Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தெம்பிருந்தால் இதைச் செய்யுங்கள்'- முதல்வருக்கு சவால்விடும் மு.க.ஸ்டாலின்

MK Stalin

'இந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு நாங்கள் அல்ல, அ.தி.மு.க-வைச் சார்ந்தவர்களே தயாராக இருக்கிறார்கள்' என்று கூறிய மு.க.ஸ்டாலின், உரிமைக்குழுவிலேயே மெஜாரிட்டியில்லாத அ.தி.மு.க, எங்களை நீக்க சட்டமன்றத்தைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தத் தயாரா என்று சவால்விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் இல்லத் திருமண விழாவில் பேசிய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் பிரச்னை, மாணவர்கள் பிரச்னை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை. அ.தி.மு.க அணிகள் இணைக்கப்படும் முன்பே அமைச்சர்கள் பதவியேற்புக்கு ஏற்பாடு நடைபெற்றது. அணிகள் கைகோத்துவிட்டதன்மூலம் பிரதமரின் கட்டப்பஞ்சாயத்தை உறுதிப்படுத்தினார் ஆளுநர். டெல்லியிடம் தமிழகத்தின் நலன் அடகு வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமன்றி புறநகர் பகுதிகளிலும் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பேசினேன். அவர்கள், என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டார்கள். அப்போது என் கையிலிருந்த குட்கா பொட்டலங்களைக் காண்பித்தேன். என்னுடன் வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கொடுத்துவைத்திருந்தேன். இதில் என்ன தவறு. ஆதாரம் கிடைக்கும்போது அந்த ஆதாரத்தைக் காட்ட வேண்டுமா வேண்டாமா? நாங்கள் என்ன குட்காவை விற்றோமா, விற்பனை செய்யப்படுவது வெளியில். இந்த குட்காவை விற்கக் காரண கர்த்தாவாக இருந்தது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவர், லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி கொடுத்திருக்கிறார் என்று செய்தி வருகிறது. இன்றைக்கு டிஜிபியாக இருக்கும் ராஜேந்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக செய்தி வருகிறது.

இந்த நிலையில், எங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்தி வருகிறது. இந்தச் சம்பவத்தை நாங்கள் சுட்டிக்காட்டி 40 நாள்கள் ஆகிவிட்டன. இதற்காக இன்று ஒரு கூட்டம் நடக்கிறது. என்ன காரணம் தெரியுமா? 19 பேர் ஆதரவை வாபஸ் வாங்கியாச்சு. மெஜாரிட்டியிலிருந்து மைனாரிட்டிக்கு வந்தாச்சு. ஏற்கெனவே இந்த அரசு உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. இப்போது கோமா ஸ்டேஜுக்குப் போய்விட்டார்கள். மைனாரிட்டியாக இருக்கக்கூடிய இந்த நேரத்தில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை நீக்கிவிட்டால், நாங்கள் தப்பிச்சுக்கலாம்; பதவியில் தொடர்ந்து நீடிச்சிக்கலாம் என்கிற அந்தக் குறுகிய புத்தியோடு கொல்லைப்புறமாக ஓர் அவல நிலையை உருவாக்கியுள்ளனர்.

அதைவிடக் கொடுமை என்னவென்றால், உரிமைக்குழுவில் 20 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில், மெஜாரிட்டு அ.தி.மு.க.தான். இந்த மெஜாரிட்டி ,அ.தி.மு.க-விலிருந்து நான்குபேர் வெளியே வந்துவிட்டார்கள். இப்போது ஓட்டெடுப்புக்கு விட்டால்கூட அவர்களால் எங்களை நீ்க்கமுடியாது. அதனால் அவர்களால் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. ஒருவேளை, தீர்மானத்தை நிறைவேற்றி சட்டமன்றத்துக்குக் கொண்டுவந்தால்கூட, தைரியமிருந்தால், தெம்பிருந்தால், துணிவிருந்தால் சட்டமன்றத்தைக்கூட்டி விவாதிப்போம். வாக்கெடுப்பு நடத்துங்கள். உங்களுக்கு தைரியமிருக்கா. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழகத்தில் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு நாங்கள் அல்ல, அ.தி.மு.க-வைச் சார்ந்தவர்களே தயாராக இருக்கிறார்கள். நாங்கள் கவிழ்க்கவேண்டிய அவசியமில்லை, அவர்களாகவே கவிழப்போகிறார்கள். இந்த நிலை தொடரக்கூடாது. தமிழகத்தில், ஒரு நிம்மதியான, நேர்மையான, நியாயமான மக்களாட்சியாக தி.மு.க ஆட்சி மீண்டும் உதயமாகப்போகிறது" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close