Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நான்குநாள் மழை, நிரம்பிய ஏரிகள்! அதிகாரிகள் மெத்தனம்... உடையும் கரைகள்?

நான்கைந்து நாட்களாகப் பெய்யும் சிறு மழைக்கே ஏரிகள் நிரம்பிக் காணப்படுகின்றன. மழைநீரை சேமிக்கும் கரைகள் வலுவின்றி கிடப்பதால் அவைகள் உடையும் நிலையில் இருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை வெள்ளக்  காடாக்கிய டிசம்பர் 2015-ம் ஆண்டின் பெருவெள்ளத்தை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பெருவெள்ளம் காரணமாக ரியல் எஸ்டேட் தொழில்கள் மொத்தமாக முடங்கியதும் அப்போதுதான்.  



  மழை பொழிந்தும் தண்ணீர் பஞ்சம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமே அரசின் ஆவணக் கணக்குப்படி 1,236 ஏரிகள் உள்ளன என்றால் நம்ப முடிகிறதா ? ஆமாம், இப்போதும் இருக்கிறது மக்களே. டிசம்பர் 2015-ம் ஆண்டில் பெய்த கன மழையின்போது இதில்  862 ஏரிகள்,  நிரம்பி வழிந்தது. நீரோட்டத்தின் வேகத்தால்  225 ஏரிக் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு அதை சரிசெய்யும் முயற்சியில் அதிகாரிகளுக்கு 24 மணிநேர வேலையும் இருந்தது. அடுத்து வந்த 2016 மற்றும்  நடப்பு 2017-ம் ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் வந்திருக்கிறது. ஒருகுடம் குடிநீரின் விலை 10 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. அதை வாங்கவும் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். பிளாஸ்டிக் கேன்களில் வருகிற  குடிநீர் மட்டும் தாராளமாய் புழங்குகிறதே, அது அயர்லாந்து நாட்டிலிருந்து இறக்குமதியானதா என்றெல்லாம் கேட்கக் கூடாது. அவர்களுக்குக் கிடைக்கிறது, விற்கிறார்கள் அவ்வளவுதான்.  


இவ்வளவு உச்சத்துக்கு வெய்யிலின் தாக்கம் இருந்தும் கூட நம்முடைய மக்களும், மக்களை வழிநடத்த வேண்டிய ஆட்சியாளர்களும் தண்ணீர்த் தேவையின் அவசியம் குறித்து கவலையே இல்லாமல் இருந்து விட்டார்கள்.  இதோ, மீண்டும் ஏரிகள் நிரம்பத் தொடங்கியிருக்கின்றன. கரைப்பகுதிகளில் போதுமான வலு இல்லை. கொள்ளை லாரிகளில் வைத்துக் கொண்டு செல்லப்பட்ட ஆற்றுமணல், ஏரி சவுடு மண் போன்றவை கொள்ளைக் கூட்டங்கள் நலமுடன் வாழ வழி விட்டிருக்கிறது. 

கடந்த  நான்கு  நாட்களாக பரவலாகவும், சிதறலாகவும் மழைப்பொழிவு இருந்த காரணத்தால், கரைகள் சரிவதைத் தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். மழை இல்லையென்றால் தண்ணீர்ப்பஞ்சம் இருக்கிறது. மழை பொழிந்தால் அதை சேமிக்க வேண்டிய ஆறு, ஏரிக்கரைகள் சரிகிறது, உடைப்பெடுக்கிறது.  இயற்கையின்  இந்த சிலநாட்கள் கருணைக்கே ஆட்டங் காண்கிறார்கள், அதிகாரிகள். மக்களைப் பொறுத்தவரை குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் சாலை மறியல்,வெய்யில் உச்சி மண்டையைப் பிளந்தால் தாகம் தீர்ப்பதற்கு வெளிநாட்டுக் குளிர்பானம்... தட்ட வேண்டியது, கோட்டைக் கதவுகளை அல்ல... மக்களாகிய, நம்முடைய மனசாட்சியைத்தான்....
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close