Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பார்சிலோனாவுக்கு நெய்மர் குட்பை! மெஸ்ஸியின் நிழல் சுடுகிறதா? #NeymarPSG #NeymarEstParisien #NeymarJr10

கால்பந்து உலகின் இளம் நட்சத்திரம் நெய்மரை நீங்க வாங்கணுமா? அதுக்கு நீங்க பெருசா ஒன்னும் செலவு செய்ய வேண்டியது இல்ல. சுமார் 1,677 கோடி ரூபாய் கொடுத்தா போதும்! ஷாக் ஆயிடலயே? ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆமாங்க, தோராயமா 1,677 கோடி ரூபாய். துல்லியமா சொல்லணும்னா 222 மில்லியன் யூரோக்கள்! அவ்வளவு செலவு செய்து நெய்மாரை பார்சிலோனா அணியிடமிருந்து வாங்கியுள்ளது பிரான்சின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி (PSG).

நெய்மர்
    

கடந்த ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணி 105 மில்லியன் யூரோ கொடுத்து யுவன்டஸ் அணியிலிருந்து பால் போக்பாவை வாங்கியது. அதுவே ஒரு கால்பந்து வீரருக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய தொகை. அதனால் உலகின் காஸ்ட்லி வீரர் என்ற சிறப்பைப் பெற்றார். அப்போது மொத்தக் கால்பந்து உலகமும் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வசை பாடியது. “ஒரு வீரருக்கு இவ்வளவு தொகை செலவு செய்வதா?”, “பணத்தால் கால்பந்து பாழாகிறது”, “கால்பந்தின் இனி எங்கே செல்லப்போகிறது” என்றெல்லாம் புலம்பினர். காரணம் 100 மில்லியன் யூரோவைத் தாண்டி ஒரு டிரான்ஸ்ஃபர் நடந்தது அதுவே முதல் முறை. கால்பந்தின் நடப்பு ஜாம்பவான்கள் கிறிஸ்டோயோனா ரொனால்டோவும், மெஸ்ஸியும் தத்தமது அணிகளுடனான ஒப்பந்த காலத்தை நீட்டித்துக்கொண்டதால், போக்பாவின் அச்சாதனை முறியடிக்கப்பட இனி சில வருடங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அறங்கேறியுள்ளது கால்பந்தின் மாபெரும் வியாபாரம். அதுவும் போக்பாவை விட இரட்டை மடங்கு விலைக்கு. கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தைக்கு இடையில் இவ்வளவு பெரிய தொகை கைமாறுவதை லா லிகா அமைப்பு எதிர்த்தது. இருந்தாலும் பி.எஸ்.ஜி. அணிக்கு 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் நெய்மர்.

யார் இந்த நெய்மர்? எதற்கு இவ்வளவு தொகை?

பிரேசில் – பீலே, ரொனால்டோ, ரொனால்டினோ, ககா, ராபெர்டோ கார்லோஸ் என்று பல ஜாம்பவான்களைக் கால்பந்திற்குக் கொடுத்த தேசம். கால்பந்தின் பிறப்பிடம்! ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உலக அரங்கில் சாதிக்கத் தவறி வருகிறது அவ்வணி. சோதனைகளுக்கு நடுவில், தன் தேசத்தை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டுவர சாம்பா தேசத்தில் பிறந்த ஆபத்வாந்தவன் தான் நெய்மர். இளம் வயதிலேயே உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவன். மெஸ்ஸி, ரொனால்டோ எனும் இரண்டு அரசன்களுக்குப் பிறகு அடுத்து கால்பந்து உலகை ஆளப்போகும் இளவரசன். வெறும் 17 வயதில் தொழில்முறை கால்பந்திற்குள் அடியெடுத்து வைத்த நெய்மர் இதுவரை சான்டோஸ் மற்றும் பார்சிலோனா ஆகிய இரண்டு கிளப்களுக்காக 411 போட்டிகளில் விளையாடி 241 கோல்கள் அடித்துள்ளார். தற்போது வெறும் 25 வயதேயான நெய்மர் பிரேசில் அணிக்காக வெறும் 77 போட்டிகளில் 52 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். டிரிபிளிங்கில் கில்லாடி. எதிரணி வீரர்களை ஏமாற்றுவதில் வல்லவன்.

