Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜனாதிபதியிடம் போட்டோ ஆதாரம் காட்டிய எதிர்க்கட்சியினர்!

ஜனாதிபதி


''முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது'' என தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மனுக் கொடுத்தும், அந்த மனுமீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஜனாதிபதியைச் சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி அரசுக்கு உத்தரவிடவேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முறையிட்டுள்ளனர். 

டி.டி..வி. தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் எடப்பாடிமீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. எனவே, அவருக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் வாங்குவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து மனு அளித்தனர். இதனால் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக தி.மு.க., காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, '' 'அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் முதல்வர்மீது நம்பிக்கையில்லை' என்று சொல்லி தங்களது ஆதரவை வாபஸ் வாங்குவதாகச் சொல்லியுள்ளார்கள். இதனால் பெரும்பான்மையை எடப்பாடி அரசு இழந்துவிட்டதாகக் கருதுகிறோம். எனவே, சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று கோரிக்கைவைத்தனர். ஆனால், அதற்கு ஆளுநர் தரப்பிலிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை. 

இந்நிலையில், புதன் கிழமை அன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்து, ''தமிழகத்தில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் ஆளுநர், “உள்கட்சி விவகாரங்களில் நான் தலையிட முடியாது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்குப் பிரச்னை இருக்கிறது” என்று சொல்லியுள்ளார். ஆளுநரின் இந்தப் பதில், பல்வேறு எதிர்க்கட்சிகளிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது. முதல்வர் விவகாரத்தில் ஆளுநர் முடிவு அறிவிக்காமல் காலதாமதம் செய்தால், ஜனாதிபதியைச் சந்தித்து முறையிடப் போவதாகத் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, டெல்லியில் ஜனாதிபதியை தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து மனுக் கொடுத்துள்ளனர். 

ஜனாதிபதி

இந்தச் சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, “தமிழகத்தின் ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆளும்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநரிடம் முறையிட்டுள்ளார்கள். அதனால் 19 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எடப்பாடி அரசு இழந்துள்ளது. பெரும்பான்மையையும் அவர்கள் இழந்துவிட்டார்கள். ஆளுநர் சட்டப்படி சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். ஆனால் ஆளுநர், 'இது உள்கட்சி விவகாரம்' என்று சொல்லியுள்ளார். பொதுச்செயலாளர் பிரச்னை பற்றி ஆளுநரிடம் புகார் சொன்னால், அது உள்கட்சி விவகாரம். ஆனால் எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று சொல்வது மட்டும் உள்கட்சி விவகாரம் இல்லையா? ஆளுநர் சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். அதை, ஆளுநர் செய்ய மறுக்கிறார். ஆனால், இரண்டு அணியின் தலைவர்களை மட்டும் கையைப் பிடித்துச் சேர்த்து வைக்கிறார். அதை மட்டும் ஆளுநர் செய்யலாமா? உள்கட்சிக்குள் பிரச்னைக்குள்ளானவர்களை இவர் ஏன் சேர்த்துவைக்க வேண்டும். இதுதொடர்பாக அந்தப் போட்டோ ஆதாரங்களையும் ஜனாதிபதியிடம் காட்டினோம். அவர், இந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டதாகச் கூறிச் சிரித்தார். ஜனாதிபதி தலையிட்டுத் தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரினோம். அவர் ஒரு வாரத்தில் முடிவு எடுக்கிறேன் என்று கூறினார்” என்றார்.

ஜனாதிபதி உத்தரவிட்டால், ஆளுநர் சட்டசபையைக் கூட்டச்சொல்ல வேண்டிய நெருக்கடி வந்துவிடும் என்பதால்தான் தி.மு.க-வினர் ஜனாதிபதியிடம் மனு அளித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்க மறுத்தால், அடுத்தகட்டமாக நீதிமன்றத்தை நாடவும் தயாராகியுள்ளனர் தி.மு.க-வினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close