Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெங்கால் எக்ஸ்பிரஸ் இப்போ நம்பர் -1... யார் இந்த ஜூலான் கோஸ்வாமி?

தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, இந்தியா, அயர்லாந்து ஆகிய 4 நாடுகளின் மகளிர் அணிகள் பங்குபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடர், தென் ஆப்ரிக்காவில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில், தென்ஆப்ரிக்கா - இந்தியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், 39.3 ஓவர்களில் வெறும் 119 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. தென் ஆப்ரிக்க அணியில் ஆறு பேர் ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் ஜூலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 41.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் வெற்றியை விட, ஜூலான் கோஸ்வாமியின் சாதனைதான் நேற்றைய மேட்ச்சின் ஹைலைட். ஆம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற பெயர் பெற்றுள்ளார் ஜூலான் கோஸ்வாமி.  கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக, 2 மாதம் போட்டிகளில் விலகியிருந்த அவர், தனது ஃபார்மை மீட்டுள்ளார்.

ஜூலான் கோஸ்வாமி

இப்போட்டியில் 7.3 ஓவர்கள் வீசிய ஜூலான், 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம். மகளிருக்கான சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையை தனதாக்கினார். 34 வயதான இவர், 153 ஒருநாள் போட்டியில் விளையாடி மொத்தம் 181 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார் (சராசரி: 21.76 - எக்கானமி - 3.18). இதன் காரணமாக, 109 ஒருநாள் போட்டியில் 180 விக்கெட்டுகளை வீழ்த்தி (சராசரி: 16.79 - எக்கானமி - 3.01), அதிக விக்கெட்களை எடுத்து முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேத்ரின் பிட்ஸ்பாட்ரிக், தற்போது 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மகளிர் கிரிக்கெட்டில், அதிக விக்கெட்களை வீழ்த்திய டாப்-5 வீராங்களைகளின் பட்டியலில் ஜூலான் கோஸ்வாமியுடன், மற்றொரு இந்திய வீராங்கனையான நீத்து டேவிட்டும் இடம்பெற்றுள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், 97 போட்டிகளில் 141 விக்கெட்களுடன் (சராசரி: 16.34 - எக்கானமி - 2.82) 4-வது இடத்தில் உள்ளார். 

ஜூலான் கோஸ்வாமி

கொல்கத்தாவில் உள்ள சாக்தாஹாவில், நவம்பர் 25, 1982 அன்று பிறந்தார் ஜூலான் கோஸ்வாமி. தனது 15-வது வயதில், அதாவது 1997-ல், கொல்கத்தாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்  போட்டிதான், அவரது கிரிக்கெட் மீதான ஆர்வத்துக்கு விதை! இதையடுத்து முறையான கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடத்துவங்கினார். இவரின் பயிற்சியாளர், மிகக் கடுமையானவர்; எந்தளவுக்கு என்றால்... பயிற்சிக்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும், வந்த அதே ரயிலிலேயே (சாக்தாஹா - ஹவுரா) மீண்டும் அவரை வீட்டுக்கு ஏற்றி விடும் அளவுக்குக் கறாரானவர். அடுத்த 5 வருடங்களில் கடும் உழைப்பால், அதாவது 2002-ல், லக்னோவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஜஸ்ட் 20 வயதில் அறிமுகமான இவர், ஐசிசி வழங்கும் ''சிறந்த வீராங்களை'' விருதை, கடந்த 2007-ல் பெற்றுள்ளார். (டிராவிட் - 2004, சச்சின் - 2010, அஷ்வின் - 2016) ஆகியோர், ஐசிசியின் சிறந்த வீரர் விருதைப் பெற்ற மற்ற இந்திய வீரர்கள்.

ஜூலான் கோஸ்வாமி

வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஜூலான், மகளிர் கிரிக்கெட் உலகில் அதிகவேகத்தில் பந்துவீசக்கூடிய ஸ்ட்ரைக் பவுலர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஒரே போட்டியில் 5 விக்கெட்கள் என்ற சாதனையை, இவர் இருமுறை நிகழ்த்தியுள்ளார். மேலும் ஒரு போட்டியில், 31 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 6 விக்கெட்களைக் கைப்பற்றியதே, இவரது சிறந்த பந்துவீச்சாக இருக்கிறது. இவரது திறமையைப் பாராட்டி, அர்ஜுனா விருது (2010) மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை (2012) வழங்கி, ஜுலான் கோஸ்வாமியைக் கவுரவித்துள்ளது மத்திய அரசு. அதேபோல, வலதுகை பேட்ஸ்மேனான இவர், 153 போட்டிகளில் 919 ரன்களை எடுத்திருக்கிறார். 2006-2007 சீஸனில், இந்திய மகளிர் அணியின் கேப்டனாக இருந்த ஜூலான் கோஸ்வாமி, இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இந்தியாவுக்கு வென்று தந்திருக்கிறார்! அத்தொடரில் மொத்தம் 15 விக்கெட்களை வீழ்த்திய அவர், ஒரு டெஸ்ட்டிலேயே 10 விக்கெட்களை எடுத்திருந்தார்.

இந்திய மகளீர் அணி

மேலும், இங்கிலாந்துக்கு எதிராக, எந்த வகையான போட்டியானாலும் (ODI, T20, டெஸ்ட்), அதிக விக்கெட்டுகளை (53 போட்டிகளில் 92 விக்கெட்) வீழ்த்தியுள்ளார். கிரிக்கெட் வீராங்களைகளுக்கான ரேங்கிங்கில், தற்போது 3-வது இடத்தில் இருக்கும் இவர், பலமுறை முதலிடத்திலும் இருந்துள்ளார். இந்திய மகளிர் அணிக்கு, பேட்டிங்கில் மிதாலி ராஜ் என்றால், பவுலிங்கில் ஜுலான் கோஸ்வாமிதான் நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர்கள். ''பாபுல்'' என்றும், ''பெங்கால் எக்ஸ்பிரஸ்'' என்றும் கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் ஜூலான் கோஸ்வாமி, சர்வதேச கிரிக்கெட்டில் 274 விக்கெட்களை எடுத்துள்ளார். சிறப்பான லைன் மற்றும் லெந்த்தில் பந்துவீசச்கூடிய இவர், இதனாலேயே ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத்துடன் ஒப்பிடப்படுகிறார். ஒருதினப் போட்டியில், ஜூலான் கோஸ்வாமியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 181-வது விக்கெட்டாக வீழ்ந்தவர், தென் ஆஃப்ரிக்காவின் ரைசிபி டொசாக்கே. கடந்த 15 ஆண்டுகளில், தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாறிமாறி பயிற்சியில் ஈடுபடும் இவர், மதிய உணவுக்கு ஒதுக்குவது அரை மணி நேரம் மட்டுமே. மீதி நேரத்தில் உடற்பயிற்சி - பவுலிங் பயிற்சி, ஜிம், ஃபிட்னஸ், பிஸியோதெரபி என பம்பரமாக சுழன்றுகொண்டே இருப்பார். வயது ஆக, ஆக கிரிக்கெட் மீதான மோகம் / வேகம் குறைந்தபாடில்லை என்றே சொல்லலாம்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close