Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீனவர்களைத் துரத்தும் இரண்டு பிரச்னைகள்!

இலங்கைக் கடற்படை நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் காற்றின் வேகத்தால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றை நம்பி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடியைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையின் நெருக்கடிக்கு ஆளாகி பல லட்சம் மதிப்புடைய தங்கள் படகுகளை இழந்து வருகின்றனர்.

பாம்பன் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் படகுகள்



கடந்த 3 ஆண்டுகளாக இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படும் படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. தற்போது வரை இலங்கை அரசின் பிடியில் தமிழகத்தைச் சேர்ந்த 178 விசைப்படகுகள் உள்ளன. இந்தப் படகுகள் அனைத்தும் முறையான பராமரிப்பின்றி இலங்கைக் கடற்கரை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளில் கடல் நீர் புகுவதாலும், தொடர்ந்து இயக்கப்படாத நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாலும் படகின் இயந்திரங்கள் பழுதடைந்து போகின்றன. இதனால் இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள படகுகளை விடுவிக்க சம்மதித்தாலும், விடுவிக்கப்பட்ட படகுகளில் பல மீட்க முடியாத நிலையிலும், மீட்க கூடிய படகுகளை எடுத்து வர பெரும் தொகை செலவழித்து பழுது நீக்க வேண்டிய நிலையிலும் உள்ளது.

மாநிலத்தில் நிலையான அரசு ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட படகுகளை மீட்க முடியாமல் கடந்த 3 ஆண்டுகளாக மீனவர்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது மாநில ஆட்சியில் நிலவி வரும் குழப்பமான சூழலில் தங்கள் படகு இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டால் என்ன ஆகுமோ என்ற அச்சத்தின் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் தங்கள் படகுகளைக் கரையில் நிறுத்தியுள்ளனர்.

வேறு சிலர் பாம்பன் தென் கடல் பகுதிக்குச் சென்று ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக தென் மேற்குப் பருவக் காற்று பாம்பன் கடல் பகுதியில் வேகமாக வீசி வருகிறது. மணிக்கு 42 கி.மீ முதல் 55 கி.மீ வரையிலான வேகத்தில் காற்று வீசுவதால் கடலில் அமைதியற்ற நிலை உருவாகி மீனவர்களின் வலைகளில் மீன்கள் சிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பாம்பன் பகுதி மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் தங்கள் படகுகளைக் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

ஒரு புறம் இலங்கைக் கடற்படை கெடுபிடி. மறுபுறம் காற்றின் வேகம் ஆகியவற்றால் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள் மற்றும் அதனைச் சார்பு தொழிலாகக் கொண்ட கூலித் தொழிலாளர்களும் வருமானமின்றி தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close