Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும்..!'' - எஸ்.டி.பி.ஐ கட்சி எச்சரிக்கை

எஸ்.டி.பி.ஐ தெகலான் பாகவி

''முத்தலாக் விவகாரத்தைப் பயன்படுத்தி, பொது சிவில் சட்டத்தை புறவாசல் வழியாகக் கொண்டுவர முயற்சிக்கக்கூடாது. அது குழப்பத்தை ஏற்படுத்தும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் மத சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் நீதிமன்றத் தீர்ப்புகள், நாடாளுமன்றத் தலையீடுகள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது'' என்று எஸ்.டி.பி.ஐ கட்சி எச்சரித்துள்ளது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முத்தலாக் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் குறித்து நாடாளுமன்றம் ஆறு மாதத்துக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அதுவரையில் முத்தலாக் முறைக்குத் தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளது. முத்தலாக் விவகாரத்தில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் படி அளித்திருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பானது, தீர்வை நோக்கி நகர்வதற்குப் பதிலாக, குழப்பத்தை ஏற்படுத்தவே வழிவகுக்கும். அந்த உத்தரவு, பா.ஜ.க- வின் கொள்கைத் திட்டமான பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வழிவகுத்துவிடுமோ என்ற அச்சத்தை முஸ்லிம்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஒரே நேரத்தில் மூன்று தடவை தலாக் சொல்லும் முறைக்கு எதிராக முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கடுமையான பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்டுவருவதாக பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்த பின்னரும், அதனை கருத்தில் கொள்ளாமல், 6 மாத காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற உத்தரவிட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல. வழக்கு விசாரணையின்போது 'முஸ்லிம்களின் ஒட்டுமொத்த தலாக் நடைமுறையையே ரத்துசெய்ய வேண்டும்; பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும்' போன்ற மத்திய பா.ஜ.க அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.  மத அடிப்படையிலான தனியார் சட்டங்கள் அரசியல் அமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமை என்பதையும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதிப்படுத்தியிருப்பதையும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. 

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்தது முதல், அரசியல் அமைப்புச் சட்டம் அளித்திருக்கும் மத அடிப்படையிலான தனியார் சட்ட உரிமைகளுக்குத் தடை ஏற்படுத்தி, நாடு முழுவதும் பொதுசிவில் சட்டம் கொண்டுவர முயற்சித்துவருகிறது. அதற்காக முத்தலாக் முறையை வாய்ப்பாகப் பயன்படுத்தி, சர்ச்சைகளை உருவாக்கி, அதற்கான களத்தை அமைக்க முயற்சித்துவருகின்றது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, மோடி அரசு கொண்டுவரத் துடிக்கும் பொது சிவில் சட்டத்துக்கு நல்வாய்ப்பாக அமைந்துவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

முத்தலாக் விவகாரத்தில், முஸ்லிம் தனியார் சட்டவாரியம் அளித்த பிரமாண sபத்திரப் பிரகாரம் சில வழிகாட்டுதல்களை தெரிவித்து, பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தவேண்டிய உச்ச நீதிமன்றம், முஸ்லிம்களுக்கு விரோதமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் பா.ஜ.க அரசிடம் சட்டம் இயற்றச் சொல்லி உத்தரவிட்டிருப்பது மென்மேலும் குழப்பங்களை உருவாக்கவே வழிவகுக்கும். இந்தத் தீர்ப்பை தவறாகப் பயன்படுத்தி, முஸ்லிம்களின் தனியார் ஷரீஅத் சட்டத்தில் குறுக்கீடுசெய்து, பொது சிவில் சட்டத்தைப் புறவாசல் வழியாகக் கொண்டுவர முயற்சிக்கக்கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் மத சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் நீதிமன்றத் தீர்ப்புகள், நாடாளுமன்றத் தலையீடுகள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது'' என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close