Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா... பள்ளிகளுக்கு இலக்கு வைத்த பழனிசாமி அரசு! #HallOfShameAdmk

பள்ளிக்குழந்தைகள்

மிழகமெங்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது தமிழக அரசு. இந்த நிலையில், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள்  இணைந்தன. தினகரன் எதிர்ப்பை சமாளிக்க தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிகள் உள்ளன. இதற்கு பகடைக்காயாக மாணவர்கள் பயன்படுத்துவதுதான் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது பெற்றோர்கள் மத்தியில்.


 

வண்டலூரில் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கலந்துகொள்கிறார்கள். இதனால் மிக பிரம்மாண்டமாக விழாவைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள். இதில் அரசுத்துறை மற்றும் தனியார்த் துறையை சேர்ந்தவர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக  அவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். பாதசாரிகள் நடந்து செல்ல முடியாதபடி நடைபாதையெங்கும் பேனர்கள், கட் - அவுட்கள் வைத்திருக்கிறார்கள்.
தாம்பரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் தாளாளர் நம்மிடம் பேசினார். “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு இருபதாயிரம் மாணவர்களை அழைத்து வரவேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலருக்கு டார்கெட் வைத்துவிட்டார்கள். இதனால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தரப்பில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளில் 15 ஆயிரம் மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 5 ஆயிரம் மாணவர்களும் வரவேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

தனியார் பள்ளிகளுக்கு போன் செய்து அதிகாரிகள், ' பள்ளிக்கு விடுமுறை அளித்து, பள்ளி வாகனங்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும். மாணவர்களையும் விழாவுக்கு அனுப்ப வேண்டும்” என நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இதற்கு சில பள்ளிகளின் தாளாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேல்மருவத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் வாகனங்கள் அனைத்தும் விழாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இன்று மாலை ஐந்து மணிக்குள் அனைத்து வாகனங்களும் வரவேண்டும் என்ற உத்தரவால், தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தும் மறைமலைநகர் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனியார் பள்ளியின் டிரைவர், தாளாளர், முதல்வர் என அனைவரின் செல்போன் எண்களும் வாங்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் இயங்காத காரணத்தால் அந்த பள்ளிகள் இந்த டார்ச்சரில் இருந்து தப்பித்துவிட்டன. மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூலமாகவே இந்த அழுத்தத்தைக் கொடுக்கிறார்கள். மாணவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதால் அவர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாவட்ட அளவில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநருக்கு அழுத்தம் தரப்பட்டு, அவர் மூலமாக தனியார் பள்ளிகளுக்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நேரடியாக தகவல் வராததால் அவர்கள் தப்பித்துவிட்டார்கள். குறிப்பாக தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் அதிக அளவு பள்ளிகள் பாதிப்படைந்துள்ளன.



எம்.ஜி.ஆர்

காலையில் 6 மணிக்கு மாணவர்களை வரச் சொல்லி இருக்கிறார்கள். காலை 7 மணிக்கு மேடைக்கு முன்புறமாக மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கே தண்ணீர் வசதி கிடையாது. அத்தனை மாணவர்கள் கூடும் அந்த இடத்தில் அவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் கிடையாது. தனியார் பள்ளி வாகனங்களுக்கு டீசல் செலவோ, டிரைவர் படித்தொகையோ எதுவும் அளிக்கப்படவில்லை. கல்வித்துறையின் சர்வாதிகாரப்போக்கைத்தான் இவை காட்டுகின்றன. வாகனங்கள் விபத்திற்குள்ளானாலோ, மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ அவர்களுக்கு உதவ எவ்வித முதலுதவி நடவடிக்கையும் அரசின் மூலமாக எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த தகவலை நாங்கள் பெற்றோரிடம் தெரிவித்திருப்பதால் அவர்களும் பள்ளிக்கல்வித்துறை மீது பெரும் கோபத்தில் உள்ளனர்.” என்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, “காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இப்படி செய்யப்படவில்லை. எல்லா மாவட்டங்களிலும் செய்வது போலத்தான் இங்கேயும் நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு எவ்வித நெருக்கடியும் நாங்கள் கொடுக்கவில்லை. விருப்பமுள்ளவர்கள் மட்டுமே பள்ளிக்கு விடுமுறை விடுக்கிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.” என்கிறார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடர்புகொண்ட சிறிது நேரத்தில், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் கூட்டமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சீனுவாசன் நம்மை தொடர்புகொண்டு பேசினார். “ஆரம்பத்தில் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுத்தது உண்மைதான். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முன்பாகவே மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் 'மாணவர்களை நாங்கள் வற்புறுத்த முடியாது' என தெளிவாகச் சொன்னோம். அதன்பிறகு எங்களுக்கு எந்த நெருக்கடிகளும் அரசுத் தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்லை. விழாவைப் பார்க்க விருப்பப்பட்ட பள்ளிகள் மட்டுமே இதில் கலந்துகொள்கிறார்கள்” என்றார்.
“மாணவர்கள் பள்ளிக்கு படிக்க வரவேண்டும் என்பதற்காக சத்துணவுத் திட்டத்தை கொண்டுவந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், மாணவர்களை பள்ளிக்கு வரவிடாமல் தடுக்கவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவைக் கொண்டாடுகின்றனர் இன்றைய ஆட்சியாளர்கள். 

அரசின் இந்தச் செயலுக்கு பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை அது விழா மேடையில் எதிரொலிக்கலாம் என்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close