Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வு உத்தரவு..! மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வைத் திணித்து, தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் சமூக நீதிக் கொள்கைக்கும் பேராபத்தை உருவாக்கிய மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக, 24-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வு விவகாரத்தில், தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு வாதிட்டது. இதையடுத்து, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு வலுக்கட்டாயமாக ஒரு 'நீட்' நுழைவுத் தேர்வை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அரசும் திட்டம்போட்டுத் திணித்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை சீர்குலைத்துவிட்டது.

சமூக நீதியைச் சிதைத்திருக்கும் மத்திய - மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். “நீட்” நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்” என்று தமிழக சட்டமன்றத்தில் 1.2.2017 அன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பாமல் பூட்டி வைத்துக்கொண்டு, சர்வாதிகார மனப்பான்மையோடு செயல்பட்டு, தமிழகத்தில் “நீட்” தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்திருக்கிறது. அது மட்டுமன்றி, மாநில சட்டமன்றத்தின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, மத்திய - மாநில உறவுகளையும் கூட்டாட்சித் தத்துவத்தையுமே கேலிப் பொருள் ஆக்கிட முனைந்து செயல்பட்டுவருகிறது.

மாநிலங்களின் கல்வி அதிகாரத்தைப் பறித்துக்கொள்ளும் பா.ஜ.க-வின் இந்த ஆணவப்போக்குக்கு, மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அரசு ஓங்கிக் குரல்கொடுக்காமல், பணிந்து துணைபோகிறது. மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 98 சதவிகித மாணவர்கள் மற்றும் மருத்துவ முதுநிலைப்படிப்பில் சேர விரும்பும் அரசு, மருத்துவர்களின் நலனைக் காற்றில் பறக்கவிட்டு, மத்திய - மாநில அரசுகள் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கை நடத்தியிருப்பதும், வாதிட்டிருப்பதும் வருத்தமளிக்கிறது.

தற்காலிகமாக ஓராண்டு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று மத்திய பா.ஜ.க. அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து, அந்தக் குறைந்தபட்ச விதிவிலக்கும் கிடைக்காத அளவுக்கு, இன்றைக்கு மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன் வைத்திருக்கும் பா.ஜ.க. அரசின் இரட்டை வேடம், தமிழக மக்களைப் பொறுத்தவரை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில், மாநில அ.தி.மு.க அரசின் நிர்வாகத் திறமை படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 

ஆகவே, “நீட்” தேர்வைத் திணித்து, தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும், சமூக நீதிக் கொள்கைக்கும் பேராபத்தை உருவாக்கி, மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்த துரோகத்துக்கு சம பங்குதாரர்களாக இருக்கும் மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து, இந்த மாதம் 24-ம் தேதி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்குபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காலை 10 மணி அளவில் நடைபெறும்.  

மாணவர்களும் - அனைத்துக் கட்சித் தொண்டர்களும் - பொதுமக்களும் பங்கேற்று,  “நீட்” தேர்வில் தமிழகத்தை வஞ்சித்துள்ள மத்திய - மாநில அரசுகளுக்குக் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற வைத்து, தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close