நெய்மர்

 ஆனாலும், இவ்வளவு தொகை செலுத்தியிருக்க வேண்டுமா? நிச்சயம், இது விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியதே. பி.எஸ்.ஜி என அழைக்கப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி முன்பு ஒரு சாதாரண அணியாகவே விளங்கியது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கத்தார் ஸ்போர்ட்ஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்ட பிறகு பல மில்லியன் டாலர்களைச் செலவு செய்து பல முன்னணி வீரர்களை வாங்கியது. அதன்பிறகு பிரான்ஸின் லீக் 1 தொடரை தொடர்ந்து 4 முறை வென்று அசத்தியது. ஆனாலும், சாம்பியன்ஸ் லீக்கில் அந்த அணியால் பெரிய அளவு சாதிக்க முடியவில்லை.    

ஐரோப்பிய அளவில் சாதிக்க வேண்டுமானால் ஓர் அணிக்கு ‘கோர்’ பலமானதாக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மாறும் வீரர்களை வைத்துக்கொண்டு எதுவும் சாதிக்க முடியாது. தங்கள் அணிக்கு மையமாய் செயல்படும் ஒரு வீரன். அவனைச் சுற்றி இயங்கும் சில வீரர்கள். அவர்களை ஒருங்கிணைக்கும் பயிற்சியாளர் இவையெல்லாம் அவசியம். கடந்த 4 ஆண்டுகளாக பார்சிலோனாவும் ரியல் மாட்ரிட்டும் மட்டுமே சாம்பியன்ஸ் லீக்கை வெல்வதற்குக் காரணம் அதுதான். அத்தொடரை வெல்ல வேண்டுமேயானால் ஒரு ஜீனியஸ் அணியில் இருப்பது அவசியம். மெஸ்ஸியையும் ரொனால்டோவையும் கூட வளைத்துப்போட சிலமுறை அவ்வணி முயற்சித்து தோற்றுப்போனது. அதற்கடுத்த நிலையில் நிற்பது நெய்மர்... அவரையும் இதோ வாங்கியாகிவிட்டது. இன்றைய நிலைமையைப் பொருத்தமட்டில் 222 மில்லியன் யூரோக்கள் என்பது சற்று அதிகமே. ஆனால் கால்பந்துப் புத்தகத்தில் அந்த அணியின் வரலாற்றை இந்த வீரனால் அன்றி வேறு எவராலும் இனி எழுத முடியாது. அந்த வகையில் இது பி.எஸ்.ஜி-க்கு மிகச்சிறந்த முதலீடு.

முடிவுக்கு வரும் MSN 

MSN – கால்பந்து ரசிகர்கள் கடந்த 3 ஆண்டுகளாகக் கொண்டாடிய பெயர். மெஸ்ஸி, சுவாரஸ், நெய்மர் ஆகிய மும்மூர்த்திகளின் இணைதான் MSN. கால்பந்து உலகின் மிக அபாயகரமான இணையாகவும் இவர்கள் விளங்கினார்கள். எதிரணிகளின் தடுப்பை பீரங்கியைப் போல் உடைத்துத் தகர்த்தார்கள். விங்குகளில் மெஸ்ஸியும் நெய்மரும் மாயாஜாலம் காட்ட, ஸ்டிரைக்கராக சுவாரஸ் அதிரடி காட்டினார். இவர்கள் மூவரும் சேர்ந்து விளையாடிய 113 போட்டிகளில் 253 கோல்கள் அடித்துள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்தப் போட்டிகளில் நெய்மர் மட்டுமே 59 கோல்களும் 36 அசிஸ்டுகளும் செய்து அசத்தியுள்ளார்.

நெய்மர், சுவாரஸ், மெஸ்ஸி

நெய்மர் ஏன் மாறினார்?

