Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஆட்சியைக் கலைத்து தேர்தலை நடத்துங்கள்!” - குன்னம் அ.தி.மு.க எம்.எல்.ஏ ராமச்சந்திரன்

ராமச்சந்திரன் எம்.எல்.ஏ

“கூவத்துரில் எங்களை யாரும் அடைத்து வைக்கவில்லை; நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்" என்று வெளிப்படையாக முதன்முதலில் மீடியாக்கள் முன்பு பேட்டி கொடுத்தவர் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன். தற்போது சசிகலாவுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ள ராமச்சந்திரன், “வாரிசு அரசியல் நடத்துகிறார் சசிகலா. ஆட்சிக்கும், கட்சிக்கும் தினகரன் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடாது" என்று பகிரங்கமாக அறிவித்திருப்பதோடு, "தற்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்கவேண்டும்" என்று அதிரடியாகப் பேசி அரசியலில் மீண்டும் சூட்டைக் கிளப்பியிருக்கிறார். இந்நிலையில், பெரம்பலூரில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ-வைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“முதன்முதலில் சின்னம்மா என்று சசிகலாவை கூறிய நீங்கள், இப்போது அந்தக் குடும்பத்தினரை எதிர்க்கக் காரணம் என்ன?”

“ஆரம்பம் முதல் கடைசிவரை தி.மு.க-வை எதிர்த்து அரசியல் செய்த புரட்சித்தலைவி அம்மா, குடும்ப ஆட்சி கூடாது என்றும், குடும்ப ஆட்சியால் மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார். அதன் காரணமாகவே, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த தீபா மற்றும் தீபக்காக இருந்தாலும், அவர்களை அரசியலுக்குள் கடைசிவரை கொண்டுவரவில்லை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் அவரின் உறவினர்களைக்கூட அரசியலுக்குக் கொண்டுவரவில்லை. எம்.ஜி.ஆரின் உறவினர்கள் இன்று பி.ஜே.பி-யில்தான் இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, அம்மா மறைவுக்குப் பின் அவரின் வழியில் சசிகலா வருவார் என்று எதிர்பார்த்துதான் நாங்கள் முதலில் ஆதரித்தோம். ஆனால், அவருக்குப் பிரச்னை வந்ததும் தனது  குடும்பத்தைச் சேர்ந்தவர்களை முன்னிறுத்தியதுதான் ஆரம்பம். அதற்குப் பிறகு கட்சிக்குள் அனைத்து முடிவையும் திவாகரன், நடராசன், வெங்கடேஷ் என ஒவ்வொருவராக எடுத்து, கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இந்தநிலை தொடர்ந்தால், அம்மாவின் லட்சியம், கொள்கை பாதிக்கப்படும். இவ்வளவு பெரிய கட்சி ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும் என்பதால்தான் இன்றுவரை எதிர்க்கிறேன்".

“நீங்கள் ம.தி.மு.க-விலிருந்து அ.தி.மு.க-வுக்கு வந்தவர். கட்சிக்கு வந்தே குறுகியகாலம்தான் ஆகிறது. ‘வாரிசு அரசியல்’ என்று விமர்சிக்கத் தகுதியிருக்கிறதா என்று தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறாரே?”

“நான் கட்சிக்கு அவருக்குப் பின்னால் வந்தாலும், அம்மா என்னைப் பற்றி, நன்கு அறிந்திருந்தார். என்னைப் பற்றி முழுமையாக விசாரித்துதான் எனக்கு படிப்படியாக பொறுப்புகளை வழங்கி, மாவட்டச் செயலாளர், தற்போது எம்.எல்.ஏ. வரை என்னை  ஆளாக்கியிருக்கிறார். ஆனால், தினகரன் 1987-ல் கட்சிக்கு வந்தாலும் ஏன் தொடர்ச்சியாக நிலைக்கவில்லை? பலமுறை அவரை கட்சியிலிருந்து அம்மா ஏன் நீக்கினார்? இவர் எத்தனைமுறை கட்சிக்காக சிறைசென்று இருக்கிறார். அம்மா உயிருடன் இருக்கும்வரை ஏன் இவரைக் கட்சியில் சேர்த்துக்கொள்ளவில்லை? அதற்கு முதலில் தினகரனால் பதில் சொல்ல முடியுமா? அதனைச் சொல்லிவிட்டு மற்றவர்களைப் பற்றி இவர் விமர்சிக்கட்டும்.”     

