Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’சிவன் மீது கோபம் கொண்ட கருவூர் சித்தர்’... நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா!

நெல்லையப்பர் கோயில்

கருவூர் சித்தருக்கு சிவன் காட்சியளிக்க மறுத்ததால் கோபம் கொண்டு சாபமிட்டுச் சென்றவரை சிவனே நேரில் சென்று காட்சியளித்ததை நினைவுகூறும் ஆவணி மூலத்திருவிழா நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்றது.

முக்கியமான சிவத் தலங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் நடக்கும் ஆவணி மூலத்திருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டு ஆவணி மூலத்திருவிழா, ஆகஸ்ட் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 29-ம் தேதி இரவு பூஜையின்போது, கருவூர் சித்தர் நெல்லையப்பரைக் காண வந்த நிகழ்வு நடந்தது. அப்போது கூட்டம் அதிகம் இருந்ததால் அவரால் நெல்லையப்பரைக் காண இயலவில்லை. 

சிவன் சந்தித்த கருவூர் சித்தர்

கடும் தவத்தால் அஷ்டசக்திகள் பெற்ற கருவூர் சித்தர் எப்போது அழைத்தாலும் சிவபெருமான் அவருக்குக் காட்சியளிக்க வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தார். ஆனால், அவர் அழைத்தும் நெல்லையப்பர் வராததால் கோபம் அடைந்த கருவூர் சித்தர், ’நான் அழைத்தும் வராததால் இந்தத் தலத்தில் இறைவன் இல்லை. அதனால் இங்கு குருக்கும் எருக்கும் முளைக்கட்டும்’ எனச் சாபம் இட்டுவிட்டுச் சென்றுவிட்டார். 

நெல்லையில் இருந்து சென்று மானூரில் தங்கி இருந்த கருவூர் சித்தருக்கு சிவனும் பார்வதியும் நேரில் சென்று காட்சியளித்தார்கள். சித்தர் அழைத்தபோது கோயிலில் பூஜை நடந்ததையும் அப்போது அங்கிருந்து வந்து இருந்தால் பக்தர்களின் வழிபாட்டைப் புறக்கணித்ததாகி விடும் என்பதால் வரவில்லை என கருவூர் சித்தருக்கு சிவபெருமான் விளக்கினார். தனது தவறை உணர்ந்து வருந்திய கருவூர் சித்தரை சிவபெருமான் நெல்லையப்பர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் இட்ட சாபத்தை திரும்பப் பெற்றார். 

இந்த நிகழ்வு மானூரில் இன்று நடைபெற்றது. மானூரைச் சுற்றிலும் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று சிவனை தரிசித்தனர். இந்த திருவிழாவையொட்டி மானூர் பகுதியில் பக்தர்களுக்கு நீர், மோர்ப் பந்தல்கள் அமைத்து பலரும் உதவிகள் செய்தனர். ஆங்காங்கே அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close