர்களுக்கு தான் அளித்த விருந்தில் நடந்த கூத்து குறித்தும் சாகித் அஃப்ரிடி கேலியாகக் குறிப்பிட்டுள்ளார். `இந்திய அணி ஒருமுறை பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் வந்திருந்தது. எனது இந்திய நண்பர்களுக்கு எனது கராச்சி வீட்டில் விருந்தளிக்க விரும்பினேன். எல்லோருக்கும் அழைப்பும் விடுத்திருந்தேன். ஒன்றை மட்டும் மறந்துவிட்டேன். யார் யாருக்கு என்ன வகையான  உணவு பிடிக்கும் என்பது பற்றி நான் யோசிக்கவே இல்லை. வழக்கமாக நமது நாட்டுக்கு யாராவது வந்தால், நம் நாட்டின் பிரசித்திப்பெற்ற உணவு வகைகளைத்தானே பரிமாறுவோம். அதே நினைப்பில் வீட்டில், பலவகை உணவுகளைத் தயாரித்து வைத்திருந்தேன். எல்லாமே மட்டன் உணவுகள். 

வீட்டில் மெழுகுவத்தி வெளிச்சத்தில் உணவு பரிமாறத் தயாரானேன். இந்திய வீரர்களும் விருந்து உண்ணத் தயாரானார்கள். மேஜைகளில் உணவு பரிமாறப்பட்டபோது, ஒவ்வொருவரும் 'திருதிரு'வென முழித்தார்கள். எனக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. ஏதோ தவறு நடந்துள்ளது என  மனம் சொன்னது. அப்போதுதான் உணர்ந்தேன்...' இந்திய வீரர்களில் சிலர் வெஜிடேரியனும் இருப்பார்களே ' என்று. தலையில் அடித்துக்கொண்டேன். உடனே வெஜ் உணவு வகைகளைத் தயாரிக்க ஏற்பாடு செய்தேன். கொஞ்சம் பருப்பும் காய்கறி பொரியல்களும் அவசரம் அவசரமாகத் தயாரித்து விருந்தை ஓரளவுக்கு மனநிறைவாக நிறைவுசெய்தேன். பிற்காலத்தில், இந்திய வீரர்கள் என்னிடம் இந்த விஷயத்தைச் சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள்.

துரதிர்ஷ்டவசமான இந்தியா- பாகிஸ்தான் நாடுகளின் உறவு சீர்குலைந்து போய்விட்டது. இதனால், எனது நண்பர்களை முன்புபோல் சந்திக்க முடியவில்லை.  இந்திய நண்பர்களையும் அவர்களின் நட்பையும் இழந்தது, எனக்குள் வெறுமையை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோன்ற உணர்வுதான் அவர்களுக்கும் இருக்கும் என்றே நினைக்கிறேன். வருங்காலத்திலாவது இரு நாடுகளின் உறவு சீரடையும். எனது இந்திய நண்பர்களைச் சந்திப்பேன். பழைய நினைவுகளில் மூழ்கிக் களிப்போம் என நம்புகிறேன்' என தன் ஆதங்கங்களை அழகு வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளார் சாகித் அஃப்ரிடி.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close