Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' நினைவை மீட்டுக் கொடுத்த திருமாவுக்கு நன்றி!' - கிட்டாரால் கலங்கிய பேரறிவாளன்

பேரறிவாளன்

வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வந்திருக்கிறார் பேரறிவாளன். அரசியல் கட்சித் தலைவர்களுடன் தினம்தோறும் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கொடுத்த கிடார் இசைக் கருவி பேரறிவாளனை ரொம்பவே கவர்ந்துவிட்டது. ' முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய நினைவை மீட்டுக் கொடுத்திருக்கிறார் திருமா' என நெகிழ்ந்து போய் பேசியிருக்கிறார் பேரறிவாளன். 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன், நீண்ட இழுபறிக்குப் பிறகு பரோலில் வெளிவந்திருக்கிறார். ஜோலார்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் தங்கியிருந்து, தன்னுடைய பரோல் விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைவரையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில், நேற்று பேரறிவாளனைச் சந்தித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், அவருக்குக் கிடார் இசைக்கருவி ஒன்றைப் பரிசாக அளித்தார். இப்படியொரு பரிசை, பேரறிவாளன் எதிர்பார்க்கவில்லை.

இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், " பேரறிவாளன் பள்ளிப் படிப்பில் இருக்கும்போது, ரவி என்பவர் நண்பரானார். அவர் ஒரு கிட்டாரிஸ்ட். அவருடைய இசைக்கருவியைப் பார்த்த பேரறிவாளனுக்கு அந்தக் கருவியின் மீது ஈர்ப்பு வந்துவிட்டது. அந்த மாணவர் குயில்தாசனின் மாணவராகவும் இருந்தார். அந்தக் கருவி வேண்டும் எனப் பேரறிவாளன் அடம் பிடித்தார். அதன் விலையைக் கேட்டபோது, குடும்பமே ஆடிப் போய்விட்டது. அப்போதே அதன் விலை 240 ரூபாய். ' மிகப் பெரிய தொகையாக இருக்கிறது. இப்போது வாங்கித் தர முடியாது' எனப் பெற்றோர் கூறிவிட்டனர். இதனால், பல நாள்கள் தூக்கம் இல்லாமல் தவித்தார் பேரறிவாளன். 

திருமாவளவன்இதனைத் தாங்க முடியாத பேரறிவாளனின் அக்காவும் தங்கையும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் எனச் சேகரித்து வைத்து, 240 ரூபாய் கொடுத்து ஒரு கிட்டாரை வாங்கித் தந்தனர். 'கருவியை எப்படி இசைக்க வேண்டும்?' என ரவி கற்றுக் கொடுத்து வந்தார். கிட்டார் வாசிப்பில் சிறந்து விளங்கினார் பேரறிவாளன். பகல் நிலவு படத்தில் வரும் 'துள்ளி எழுந்தது பாட்டு' என்ற பாடலை மிக அற்புதமாக இசைப்பார். பின்னாளில் இளையராஜாவிடம் வேலைக்குச் சேர்ந்துவிட்டார் ரவி.

'இசையில் சிறந்து விளங்க வேண்டும்' என ஆசைப்பட்டு, முறையான பயிற்சியை எடுத்து வந்த பேரறிவாளன் சந்தர்ப்ப சூழலால் சிறைக்குச் சென்றுவிட்டார். சிறையில் நடந்த ஆண்டு விழா ஒன்றிலும் கிடாரை இசைத்தார் பேரறிவாளன். இப்போது வீட்டுக்கு வந்தவுடன் அப்பா, அம்மாவுக்கு அடுத்தபடியாக கிட்டாரைத்தான் தேடினார். 'அது மிகவும் பழையதாகிவிட்டது' என வருத்தப்பட்டார். நேற்று திருமாவின் கிட்டார் பரிசை அவர் எதிர்பார்க்கவில்லை. கண்கலங்கிவிட்டார். ' நான் ஒரு இசைக் கலைஞனாகத்தான் வர வேண்டும் என ஆசைப்பட்டேன். காலச் சூழலால் சிறைக்குச் சென்றேன்' எனக் கூறிவிட்டு, அன்றைய பொழுது முழுக்க கிட்டாரை வாசித்துக் கொண்டே இருந்தார். நாளை முதல் அவருக்கும் அவருடைய தந்தைக்கும் மருத்துவ சிகிச்சை தொடங்கவிருக்கிறது" என்றனர் விரிவாக. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close