Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எங்களை சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றிய தினம்தான் உங்களின் கொண்டாட்ட தினம்..! இது குடிசை வாசியின் குரல்

'1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி, கிழக்கிந்தியக் கம்பெனி எங்களைப் பூர்விக இடத்திலிருந்து வெளியேற்றிய நாளைத்தான் சென்னை தினமாகக் (Madras day) கொண்டாகிறார்கள்' என்று வேதனை தெரிவிக்கிறார், சென்னை குடிசைப் பகுதி மக்கள் அமைப்பு நிறுவனர் போதி தேவவரம். 

கோப்புப்படம்


வளர்ச்சி என்ற பெயராலும் மறுவாழ்வு என்ற பெயராலும் சென்னை கூவம் நதிக்கரை ஓரத்தில் வசித்துவரும் குடிசைப்பகுதி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, நகரிலிருந்து மிகத் தொலைவில் அவர்களை குடியமர்த்துவது நீண்ட கால தொடர்கதை. சுமார் 300 ஆண்டுகளுக்கும் முன்னதாக, கிழக்கிந்தியக் கம்பெனி தொடங்கிவைத்ததன் நீட்சிதான் இன்றும் தொடர்ந்துவருகிறது. சமீப காலமாக பெரும்பான்மையான மக்களால் மிகவும் பெருமையாகக் கொண்டாடப்பட்டுவரும் 'சென்னை தினத்தை' கறுப்பு தினமாக அறிவித்து பிரச்சாரம் மேற்கொண்டுவரும் போதிதேவவரத்தைத் தொடர்புகொண்டோம்.

அவர், சென்னை தினக் கொண்டாட்டத்தின் பின் மறைக்கப்பட்ட வரலாறையும், மீள்குடியேற்றம் என்ற பெயரால் நடக்கும் குடிசைப்பகுதி மக்கள் இடப்பெயர்வின் பின் ஒளிந்திருக்கும் அழுகையையும் பகிர்ந்துகொண்டார்.  இதுகுறித்து கூறிய அவர், '1,600-களில் பழவேற்காடு பகுதியிலிருந்து சென்னையை நோக்கிவந்த கிழக்கிந்தியக் கம்பெனியினர், தற்போது ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை அடைந்தனர். அவர்கள், காலம் காலமாக பூர்வகுடி மக்கள் வாழ்ந்து வந்த மதுரசேனன்பட்டினத்தை (தற்போது ஜார்ஜ்கோட்டை அமைந்திருக்கும் இடம்), அப்போதைய விஜயநகரப் பேரரசின் மன்னர் உதவியுடன் ஆக்கிரமிப்புச் செய்தனர்.

அந்தப் பகுதியில் வாழ்ந்த சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றினர். அவர்கள் வெளியேற்றப்பட்ட நாள் 1639, ஆகஸ்ட் 22. அந்த நாள்தான் தற்போது சென்னை தினமாகக் (Madras day) கொண்டாடப்படுகிறது. அந்த மதுரசேனன்பட்டினத்தில்தான் கிழக்கிந்தியக் கம்பெனியினர் ஜார்ஜ்கோட்டையைக் கட்டினர். அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்கள்தான் நாளடைவில் மருவி,மதராசப்பட்டினம் என்றாகி, பின் 'மெட்ராஸ்' ஆனது. பூர்வகுடி மக்களை வணிக நோக்கங்களுக்காக வெளியேற்றும் அதிகாரவர்க்க நடவடிக்கைகள் இன்றும் தொடர்ந்துவருகின்றன. கடந்த 25 வருடங்களில் மட்டும் சுமார் பட்டியலினத்தைச் சேர்ந்த 6 லட்சம் மக்கள் வரை சென்னையிலிருந்து புறநகர் பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

கண்ணகி நகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50,000 குடும்பங்கள் வரை ஒரே இடத்தில் குடியேற்றியுள்ளனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. அத்தனை குடும்பங்களுக்கும் தேவையான பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை. அதனால், குழந்தைகளின் படிப்பு பாதியிலேயே நின்றுவிடுகிறது. அவர்களுடைய வாழ்வாதாரங்களும் முழுமையாகப் பாதிக்கப்படுகின்றன. எங்கள் மக்களின் பாதிப்புகளை வெளிப்படுத்துவதற்காகவே 'சென்னை தினத்தை' கறுப்பு தினமாகப் பிரகடனப்படுத்திவருகிறோம்' என்று வேதனையுடன் தெரிவித்தார். இந்தச் சென்னை பெருநகரம் இன்னும் ஏராளமான ஓங்கி உயர்ந்த கட்டடங்களைத் தாங்க உள்ளது. இந்தக் கட்டடக் காடுகளின் நிழல்களில் சேரி மக்களுக்கு என்றும் இடம் கிடைக்கப்போவதில்லை'' என்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close