Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோசத்திலிருந்து மிக மோசம்! சறுக்கும் தெலுங்கு டைட்டன்ஸ். #ProKabaddi #TTvsPP

புரோ கபடி வரலாற்றிலேயே  தொடர்ச்சியாக ஐந்து முறை தோல்வியைச் சந்தித்து, பெரும்பின்னடைவைச் சந்தித்திருக்கிறது தெலுங்கு டைட்டன்ஸ். இத்தனைக்கும் சொந்த ஊரில் நடந்த போட்டிகளில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தின் ஆராவாரத்துக்கு மத்தியில் இத்தனை தோல்விகளைச் சந்தித்திருக்கிறது.  இந்த சீஸனின் அறிமுகப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை வென்றது ராகுல் செளத்ரி தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ். அதன் பிறகு, வரிசையாக ஐந்து தோல்விகள். லேட்டஸ்ட்டாக, பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிராக மண்ணைக் கவ்வியிருக்கிறது. இந்த சீஸனில் முதல்முறையாக நாற்பது புள்ளிகளுக்குமேல் கடந்திருக்கிறது  பாட்னா பைரேட்ஸ். அப்படியானால், தெலுங்கு டைட்டன்ஸ் நேற்றைய தினம் எவ்வளவு மோசமாக மேட்ச்சை விளையாடியிருக்கும் எனத் தெரிகிறதா? 

ராகுல் செளத்ரி, இந்த சீஸனில் தொடர்ந்து நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். ஒரு போட்டியில் புள்ளிகளை அள்ளுபவர், அடுத்த போட்டியிலேயே மண்ணை கவ்வுகிறார். நேற்றைய தினம் முதல் பாதியில் எட்டு முறை ரெய்டுக்குச் சென்ற ராகுல், நான்கு முறை தோற்றார். நேற்றைய ஆட்டத்தில் முதல் பாதியில் கிட்டத்தட்ட ஒன்பது நிமிடம் ராகுல் செளத்ரி வெளியே உட்காரவைக்கப்பட்டார். இரண்டாவது பாதியிலும் முதல் எட்டு நிமிடத்துக்குப் பிறகுதான் வெற்றிகரமான ரெய்டு ஒன்றை நிகழ்த்தினார். 

தெலுங்கு டைட்டன்ஸ்

பாட்னா பைரேட்ஸ் அணியின் கேப்டன்  பர்தீப் நர்வால் நேற்றைய தினம் அட்டகாசமாக தெலுங்கு வீரர்களை வெளியேற்றினார். அவர் ரெய்டுக்குச் சென்றபோதெல்லாம் பாட்னா அணியின் ஸ்கோர் ஆரோக்கியமாக இருந்தது. டைட்டன்ஸ் அணி மீண்டும் பர்தீப் நர்வாலை அடக்க முடியாமல் சிரமப்பட்டது. புரோ கபடி வரலாற்றில் அதிக முறை தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஒரே போட்டியில் பத்து புள்ளிகள் (சூப்பர் 10) எடுத்தவர் என்ற பெருமையைப் (ஐந்து முறை) பெற்றிருக்கிறார்  பர்தீப். நேற்றைய தினம் ஒட்டுமொத்தமாக 12 ரெய்டு  புள்ளிகளை 63.16 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார். 

பாட்னா அணியில் கேப்டன்  பர்தீப்புக்குப் பக்கபலமாக இருந்தார் மோனு கோயத். அவர் முதல்முதலாக நேற்றைய தினம் சூப்பர் 10 சாதனையைச் செய்தார். நேற்றைய தினம் அவரின் ஸ்ட்ரைக் ரேட் (66.67)  பர்தீப்பைவிட அதிகம்.

ரெய்டு மட்டுமல்ல, நேற்றைய தினம் டேக்கிலிலும் ஆதிக்கம் செலுத்தியது  பாட்னா. நேற்றைய தினம்  மூன்று முறை அந்த அணி சூப்பர் டேக்கில் செய்தது. அதில் இரண்டு முறை மாட்டியவர் புரோ கபடியின் தலைசிறந்த வீரர் ராகுல் செளத்ரி. நேற்றைய தினம் போட்டி முடிவில் 43 - 36 என்ற கணக்கில்  டைட்டன்ஸ் அணியை ஊதித்தள்ளியது பாட்னா பைரேட்ஸ். 

தெலுங்கு டைட்டன்ஸ் அணியில்  வீரர்களுக்கு இடையே நல்ல புரிதல் இல்லாததே தோல்விக்குக் காரணம். டிஃபென்ஸில் டைட்டன்ஸ் அணி இன்னமும் முன்னேறவேண்டியது அவசியம். ஒரு வீரர் சிறப்பாக ஆடினால், அதே போட்டியில் இரண்டு வீரர்கள் அணியில் சொதப்புகிறார்கள். இது தெலுங்கு டைட்டன்ஸுக்குப் பெரும்பின்னடைவாக இருக்கிறது. ராகுல் செளத்ரி சிறந்த ரெய்டர். சிறந்த கேப்டனாக வேண்டுமென்றால், அவர் செல்லவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close