ஓ.பி.எஸ்

“திவாகரன் மகன் ஜெயானந்த், உங்களை குன்னம் தொகுதியில் மட்டும் வேலையைப் பார்க்க சொல்லியிருக்கிறாரே?”

அதைச் சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? கட்சியில் இவர் யார்? இவர் அப்பா திவாகரன் யார்? இவர்கள் எல்லாம் முதலில் கட்சியின் உறுப்பினர்களா? ‘மன்னார்குடி எங்கள் கோட்டை; நாங்கள்தான் இங்கு எல்லாம்’ என்று சொல்லும் இவர்களால் முதலில் மன்னார்குடி மக்களை தக்கவைத்து, ஒரு எம்.எல்.ஏ-வை வெற்றிபெற வைக்க முடியுமா? தி.மு.க-வின் கோட்டையாக இருந்த பெரம்பலூரை மாற்றி, அ.தி.மு.க கோட்டையாக நான் மாற்றியுள்ளேன். அரசியலுக்கு ஜெயானந்த் எல்லாம் சிறிய பையன். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது”

“ஆட்சியும், கட்சியும் ஒருவேளை டி.டி.வி. தினகரன் தலைமையில் சென்றால்...?”

“அப்படி ஒரு நிலை வராது. வரவும் விடமாட்டோம். அப்படி வந்தால், இந்தக் கட்சி, ஆட்சி எதுவும் வேண்டாம். கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, அம்மாவால் கிடைத்த எம்.எல்.ஏ. பதவியை அம்மா சமாதியிலேயே ராஜினாமா செய்வேன்”

“நீங்கள்தான் முதன்முதலில் தினகரனை வெளிப்படையாக எதிர்த்தீர்கள்? அமைச்சர்கள் சொல்லவேண்டிய கருத்தை நீங்கள் சொல்லி வருகிறீர்களே; அவர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு வருகிறதா?”

ராமச்சந்திரன்“அதிக அளவிலான மிரட்டல்களே வருகின்றன. இந்தப் போனை மட்டும் கொஞ்சநேரம் வைத்திருங்கள்; அப்புறம் தெரியும். மிரட்டல்களுக்கு எல்லாம் நான் அஞ்சப் போவதில்லை. அம்மாவைப் பின்பற்றி வளர்ந்தவன் நான்; இவர்களின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன்.”

“உங்கள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே?”

“அவர் கொண்டுவரட்டும். முன்பைவிட அதிக வாக்குகள் பெற்று, அதனை முறியடிப்போம். அதேபோல, 'ஸ்டாலின், கடந்த முறை ரகசிய வாக்கெடுப்பு வேண்டும்' என்றார். இந்தமுறை அதுபோலக் கேட்க மாட்டார். அப்படி கேட்டால், தி.மு.க-வில் இருக்கும் பலர், எங்களுக்கு ஆதரவளித்து விடுவார்கள். அது ஸ்டாலினுக்குத் தெரியும். அங்கிருந்து பல எம்.எல்.ஏ-க்கள், எங்களுக்கு ஆதரவு அளிக்கத் தயராக உள்ளனர்".

“முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே கமல்ஹாசன்?”.

யாரோ ஆட்டும் தொட்டிலுக்கு கமல் ஆடுகிறார். இவராக இதனைச் செய்யவில்லை. இவ்வளவுநாள் கமல் எங்கு போயிருந்தார்? ஒரு மைதானத்தின் வெளியில் இருந்துகொண்டு, அவர் அப்படி ஆடியிருக்கலாம்; இப்படி ஆடியிருக்கலாம் என்று சொல்வது எளிது. களத்தில் இறங்கி ஆடினால்தான் தெரியும். களத்துக்கு முதலில் கமல் வரட்டும், பிறகு பார்க்கலாம்".

“இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே, உண்மையா?”

“உண்மைதான். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அ.தி.மு.க. ஆட்சி நடக்கும் போதே இரு அணிகளில் இருக்கும் அ.தி.மு.க-வினர். மாறி, மாறி இது ஊழல் ஆட்சி என்று சொல்லிவருகிறார்கள். இது வெட்கக்கேடான செயல். முதல்வர் எடப்பாடி, யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சிவரவேண்டும் என எண்ணுபவர்கள் ஜெயலலிதா பெயரையும், சசிகலாவை ஆதரிப்பவர்கள் அவரின் பெயரையும் சொல்லி தேர்தலைச் சந்திக்கட்டும். மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, மனப்பூர்வமாக அந்த ஆட்சியை ஏற்றுக்கொள்வோம்.” 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close