Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முறையாக பணிக்கு வரவில்லை... இந்திய கால்பந்து வீரர் வினீத் டிஸ்மிஸ்!

ணிக்கு சரியாக வரைவில்லையென இந்திய கால்பந்து அணியின் நடுக்கள வீரர் வினீத் அரசுப் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கால்பந்து வீரர் வினீத்

இந்திய கால்பந்து அணியின் முன்னணி வீரர் சி.கே.வினீத். திருவனந்தபுரத்தில் உள்ள அக்கவுன்டன்ட் ஜெனரல் (ஏ.ஜி) அலுவலகத்தில் விளையாட்டு கோட்டாவின் கீழ் சேர்ந்து பணிபுரிந்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆடிட்டர் பதவியில் உள்ளார். பொதுவாக, விளையாட்டு கோட்டாவில் மத்திய, மாநில அலுவலகங்களில் பணியில் இணையும் வீரர்கள் வேலை பெயரளவுக்குத்தான் பார்ப்பார்கள். பல அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருவார்கள்.

அந்த வகையில் வினீத், இந்தியன் லீக்கில் பெங்களூரு எப்.சி அணிக்காகவும் ஐ.எஸ்.எல் தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். நடப்பு ஐ.எஸ்.எல் தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இறுதிப் போட்டி வரை முன்னேற வினீத்தின் ஆட்டமும் ஒரு காரணம். இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ள வினீத், ஏ.ஜி அலுவலக அணிக்காகவும் விளையாடிவருகிறார். ஆசிய தகுதிச் சுற்று போட்டியில் கிர்கிஸ்தான் அணியுடன் மோதவுள்ள இந்திய அணியிலும்  இடம் பெற்றுள்ளார். 

இந்த நிலையில், வினீத் பணிக்கு ஒழுங்காக வரவில்லை எனக் கூறி, ஏ.ஜி அலுவலகம் அவரை பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளது. வருகைப் பதிவேடு (அட்டென்டன்ஸ்) மிக குறைவாக இருப்பதே வினீத்தின் நீக்கத்துக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த 2012-ம் ஆண்டு விடுமுறை எடுத்த வினீத், லீவு முடிந்த பின்னரும் பணிக்குத் திரும்பவில்லை. இதையடுத்து, ஏ.ஜி அலுவலகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து வினித் கூறுகையில், ''என்னைப் பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஃபைல் டெல்லி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் டெல்லி ஏ.ஜி அலுவலகத்தில் பணிபுரியும் என் நெருங்கிய நண்பர் கூறினார். இப்போது, நான் பணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. நான் 3 ஆண்டுகளுக்கு விடுமுறை வேண்டி விண்ணப்பித்திருந்தேன். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ள அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து விடுமுறைக்கான ஆவணங்களை அளிக்கவில்லை. கடந்த சீசன் முடிந்த பிறகு அலுவலகம் சென்றேன். டெல்லி அலுவலகத்தில் கலந்து ஆலோசித்து விட்டு முடிவு சொல்வதாக தெரிவித்தார்கள். அதற்குள் இப்போது என்னை பணியில் இருந்தே நீக்கியுள்ளனர்.

நான் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பணிக்குச் சேர்ந்தவன். தொழில்முறை கால்பந்து வீரர். அலுவலகத்தில் இருந்து பணி செய்யுமாறு வற்புறுத்துவது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. கால்பந்து விளையாடுவதுதான் எனது முதல் வேலை. அலுவலகப்பணி அதற்கு அப்புறம்தான். இதற்காக நான் கால்பந்து விளையாடுவதை நிறுத்தி விட முடியாது. தொடர்ச்சியான போட்டிகள் இருப்பதால் என்னால் அலுவலகமும் செல்ல முடியுவில்லை. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பணிக்கு எடுத்துவிட்டு, கால்பந்து விளையாடுவதை தடுப்பது எந்த விதத்தில் நியாயம்..?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த சேர்ந்த வினீத்துக்கு தற்போது 28 வயதாகிறது. கால்பந்து வீரர் ஒருவருக்கு அலுவலகத்தில் இருந்து இத்தகைய நெருக்கடி கொடுப்பது விளையாட்டு வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே வேளையில், 'விடுமுறை தொடர்பாக தொடர்ந்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதியதாகவும், வினீத்திடம் இருந்து முறையான பதில் வரவில்லை' எனவும் திருவனந்தபுரம் ஏ.ஜி அலுவலகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close