Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருவிளக்கு இட்டாரை தெய்வம் அறியும்!

திருவிளக்கில் சக்தி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் உள்ளனர் என்பது ஐதீகம். இதனால் பிரகாசமான தீப ஒளி வெளிச்சத்தில் இருக்கும் எவருக்கும் தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மேலும், திருவிளக்கின் அடியே பிரம்மாவும், மத்திய தண்டு பகுதியில் மஹாவிஷ்ணுவும், தீபம் எரியும் தலைப்பகுதியில் சிவபெருமானும் வசிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எனவே, தீப வழிபாடு நம்முடைய தொன்றுதொட்டே பாரம்பர்ய வழிபாடு. எனவே காலை, மாலை இருவேளையும் தீபம் ஏற்றி வழிபடலாம். பூஜை அறை மட்டுமன்றி வீட்டின் முற்றம், சமையல் அறை, துளசி மாடம், வாசல் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம். மாலையில் வீட்டின் மத்தியில் அதாவது முற்றத்தில் மாக்கோலம் போட்டு செப்பாலான விளக்கில் மஞ்சள் திரி இட்டு, நெய் தீபம் ஏற்றினால் அந்தக் குடும்பம் வறுமை மாறி செல்வ செழிப்பாக மாறுமென்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு நல்ல நேரமாகச் சொல்லப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் அதாவது சூரிய உதயத்துக்கு முன்பும், மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை அதாவது சூரிய அஸ்தமனத்துக்குப் பின்பும்தான். பிரதோஷ நாள்களில் மாலை 4.30 முதல் 6 வரையும் திருவிளக்கு ஏற்றலாம்.

திருவிளக்கு

காலையில் ஏற்றப்படும் விளக்கு அனைத்துக் காரியங்களையும் வெற்றியாக்கித் தரும். மாலையில் விளக்கு ஏற்றுவது சகல ஐஸ்வர்யங்களையும் தரும் என்பதும் நமபிக்கை. தெற்கு திசை தவிர மற்ற மூன்று திசை நோக்கியும் விளக்கை ஏற்றலாம். திருவிளக்கு என்றால் அதில் சேர்க்கப்படும் எண்ணெய் மிக முக்கியப் பொருளாகிறது. தீபமேற்றப் பயன்படுத்தும் எண்ணெய்யைப் பொறுத்து பலன் கிடைக்கும் என்கிறது நமது சாஸ்திரங்கள். கலப்பட எண்ணெய், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், பாமாயில், கெட்டுப்போன எண்ணெய், திறந்தே கிடந்த எண்ணெய் இவற்றால் விளக்கு ஏற்றினால் அது தீமையையே உண்டாக்கும். பசு நெய், விளக்கெண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது இலுப்ப எண்ணெய், புங்க எண்ணெய் போன்றவைகளால் தீபம் ஏற்றினால் பலவித நன்மைகளை அடையலாம். இதனாலே பஞ்ச தீப எண்ணெய் என்று இந்த ஐந்து வகை எண்ணெய்யும் கலந்து கடைகளில் விற்கப்படுகிறது. ஆனால், இதில் கலப்படம் இருக்குமோ, நமது சாஸ்திரப்படி கலவை கலந்து இருக்குமோ என்ற ஐயம் எல்லோருக்கும் எழுவதுண்டு. இதைத் தவிர்க்கவே இங்கு பஞ்ச தீப எண்ணெய்யை உருவாக்கும் முறையைச் சொல்கிறோம். சுத்தமான பசு நெய் 200 மில்லி, நல்ல எண்ணெய் 350 மில்லி, விளக்கு எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் 100 மில்லி, நல்லெண்ணெய் அல்லது இலுப்ப எண்ணெய் 200 மில்லி, புங்க எண்ணெய் 150 மில்லி ஆகியவற்றைக் கலந்து எடுத்தால் ஒரு லிட்டர் பஞ்ச தீப எண்ணெய் உங்களுக்குக் கிடைக்கும். இதைக் கொண்டு விளக்கேற்றினால் உங்கள் பூஜை நிறைவடைவதுடன், நல்ல பலன்களும் கிடைக்கும் என்பது உறுதி. திருவிளக்கிட்டாரை தெய்வம் அறியும் என்பார்கள். முன்னோர்கள் சொன்ன விதத்திலேயே விளக்கிட்டு வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொள்வோம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close