Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தற்கொலைப்படையாக மாறுவோம்'- போராட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் ஆவேசம்

 

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய மக்கள் செல்வர் டி.டி.வி தினகரன் பேரவையினர்,  ''சசிகலா, தினகரன் ஆகியோர் மட்டுமே கட்சியைத் தொடர்ந்து நடத்திட முடியும். இது தவறும் பட்சத்தில் நாங்கள் தற்கொலைப்படையாகவும் மாறத் தயங்க மாட்டோம்'' ஆவேசத்துடன் கூறினர்.
 

தினகரன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம்,  ஸ்ரீவைகுண்டம் மெயின்பஜாரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் துரோகச் செயலைக் கண்டித்தும், அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று கூட்டப்பட்ட கூட்டத்தில் அதிமுக-வில் சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் அவரால் நியமிக்கப்பட்ட தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

உருவபொம்மை எரிப்பு

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அனைத்திந்திய மக்கள் செல்வர் தினகரன் பேரவை நிறுவனர் ரெங்கராஜ், ‘’எடப்பாடியை முதல்வராக்கியதே சின்னம்மாதான். அவர் நினைத்திருந்தால் தினகரனை முதல்வராக ஆக்கியிருக்கலாம். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதையெல்லாம் இப்போது மறந்துவிட்டு சின்னம்மாவையே கட்சியைவிட்டு நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் அ.தி.மு.க-வுக்குச் செய்தது பெரிய துரோகம். அணி  அணியாக பிரிந்து இருக்கும்போது இருவரைப் பற்றி இருவருமே குற்றம்சாட்டி பேசி வந்தனர். ஆனால், தற்போது கைகோத்து, உறுத்தல் இல்லாமல் விழாக்களுக்கு செல்கின்றனர். நாங்கள் அ.தி.மு.க-வில் ஒன்றியச் செயலாளராகவோ, மாவட்டச் செயலாளராகவோ ஆக ஆசைப்படவில்லை. பணம் சம்பாதிக்கவும் எங்களுக்கு ஆசையில்லை. அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக தினகரனும் நீடிக்க வேண்டும். இவர்கள்தான் கட்சியை ஆள வேண்டும். இவர்களால் மட்டுமே கட்சியைத் தொடர்ந்து நடத்திட முடியும். இது தவறும் பட்சத்தில் நாங்கள் தற்கொலைப்படையாகவும் மாறத் தயங்க மாட்டோம். சசிகலா, தினகரனை கட்சியை நடத்தவிடவில்லையென்றால் தமிழகத்தில் அ.தி.மு.க. இருக்காது’’ என்றார்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவ பொம்மையை நடுரோட்டில் போட்டு தீயிட்டு கோஷம் எழுப்பினர். உடனே தீயை அணைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை ஸ்ரீவைகுண்டம் போலீஸார் கைதுசெய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close