Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ்கோடி மீனவர்களுக்கு அடிப்படை வசதி: ஆட்சியர் பதில் தர நீதிமன்றம் ஆணை

தனுஷ்கோடி மீனவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தனுஷ்கோடி அடையாளமாக திகழும் சர்ஜ்


 

நாட்டின் மிகச் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கியது தனுஷ்கோடி. 1964-ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலையில் சிக்கி உருக்குலைந்துபோனது. இதைத் தொடர்ந்து இப்பகுதி மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டது. இதனால் மின்சாரம், குடிநீர், சாலை, பள்ளிக்கூடம், மருத்துவமனை என எந்த அத்தியாவசிய வசதிகளும் அங்கு இல்லாத நிலையில் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் கருதி அப்பகுதியிலேயே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசு இங்கு துவக்கப் பள்ளிகள் அமைத்தது. மேலும், கடந்த மாதம் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதி வரை சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ”தனுஷ்கோடி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் வசித்து வந்த அனைவரையும், ராமேஸ்வரம் பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். இருப்பினும், இந்த 300 குடும்பத்தினரும் தனுஷ்கோடி பகுதியிலேயே தங்கி, தொழில் செய்துவருகின்றனர். இவர்களது குழந்தைகள் தனுஷ்கோடி அங்கன்வாடி, ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

ஆனால், இந்தப் பள்ளிகளில் மின்வசதி, கழிப்பறை வசதி, சாலை வசதி, முறையான கட்டட வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. சிலர் சோலார் மின்தகடுகளை வழங்கிய நிலையில், முறையான பராமரிப்பில்லாததால், அதுவும் செயல்படாத நிலையில் உள்ளது. தனுஷ்கோடியில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுக்கான அரிசி, பருப்பு மற்றும் முட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டாலும், அவை மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. அதற்கான பணியாளர்களும் இல்லை. 


இதேபோல பழைய தனுஷ்கோடியில் 300 குடும்பங்களும், தாவூக்காடு பகுதியில் 80 குடும்பங்களும், பாரடி பகுதியில் 100 குடும்பங்களும் உள்ளன. ஆனால், இந்தக் கிராமங்களில் கடந்த 53 ஆண்டுகளாக மின் வசதி, பொதுக்கழிப்பிட வசதி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. எனவே, இங்கிருக்கும் குடும்பங்களில் இருப்பவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் கூட 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமேஸ்வரத்துக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், பழைய தனுஷ்கோடியில் புயலில் சேதமடைந்துள்ள அஞ்சல் நிலையம், ஆலயம், விநாயகர் கோவில், ரயில் நிலையம், துறைமுகம் போன்ற கட்டடங்கள் எவ்வித பாதுகாப்புமின்றி உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த ஆலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாத் தலமான இந்தப் பகுதியைப் பாதுகாத்து பராமரிக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

எனவே, பழைய தனுஷ்கோடி, தாவுக்காடு, பாரடி கிராமங்களிலும் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், சுற்றுலாத்தலங்களில் உள்ள பழைய கட்டடங்களைப் பாதுகாத்து பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close