உலகின் டாப் கால்பந்து கிளப்கள் என்றால் அது ரியல் மாட்ரிட்டும் பார்சிலோனாவும்தான். அந்த அணிகளிலிருந்து எந்த அணிக்குப் போனாலும் ஒரு வீரருக்கு அது பின்னடைவுதான். அப்படியிருக்கையில் ஏன் நெய்மர் பார்சிலோனாவை விட்டுப் போக வேண்டும்? பி.எஸ்.ஜி அணிக்கு 5 ஆண்டு காலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நெய்மர் இந்தக் காலகட்டத்தில் வாங்கவிருக்கும் சம்பளம் மட்டுமே சுமார் 450 மில்லியன் பவுண்டுகள். அதாவது ஓர் ஆண்டுக்கு 90 மில்லியன் பவுண்டுகள். ஒரு மணி நேரத்திற்கு 3,200 பவுண்டுகள். இந்தப் பணம்தான் நெய்மர், பார்சிலோனாவை விட்டுச் செல்லக் காரணம் என்று பார்சிலோனா ரசிகர்கள் குறை கூறுகிறார்கள். இதற்குப் பின்னால் ரியல் மாட்ரிட் அணியின் சதி இருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் நெய்மரின் இந்த முடிவிற்கு அந்த பார்சிலோனா ரசிகர்கள்தான் காரணம்.   

கடந்தாண்டு சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்று. இப்போது சம்பந்தப்பட்டுள்ள அதே பார்சிலோனாவும் பி.எஸ்.ஜியும் நேருக்கு நேர் மோதின. இரண்டு சுற்றுகள் கொண்ட போட்டியின் முதல் சுற்றில் 4-0 எனப் படுதோல்வியைச் சந்தித்தது பார்சிலோனா. அந்தத் தோல்வியிலிருந்து மீள்வது எவ்வளவு கடினம்? ஆனால் மீண்டது. இரண்டாவது சுற்றில் 6-1 எனச் சரித்திர வெற்றி பெற்று சாதனை படைத்தது. அடுத்த நாள் அனைத்து பேப்பர்களிலும் மெஸ்ஸி சூப்பர் மேன் போன்று கையை உயர்த்தியிருக்கும் புகைப்படம் வெளியானது. மொத்த ரசிகர்களும் மெஸ்ஸியைக் கொண்டாடித் தீர்த்தனர்.

Lionel Messi

ஆனால், அந்தப் போட்டியில் பார்சிலோனாவை வெற்றி பெற வைத்தது உண்மையில் நெய்மார்தான். கடைசி 10 நிமிடங்களில் 2 கோல்கள் 1 அசிஸ்டு என மாயாஜாலம் புரிந்து தன் அணியை வெற்றி பெற வைத்தார். ஆனால், ரசிகர்களெல்லாம் மெஸ்ஸியை மட்டுமே கொண்டாடினார்கள். தங்களின் ஒற்றைத் தலைவனை மட்டுமே கொண்டாடுவது ரசிகர்களின் வழக்கம்தானே. நாம் கூட உலகக்கோப்பை வெற்றியில் யுவராஜ், கம்பீரையெல்லாம் மறந்து தோனியை மட்டும்தானே கொண்டாடினோம்.

அப்படித்தான். அப்படி மெஸ்ஸியின் நிழலில்தான் மறைந்து விடக்கூடாது என்பதற்காக நெய்மர் எடுத்த முடிவாகத்தான் இது இருக்கும். காரணம் இன்னும்தான் மெஸ்ஸியுடனேயே விளையாடி வந்தால் ‛உலகின் சிறந்த கால்பந்து வீரர்’ (Ballon d'or) போன்ற விருதுகளை தான் வெல்ல முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். ஆனாலும் இதையெல்லாம் வெளிப்படையாச் சொல்லாமல் “பி.எஸ்.ஜி அணியின் எதிர்காலத்திட்டம் என்னைக் கவர்ந்ததால் அங்கு செல்கிறேன்” என்று கூறிவிட்டு மெஸ்ஸிக்கும் நட்போடு குட்பை சொல்லி விடைபெற்றிருக்கிறார் நெய்மர்.

யாருக்கு லாபம்?

