Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுகன்யா ராஜினாமா... ஏன், எதற்கு, எப்படி? கோவை குழப்பம்

கோவை ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஓ சுகன்யா

கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டியின் சி.இ.ஓ-வாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.ராஜூவின் மகள் சுகன்யா நியமிக்கப்பட்டார். இவர், கடந்த இரு தினங்களுக்கு முன் திடீரென்று தன் பதவியை ராஜினாமா செய்தார். தமிழகத்தில் பூதாகரமாகக் கிளம்பிய சி.இ.ஓ நியமன விவகாரத்தை இந்தத் திடீர் ராஜினாமா மூலம் மூடி மறைக்க முயன்று இருக்கிறார்கள்.

கடந்த 11.8.17 அன்று கோவை ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஓ-வாக சுகன்யா பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து, இப்பிரச்னை மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஓ. நியமனத்திற்கென்று மத்திய அரசு நிர்ணயித்திருந்த தகுதிகளை எல்லாம் தளர்த்தி, அரசியல் ஆதாயத்துக்காக முன்னாள் எம்.எல்.ஏ-வின் வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சிபாரிசின்பேரில் அவரை நியமித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக "27.08.17 தேதியிட்ட, ஜூனியர் விகடனில்" விரிவாக எழுதியிருந்தோம்.

15 வருட அனுபவம் கொண்டவரை நியமிக்க வேண்டிய பதவிக்கு வெறும் மூன்று ஆண்டுகால அனுபவம் மட்டுமே உடைய, நகர்ப்புற துறையில் எந்த அனுபவமும் இல்லாத சுகன்யாவை நியமித்தது, வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. இந்தப் பிரச்னை கோவை மாநகராட்சிக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. "நாங்கள் முறைப்படி விளம்பரம் கொடுத்தோம். சுகன்யாவைத் தவிர தகுதியானவர்கள் வேறுயாரும் வரவில்லை" என்று மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் சொன்ன விளக்கத்தை பொதுமக்கள் காதில் சுற்றிய பூவாகத்தான் பார்த்தார்கள். 'சுகன்யா உடனடியாக பதவி விலக வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில், தன் பதவியை தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளார் சுகன்யா. "ஆரம்பத்திலேயே நான் இந்த வேலைக்குப் போகவில்லை. என்னால் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை" என்று தன் அப்பாவிடம் புலம்பியிருக்கிறார் சுகன்யா. சில நாள்களில் பிரச்னை சரியாகிவிடும் என்று ஆறுதல் சொல்லிய கே.பி.ராஜூ மீடியாக்களிடம், "என் மகள் ஏதாவது செய்துகொண்டால் நீங்கள்தான் பொறுப்பு" என்று ஓப்பனாகவே புலம்ப ஆரம்பித்தார். ஆனாலும், சர்ச்சை ஓயாமல் நீடித்து வந்தது. 'சுகன்யாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்று பி.ஜே.பி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. "மாநகராட்சி ஆணையர் மீது மத்திய அரசிடம் புகார் கொடுக்கப்போகிறோம்" என்று வானதி சீனிவாசன் கொந்தளித்தார். தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு பிறகே சுகன்யாவின் ராஜினாமா நடந்துள்ளது.

மீடியா செய்திகளால் மன உளைச்சலுக்கு ஆளான சுகன்யா தனக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்வதற்குக்கூட நடுங்கினார். அவரால், விமர்சனங்களைக் கடந்து பதவியில் நீடிக்க முடியவில்லை என்று ஒருசிலர் குறிப்பிட்டனர். அமைச்சர் வேலுமணி வரை விவகாரம் போனதால், சுகன்யா "ராஜினாமா செய்வதுதான் எல்லோருக்கும் நல்லது" என்ற முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன் வேலுமணியின் குட் புக்கில் இருப்பவர். அவரை கலெக்டராக்க காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்த சூழலில், இதுபோன்ற எதிர்மறையான விமர்சனங்களை அமைச்சர் விரும்பவில்லையாம். கமிஷனரும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எதிர்க்கட்சியினரோ,  “சுகன்யாவையே தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததுபோல நாடகம் ஆடுகிறார்கள். அதன்மூலம் தங்கள் தவறுகளை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த நியமனம் முறைப்படி நடந்திருக்கிறது என்றால், எதற்காக அவர் ராஜினாமா செய்யவேண்டும்? அவர்கள் மீது தவறு இருக்கிறது என்பது இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது. இந்த நிமயனம் தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்கிறார்கள்.

எல்லாம் கமிஷனருக்கே வெளிச்சம்..!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close