Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''மருத்துவ தர வரிசைப் பட்டியலில் 1,000 வெளி மாநில மாணவர்கள்..!'' நீதி விசாரணை கேட்கும் வைகோ

வைகோ

''வெளிமாநிலத்தைச் சேர்ந்த 1,000 மாணவ, மாணவியர்கள் தமிழக மருத்துவ தர வரிசைப்பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறித்து முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும். அதுவரை தமிழக அரசுக் கல்லூரிகளில் மருத்துவக் கல்விக்கான கவுன்சலிங்கை நிறுத்தி வைக்க வேண்டும்'' என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான மாநிலத் தர வரிசைப்பட்டியலை தமிழக சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டது. தமிழக மாணவ, மாணவியர்கள் சேர்வதற்குரிய மருத்துவ இடங்களின் தர வரிசைப் பட்டியலில், கேரளா உள்ளிட்ட பிற மாநில மாணவ, மாணவியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

‘நீட்’ திணிப்பின்மூலம் ஏற்கெனவே மருத்துவக் கனவு தகர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமிழக மாணவச் செல்வங்களுக்கு, இது பேரிடியாக அமைந்துள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குரிய தர வரிசைப் பட்டியலில், கிட்டத்தட்ட 150 வெளி மாநில மாணவ, மாணவியர் பெயர்களும் தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குரிய தர வரிசைப் பட்டியலில் கிட்டத்தட்ட 1000 மாணவ, மாணவியர்கள் பெயர்களும் இடம்பெற்றிருப்பது தனி மனிதத் தவறுதலாலோ கணினி தொழில்நுட்பத் தவறுதலாலோ நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இதில், அரசு நிர்வாகத்தினர் உட்பட சுகாதாரத்துறை அமைச்சர் வரையிலான தொடர்பு இருக்கவே வாய்ப்பு உள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு ஒரு கோடி வரை செலவாகும். தமிழக அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைந்த செலவே ஆகும் என்ற நிலையில், ‘போலி’ இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழகத் தர வரிசைப் பட்டியலில் பிற மாநில மாணாக்கர்கள் இடம்பெற்றிருப்பதைக் காணும்போது, மிகப்பெரிய ஊழல் நடந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நீட் தேர்வு ஏற்கெனவே சமூகநீதி, மாநில உரிமைகள் என அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்திருக்கும் என்று நாம் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், நம் மாணாக்கர்கள் பாதிக்கப்படுவதோடு, நம் மாநில நிர்வாகம் மற்றும் கல்வித்தரம் மிகக் கீழ்த்தரமாகச் செயல்பட இத்தகைய ஊழல்கள் வழிவகுக்கும் என்ற கவலையும் வருகிறது.

தர வரிசைப் பட்டியலில், இத்தகைய முறைக்கேடு சாத்தியம் என்றால், நீட் தேர்வு நடத்துவதிலும் முறைகேடுகள் சாத்தியம்தானோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து விண்ணபித்த 9 மாணவர்களை, சுகாதாரத்துறை நிர்வாகம் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தது வெறும் கண்துடைப்பு நாடகம்.

வெளி மாநிலத்தைச் சேர்ந்த 1000 மாணவ, மாணவியர்கள் தமிழகத் தர வரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது குறித்து முறையான நீதி விசாரணை தேவை. அதுவரை தமிழக அரசுக் கல்லூரிகளில் மருத்துவக் கல்விக்கான கலந்துரையாடலை நிறுத்திவைக்க வேண்டும். இந்த முறைகேடுகளால் தங்களுக்குரிய மருத்துவக் கல்வி இடங்கள் கிடைக்கப்பெறாமல் பாதிக்கப்பட்டு, பெறும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமிழக மாணவ, மாணவியர்களுக்கு உரிய நஷ்டஈட்டை தமிழக சுகாதாரத்துறை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close