Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடியின் `ஜன் தன் யோஜனா' திட்டத்தை கண்டுகொள்ளாத தமிழகம்!

‘அரசாங்கம், மக்களுக்கு 100 ரூபாய் செலவழித்தால் அதில் 10 ரூபாய்கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை' என ராஜீவ் காந்தி சொன்னதாக வங்கியாளர் ஒருவர் கூறினார். இப்போது இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்காக `ஜன் தன் யோஜனா' திட்டத்தை பிரதமர் மோடி  கொண்டுவந்தார். 

மோடி

`ஜன் தன் யோஜனா'

2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்ற பெயரில் `ஜன் தன் யோஜனா' திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியும், இந்தியாவின் மற்ற நகரங்களில் மத்திய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் ஒரே நாளில் தொடங்கிவைத்தார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு வைப்புத்தொகை எதுவும் தேவையில்லை. வங்கிக்கணக்கு தொடங்கும் ஒவ்வொருவருக்கும், தலா ஒரு லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு பெற முடியும். ஆயுள் காப்பீடு தொகை 30,000 ரூபாய். கணக்கு தொடங்கிய, ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒவ்வொருவருக்கும் வரைவு தொகையாக 5,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் தொகையை முறையாகத் திருப்பிச் செலுத்தினால், 15 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும். 

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம்போல, ஒவ்வொரு திட்டத்துக்கும் நேரடியாக பொதுமக்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும்; அரசு அளிக்கும் மானியம் பொதுமக்களுக்கு சிந்தாமல் சிதறாமல் போய்ச் சேர வேண்டும் என்பதற்கான பெரிய முயற்சி இது. இந்த நிலையில், `ஜன் தன் யோஜனா' திட்டம் தொடங்கப்பட்டு  நேற்றுடன் (28-08-17) மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி, `மன்கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி `ஜன் தன் யோஜனா உள்ளிட்ட நலத் திட்டங்களால் ஏழைகள் பயன்பெறுவது மனநிறைவை அளிக்கிறது. ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. இந்தத் திட்டத்தை ஒரு கனவுடன் தொடங்கினோம். 30 கோடி புது குடும்பங்கள் ஜன் தன் வங்கிக்கணக்கைத் தொடங்கினர். அவற்றில் 65 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுதான் ஏழை மக்களின் சேமிப்பு. சமூகத்தின் கடைசி எல்லையில் இருந்த ஏழைகளும் மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரத்துடன் இணைந்துள்ளது மனநிறைவை அளிக்கிறது' என பெருமையாகப் பேசினார். 

தமிழகத்தின் நிலை..?

‘ஜன் தன் யோஜனா' திட்டத்தைப் பொறுத்தவரை, தமிழக மக்கள் இதைப் பெரிதாகக் கண்டுக்கொள்ளாததுபோலவே தெரிகிறது. ஏனெனில், மற்ற மாநிலங்களைவிட குறைந்த அளவே ஜன் தன் யோஜனா வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி கணக்கீட்டின்படி, தமிழகத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 86,54,478 வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகளில் மக்கள் இதுவரை மொத்தமாக 1,384.01 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்திருக்கிறார்கள். 

குறிப்பிட்ட சில மாநிலங்கள்வாரியாக ஜன் தன் யோஜனா கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரூபாய் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி கணக்கீட்டின்படி... 

கோவா - 78.62 கோடி

கேரளா - 1,032.00 கோடி

ஆந்திரப்பிரதேசம் - 1,108.65

தமிழ்நாடு - 1,384.01 கோடி

டெல்லி - 1,409.87 கோடி

ஜார்கண்ட் - 1,950.94 கோடி

சத்தீஸ்கர் - 2,000.50 கோடி

பஞ்சாப்  - 2,025.10 கோடி

ஹரியானா  - 2,252.37 கோடி

கர்நாடகம்  - 2,328.48 கோடி

அசாம் - 2,632.84 கோடி

குஜராத் - 2,714.81 கோடி

மத்தியப்பிரதேசம்  - 3,078.96 கோடி

மகாராஷ்டிரா  - 3,752.83 கோடி

ராஜஸ்தான்  - 5,012.38 கோடி

பீகார்  - 5,653.54 கோடி

மேற்கு வங்காளம்  - 9,411.63 கோடி

உத்தரப்பிரதேசம் - 10466.95 கோடி

மேலே குறிப்பிட்டுள்ளதைப்போல பெரும்பாலான மாநிலங்களிலிருந்து ஜன் தன் யோஜனா கணக்கில் அதிக அளவிலான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இதுவரை 29.51 கோடி ஜன் தன் யோஜனா கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 65,844.69 கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10,466.95 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கோவா, கேரளா உள்பட சில மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் 1,384.01 கோடி ரூபாய் என அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனினும் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதும், அவர்களை வங்கிச் செயல்பாட்டுக்குள் கொண்டுவருவதும்தான் ஜன் தன் யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று சொல்லப்பட்டது. அப்படியானால், வங்கிக்கணக்கைப் பயன்படுத்தும் அளவுக்கு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதே அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஒரே வழி. ஆனால், வங்கிக்கணக்கு அதிகரிக்கும் அதே சமயத்தில் மக்களின் வருமானமும் பெருகிட, மக்களின் பொருளாதார நிலை மேம்பட அரசு நடவடிக்கை எடுக்குமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close