Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கைகொடுக்காத காற்றாலை மின் உற்பத்தி! தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து?

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்து விட்டதால், மின் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதைச் சமாளிக்க வெளியிடங்களிலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது. 

காற்றாலை

தமிழகத்தின் மின் தேவை 17,800 மெகாவாட். இதைச் சமாளிக்க அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள், சூரிய மின் சக்தி, காற்றாலை, அணு மின் சக்தி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள இந்த மின் திட்டங்களின் மூலமாக சுமார் 18,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மொத்த மின் உற்பத்தி இலக்கை அடைந்தால் மட்டுமே தமிழகத்தின் மின் தேவை பூர்த்தி செய்யப்படும் என்கிற நிலைமை உள்ளது. 

இதில், காற்றாலை மின் உற்பத்தி தமிழகத்துக்குக் கணிசமாகக் கைகொடுத்து வந்தது. தமிழகம் முழுவதும் 10,000 காற்றாலைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 7,800 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், காற்றின் திறன் மற்றும் உற்பத்தியைக் கையாளும் திறமை ஆகியவற்றில் ஏற்படும் சுணக்கம் காரணமாக சராசரியாக 4000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகி வந்தது.

காற்றாலை மின் உற்பத்தி

பொதுவாக, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால் அந்தச் சமயத்தில் மின் உற்பத்தி அதிகம் இருக்கும் இந்த வருடம் அதிகப்பட்சமாக 5,100 மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக மின் உற்பத்தி குறையத் தொடங்கியது. தென் மேற்குப் பருவக் காற்று குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், காற்றாலை மின் உற்பத்தி கணிசமாகக் குறைந்து வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரையிலும் சராசரியாக 4000 மெகாவாட் உற்பத்தியான மின்சாரம் தற்போது காற்று குறைந்ததால் 2000 மெகாவாட் அளவுக்குச் சரிந்து விட்டது. இதனால் தமிழகத்தின் மின் தேவையைச் சமாளிக்க காற்றாலை மூலம் கிடைத்து வந்த மின்சாரம் குறைந்தது. அத்துடன், கூடங்குளத்தின் இரு அணு உலைகளும் இன்னும் மின்சார உற்பத்தியைத் தொடங்காததால் அணு சக்தி மூலமாக தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 1,050 மெகாவாட் மின்சாரமும் இல்லை.

காற்றாலை மற்றும் அணு சக்தி மின் உற்பத்தி குறைவால் தற்போதைய சூழ்நிலையில் சுமார் 3000 முதல் 4000 மெகாவாட் மின் உற்பத்தியில் குறைவு ஏற்பட்டு விட்டது. இதனால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியிருக்கிறது. இதைச் சமாளிக்கும் வகையில் அரசு சார்பாக வெளியிடங்களில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுமா? அல்லது மின் வெட்டு ஏற்படுமா? என்பது அரசின் கொள்கை முடிவைப் பொறுத்தேயிருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close