Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்தடுத்த அரசியல் நெருக்கடி! - சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்தார் சுகன்யா!

கோவை ஸ்மார்ட் சிட்டியின் சி.இ.ஓ-வாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.ராஜுவின் மகள் சுகன்யா நியமிக்கப்பட்டிருப்பது முறைகேடானது எனப் பல தரப்புகளிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இன்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் சுகன்யா.

சுகன்யாகோவையில் ரூ.1,570 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் விதிகளின்படி இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிறுவனத்துக்குத் தலைமை நிர்வாக அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, கம்பெனி செயலாளர் ஆகிய பதவிகளுக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இதன்படி கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நடத்தப்பட்ட நேர்காணலில் சுகன்யா  சி.இ.ஓ-வாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ’இந்தப் பணிக்கு, தகுந்த பணி அனுபவமோ செயல் திறனோ இல்லாதவர் சுகன்யா’ எனப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.  ’அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராஜுவின் மகள் என்பதாலும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் சிபாரிசு கிடைத்ததாலும் மட்டுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதவி சுகன்யாவுக்குக் கிடைத்துள்ளது’ என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சுமத்தினார்.


விஜய கார்த்திகேயன்மேலும், கோவை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்துக்கான தலைமை நிர்வாக அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்போர் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்; அதில் 5 ஆண்டுகள் நகர்ப்புறத்துறையில் பணி செய்திருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தகுதிகள் எதுவும் இல்லாத போதும் சுகன்யா ஒரு பெரிய பொறுப்புமிக்கப் பணியில் நியமிக்கப்பட்டிருப்பது பல தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்தது.


இந்நிலையில், இன்று மதியம் கோவை ஸ்மார்ட் சிட்டியின் சி.இ.ஓ. பதவியை சுகன்யா ராஜினாமா செய்தார். இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசியபோது, ”ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஓ பதவிக்கு பி.இ., எம்.இ., எம்.பி.ஏ., உள்ளிட்ட தகுதிகளும், 15 ஆண்டுகால அனுபவமும் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், நேர்காணலில் கலந்துகொண்டவர்கள் யாரும் இந்தத் தகுதியின் கீழ் வரவில்லை. இந்த விவரத்தை அரசுக்குத் தெரியப்படுத்தினோம். இதையடுத்து விதிகளைத் தளர்த்தி அரசாணை வெளியானது. புதிய அரசாணையின்படி நடத்தப்பட்ட நேர்காணலில் சுகன்யா தேர்வானார். இதில் எந்தவித அரசியலும் இல்லை. அரசு என்ன சொல்கிறதோ அதன்படியே நாங்கள் செயல்படுகிறோம். தற்போது பல்வேறு அரசியல் சூழல்களால் சுகன்யா தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்” என்றனர்.

இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயனிடம் பேசும்போது, ”ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஓ பதவியிலிருந்து சுகன்யா ராஜினாமா செய்துவிட்டார்” என்றதுடன் முடித்துக்கொண்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close