Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்துக்கொட்டும் தண்ணீர்! சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

குற்றாலம் ஐந்தருவி

நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில், கடந்த சில தினங்களாக மழை பெய்துவருகிறது. இதனால், குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகம் விழுவதுடன், சாரலுடன் சீசன் களைகட்டியுள்ளது. ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் நேற்றிரவு முதல் தண்ணீர் அதிகரிக்கத் தொடங்கியது. படிப்படியாக உயர்ந்த தண்ணீர், இன்று காலை வெள்ளப்பெருக்காக மாறியது. ஐந்தருவியின் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டியது. 

குற்றாலம் மெயின் அருவி

மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவு வரை தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால், நீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் குளிப்பவர்கள் திணறினார்கள். இதையடுத்து, அருவியில் குளிப்பதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் புலி அருவியில் குளித்து மகிழ்கின்றனர். 

கடந்த சில தினங்களாக குற்றாலத்தைச் சுற்றிலுள்ள பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக, ஐந்தருவிக்குச் செல்லும் வழியில் உள்ள வெண்ணமடைக்குளம் நிரம்பிவிட்டது. இதனால், நிறுத்தப்பட்ட படகுப் போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் தொடங்கியிருக்கிறது. தற்போது அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், பயணிகள் இந்தப் படகுக் குழாமில் முகாமிட்டு, படகு சவாரி செய்து உற்சாகமாகப் பொழுதைக் கழிக்கின்றனர். 

குற்றாலம் அருவியில் மலைப்பாம்பு

மெயின் அருவியில் அதிகமாகத் தண்ணீர் கொட்டும் நிலையில், வெள்ளத்தின் காரணமாக மலைப் பகுதியிலிருந்து மலைப்பாம்பு ஒன்று நீரில் அடித்து வரப்பட்டது. சுமார் 12 அடி நீளம்கொண்ட அந்த மலைப்பாம்பு, அங்குள்ள பெண்கள் உடைமாற்றும் பகுதியில் பதுங்கிக் கிடந்தது. அதைப் பார்த்த பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி தீயணைப்புத்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் அந்த மலைப்பாம்பைப் பிடித்து வனத்துறையின் உதவியுடன் மீண்டும் காட்டுக்குள் கொண்டுசென்றுவிட்டனர்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close