நெய்மர்

ஏற்கெனவே சொல்லியது போல் பி.எஸ்.ஜி அணிக்கு இந்த டிரான்ஸ்ஃபரால் பெரிய லாபம். உலக அரங்கில் மாபெரும் சக்தியை அவர்கள் தங்களை நிலைநாட்டிக்கொள்ள முடியும். அடுத்து இதனால் லாபம் பெறப்போவது ரியல் மாட்ரிட் அணி. தங்களின் மாபெரும் வைரியின் ஒரு கால் உடைந்திருக்கிறது என்றால் அவர்களுக்கு ஆனந்தம்தானே? இதனால் இனி எல் கிளாசிகோ போட்டிகளில் மாட்ரிடின் கரம் ஓங்கலாம்!  ரியல் மாட்ரிட் ரசிகர்கள் நெய்மரின் இந்த மூவை நியூ இயர் போல் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் கடந்த இரண்டு வாரங்களாக பி.எஸ்.ஜி ரசிகர்களை விட இந்த டிரான்ஸ்ஃபரை அதிகம் எதிர்பார்த்தவர்கள் அவர்களாகத்தான் இருக்கும். பெரிய லாபம் அடையப் போவது நெய்மர்தான். முன்பு கூறியது போல் மெஸ்ஸியின் நிழலிருந்து விடுபட்டு தன் தனித்துவத்தை உலகிற்கு அவர் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. எனவே இதில் பெரிய லாபம் நெய்மருக்குத்தான்.

யாருக்கு நஷ்டம்?
பார்சிலோனா அணிக்கு இது மிகப்பெரிய இழப்பு. மெஸ்ஸி, சுவாரஸ் போன்றவர்கள் இருந்தாலும் இதுவரை செட்டாகியிருந்த பார்ட்னர்ஷிப் உடைந்திருப்பது அவர்களுக்குச் சற்று சறுக்கலே. அதுவுமில்லாமல் பயிற்சியாளர் வெல்வர்டேவுக்கு இதுதான் முதல் சீசன். அதனால் அணியை அவர் எவ்வாறு மாற்றி வடிவமைக்கப் போகிறார் என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். டிபாலா, கோடின்ஹோ, ஹசார்டு போன்ற வீரர்களை நெய்மருக்கு மாற்றாக வாங்க அவர்கள் முயல்கிறார்கள். அடுத்து இதனால் நஷ்டம் அடையப் போவது மெஸ்ஸியும் ரொனால்டோவும். இவர்களுக்கு என்ன நஷ்டம் என்று ஷாக் ஆக வேண்டாம். கடந்த 10 ஆண்டுகளாக உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை இவர்களே வாங்கி வருகிறார்கள். இவர்களுக்குப் போட்டி தரக்கூடிய தரமான வீரர்களில் பெரும்பாலானோர் இவர்களுடனேயே டீம் மேட்டாக இருந்ததால் இவர்களுக்கு அது உதவியாக இருந்தது. இப்போது நெய்மர் தனியாகப் போயிருப்பது இந்த ரேசில் அவர்களுக்கு நேரடி சேலஞ்சாக அமையும்.

Neymar Jr


ஆக மொத்தம் நெய்மரின் இந்த 222 மில்லியன் யூரோ டிரான்ஸ்ஃபரால் கால்பந்து உலகம் சற்று ஆடித்தான் போயிருக்கிறது. “இனி இதனால் அனைத்து வீரர்களின் விலையும் உயரும். சாதாரண வீரரைக் கூட அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்” என மான்செஸ்டர் யுனைடட் அணியின் மானேஜர் ஜோசே மொரினியோ கூறியிருக்கிறார். அதுவும் உண்மைதான். இதனால் கால்பந்து உலகில் ஒரு பொருளாதார இடி விழும். நெய்மர் சான்டோஸ் அணியிலிருந்து பார்சிலோனாவால் 57 மில்லியன் யூரோவிற்கு பார்சிலோனாவால் வாங்கப்பட்டபோதே அதில் பித்தலாட்டம் நடந்திருப்பதாக விசாரணை நடத்தியது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு. இப்போது 222 மில்லியன் யூரோக்கள். என்னென்ன பூதமெல்லாம் கிளம்பப்போகுதோ?   

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close