Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’அமைப்பு செயலாளர் பதவி என்ன அன்னாசிப் பழமா?’ - பதறும் தொண்டர்கள்

'அன்னாசிப் பழம்போல் ஊருக்கு நாலு பேருக்கு அமைப்பு செயலாளர் பதவியைப் பங்குவைத்து வருகிறார் டி.டி.வி.தினகரன்' எனப் பதறுகிறார்கள் கட்சியின் உண்மைத் தொண்டர்கள்.

அமைப்பு செயலாளர் முனியசாமி, வ.து.நடராஜன், எம்.எல்.ஏ முத்தையா

 ஜெயலலிதா காலத்தில் ராணுவக் கட்டுப்பாட்டுடன் திகழ்ந்தது அ.தி.மு.க. கட்சியிலோ ஆட்சியிலோ பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்வதாகத் தகவல் வந்தால் அவர்கள் எத்தகைய உயர் பதவியை வகித்தாலும் எந்தக் கேள்வியும் கேட்காமலே அவர்களைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்து செல்லாக்காசாக ஆக்கிவிடுவார் ஜெயலலிதா. ஆனால், அவர் மறைவுக்குப் பின் அந்தக் கட்சியில் நடப்பது எல்லாம் எதிர்மறையாகத்தான் உள்ளது. பொதுக்குழுவைக் கூட்டாமலே சசிகலா பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். அவர் அம்மாவின் சமாதியில் சபதம் செய்துவிட்டு சிறைக்குச் சென்ற நிலையில் அவசர அவசரமாகக் கட்சியில் இணைக்கப்பட்டார் டி.டி.வி.தினகரன். அதைவிட அவசரமாகத் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புக்கும் தினகரன் நியமிக்கப்பட்டார்.

 இந்த நிலையில் பதவி இழந்ததால் அணி பிரித்த ஓ.பி.எஸ்ஸும் பலன் அடைந்த இ.பி.எஸ்ஸும் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் தினகரனுக்கு எதிராக ஓரணியாகத் திரள தினகரன் தனித்து விடப்பட்டார். இதனால் தனது சித்து விளையாட்டைத் தொடங்கிய தினகரன் தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ-க்களை கூவாத்தூர் பாணியில் புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்க வைத்திருக்கிறார். 

 இதனிடையே கட்சி தனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது எனக் காட்டுவதற்காகத் தனக்கு எதிராக இயங்கும் முதல்வர் எடப்பாடி தொடங்கி பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் வகித்து வரும் இதர பதவிகளில் இருந்தும் நீக்கிவிட்டுத் தனது ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். கட்சியைப் பொறுத்தமட்டில் மாவட்டச் செயலாளர் பதவிதான் வெயிட்டானது. ஆனால், ஒரு மாவட்டத்துக்கு ஒருவரைத்தான் மாவட்டச் செயலாளராக நியமிக்க முடியும். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தன்னை ஆதரிக்கும் மற்ற ஆதரவாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், அவர்கள் எடப்பாடி அணிக்குச் செல்லாமல் இருக்கவும் வட்டச் செயலாளர் பதவிபோல் அமைப்பு செயலாளர் பதவியை வாரி வழங்கி வருகிறார்.

 உதாரணத்துக்கு 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 5 அமைப்பு செயலாளர்களை நியமித்து அசத்தியிருக்கிறார் தினகரன். ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த ஜி.முனியசாமி, திருவாடனை தொகுதியில் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆனிமுத்து, முதுகுளத்தூர் தொகுதியில் முன்னாள் எம்.பி நிறைகுளத்தான், நடிகர் செந்தில் என 5 பேரும் அ.தி.மு.க அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பரமக்குடி தொகுதியில் இருந்து மட்டும் யாரும் இடம் பெறவில்லை. அந்தத் தொகுதி மட்டும் என்ன பாவம் செய்ததோ எனத் தெரியவில்லை. ஆனால், அந்தத் தொகுதியின்  எம்.எல்.ஏ முத்தையா தினகரனின் தீவிர ஆதரவாளராக மாறி புதுச்சேரியில் ஓய்வு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ’தனது ஆதரவாளர்கள் சபலப்பட்டு எதிர் முகாமுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அமைப்பு செயலாளர் பதவியை அன்னாசிப் பழத்தைப் பங்கு வைப்பதுபோல் கொடுத்து வருகிறார் தினகரன்’ என மற்றவர்களின் கேலிக்கு ஆளாகி வருகிறோம் எனப் பதறுகின்றனர் அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close