Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கைதாகிறார் நாஞ்சில் சம்பத்? - தினகரனுக்கு அடுத்த 'செக்'

தினகரனுக்கு அதிர்ச்சி கொடுக்க அவரது ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்தை கைதுசெய்ய போலீஸாருக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் விரைவில் கைதுசெய்யப்படுவார் என்கின்றனர் போலீஸார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் சசிகலாவால் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

nanjil sampath
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களைக் கட்சிப் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி வருகிறார் தினகரன். அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மறுப்புத் தெரிவித்துவருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தினகரனின், கட்சிப்பதவி பறிக்கப்பட்டது. ஆனால், தினகரன், தன்னுடைய கட்சிப்பதவியைப் பறிக்க சசிகலாவைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து நீக்க அ.தி.மு.க-வில் எதிர்ப்புக் குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக சசிகலா, தினகரனின் ஆதரவாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதுபோல சசிகலா, தினகரனின் உருவப்பொம்மைகளை எரித்தும், பேனர்களைக் கிழித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இரண்டு தரப்பிலும் பதிலடி உடனுக்குடன் கொடுக்கப்படுவதால் அ.தி.மு.க-வில் பரபரப்பு அதிகரித்துள்ளது. முதல்வர், துணை முதல்வர் தரப்பினர், தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க முயற்சி செய்துவருகின்றனர். அதற்கு தினகரன் ஆதரவாளர்கள் தடை ஏற்படுத்த மனு கொடுத்துள்ளனர். இவ்வாறு இரண்டு தரப்பிலும் கடுமையான அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தினகரன் ஆதரவாளரும், அ.தி.மு.க. அம்மா அணியில் சசிகலாவால் மீண்டும் பதவி கொடுக்கப்பட்ட நாஞ்சில் சம்பத், பா.ஜ.க-வையும், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜனைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதற்கு பா.ஜ.க. தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாஞ்சில் சம்பத் மீது பா.ஜ.க.வினர் போலீஸில் புகார் கொடுத்துவருகின்றனர். சென்னைப் பட்டினப்பாக்கத்தில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டை நேற்று பா.ஜ.க-வினர் முற்றுகையிட முயன்றனர். நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக பா.ஜ.க-வினர் ஒட்டுமொத்தமாக செயல்பட்டுவருகின்றனர். பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் நகரத் தலைவர் ஆனந்த், தொழில் அணித் தலைவர் நாகராஜன் ஆகியோர் புகார் கொடுத்தனர். இதில் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் நாஞ்சில் சம்பத் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் வன்கொடுமை தடுப்புப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பம்மல், பட்டினப்பாக்கம் என போலீஸ் நிலையங்களில் நாஞ்சில் சம்பத் மீது புகார் கொடுக்கும் படலம் தொடர்கிறது. இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், நாஞ்சில் சம்பத் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் அவர் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளார். மேலும், நாஞ்சில் சம்பத்தை கைதுசெய்ய மேலிடத்திலிருந்தும் எங்களுக்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது, நாஞ்சில் சம்பத் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யலாமா என்ற ஆலோசனையும் நடந்துவருகிறது என்றனர்.

பா.ஜ.க. வழக்கறிஞர் ஜெனிதா அலெக்ஸ் கூறுகையில், ''பொதுச்சேவையில் ஈடுபட்டுவரும் பெண்களைத் தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்தி பேசுவது சட்டத்துக்குப் புறம்பானதாகும். அவர் மீது 499 அவதூறாகப் பேசுவது, 500 354 பெண்ணை மானபங்கப்படுத்துதல் மற்றும் பெண்கள் வன்கொடுமை பாதுகாப்புச் சட்டப் பிரிவு 4ன் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகளின் ஜாமீன் வெளிவரா முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் பா.ஜ.க-வின் தலையீடு இருப்பதற்கு இந்தச் சம்பவம் உதாரணம். நாஞ்சில் சம்பத்தின் கார் டயரில் காற்றை பிடுங்கிவிட்ட பா.ஜ.க-வினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒருதலைபட்சமாக போலீஸார் செயல்படக்கூடாது. இரண்டு தரப்பினரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். நாஞ்சில் சம்பத்தின் கருத்தைக் கேட்க அவரது செல்போனுக்குத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவரது கருத்தும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிடப்படும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close