Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் - அட்டவணை ரெடி!

'மினி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்' என வர்ணிக்கப்படும், சாம்பியன்ஸ் டிராபி ஜூன் 1-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கிறது. ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் எட்டு இடங்களுக்குள் இருக்கும் அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் இந்தப் போட்டித் தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவிருக்கிறது. 

'சாம்பியன்ஸ் டிராபி' கோப்பையின் நடப்பு சாம்பியனான இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ளுமா என்ற ஆர்வத்தில் இந்தப் போட்டித்தொடரை எக்கச்சக்க எதிர்பார்ப்போடு அணுகிக்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு, அடுத்த ஆச்சர்யமும் காத்திருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டித்தொடர் முடிந்த கையோடு, வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி-20 கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் முடிந்த நான்காவது நாள் அதாவது, ஜூன் 23-ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் ஜூலை 9-ஆம் தேதி வரை நடைபெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஜூன் 23, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் முதல் இரண்டு போட்டிகள் 'குயின்ஸ் பார்க் ஓவல்' மைதானத்திலும், ஜூன் 30, ஜூலை 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டி 'சர் விவியன் ரிச்சர்ட்ஸ்' மைதானத்திலும், ஜூலை 6, ஜூலை 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டி 'சபினா பார்க்' மைதானத்திலும் நடைபெறவிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஐசிசி தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கிற காரணத்தினால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறவில்லை. இந்த சோகம் ஒருபக்கம் இருக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 2019-ல் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நேரடியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறவேண்டும் எனில், வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் 'டாப் 7' தரவரிசையில் இடம்பெறவேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பட்டத்தைத் தக்கவைக்கும் முனைப்பு காட்டவேண்டிய அவசியம் இந்தியாவுக்கும், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் தொடரில், இந்தியாவை வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெறவேண்டிய கட்டாயம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இருப்பதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம தீனிதான்! 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close