Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடுங்கள்': கவர்னருக்கு ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை

"சட்டமன்றத்தைக் கூட்டி இந்த அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க  உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று ஆளுநருக்கு ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

ஒரு ஆட்சிக்கு ஆதரவளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறும்போது, அந்த ஆட்சிக்கு மெஜாரிட்டி இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய ஆளுநர்  உடனடியாக பேரவையைக் கூட்ட வேண்டும் என்று பல தீர்ப்புகளில் உச்சநீதிமன்றமே சுட்டிகாட்டி இருக்கிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் முதலமைச்சரை நியமிக்கும் அதிகாரத்தை, அரசியல் சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ளது. ஆனால், நடக்கின்ற சட்டவிரோத செயல்கள் எல்லாம் ஜனநாயகப் படுகொலையாக மட்டுமல்ல, சட்டமன்ற ஜனநாயகத்தையே சிதைக்கும் செயலாக அமைந்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத பேரவைத் தலைவர், இப்போது 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்படுவது, எடப்பாடி பழனிசாமியின் மைனாரிட்டி அரசை காப்பாற்றுவதற்காகவே என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதுபோன்ற தருணங்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் குதிரை பேரங்களும், அரசியல் சித்து விளையாட்டுகளும் அரங்கேறவே இடமளித்து விடும். ஆளுநருக்கு ஆலோசனை சொல்ல, ஒரு சட்டவிரோத அமைச்சரவை தமிழகத்தில் நீடிப்பது அரசியல் சட்டத்திற்கே மிகப்பெரிய சவாலாக அமைந்து விடும். இதையெல்லாம் தடுக்கவே, “மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடுங்கள்”, என்று வேண்டுகோள் விடுத்து  ஆளுநருக்கு 22-ம் தேதியே கடிதம் எழுதியிருக்கிறேன்.

ஆகவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பேரவைத் தலைவர் தனபாலும் கைகோத்து, ஜனநாயகப் படுகொலை நடத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்த, சட்டமன்றத்தைக் கூட்டி இந்த அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று  ஆளுநர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி, கட்சித் தாவல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி, ஒரு சட்டவிரோத அமைச்சரவை பதவியில் நீடிக்க, பொறுப்புள்ள அரசியல் சட்டப் பதவியில் இருக்கும் ஆளுநர் இடமளித்து விடக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close