Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“புருசன் இல்லாத பொம்பளதானனு, சில பாழாப்போன ஆம்பளைங்க நினைக்குறாங்க!'' ஆட்டோ ஓட்டும் வசந்தா

சென்னை, அண்ணா சாலையில் பரபரப்பாகக் கடந்து கொண்டிருந்த மனிதர்களுக்கும் வாகனங்களுக்கும் மத்தியில் நானும் ஒரு அவசர வேலையாகச் சென்றுகொண்டிருந்தேன். அந்த வழியாக வந்த ஆட்டோக்கள் அனைத்தும் வேகமாக வரும் வாகனங்களையும் பொருட்படுத்தாமல் அசால்ட்டாகப் போய்க்கொண்டிந்தன. 

'என்னடா இது... 10 நிமிஷத்துக்கும் மேல வெயிட் பண்றோம். ஒரு ஆட்டோவும் நிக்கமாட்டேங்குதே' என்று புலம்பிக்கொண்டிருந்தபோது எதிரில் வந்த ஆட்டோவை கைகாட்டி அழைத்தேன். வழக்கமான ஆட்டோக்கள்போல சர்ரென வளைக்காமல், சிறிது நேரம் அங்கேயே காத்திருந்து, வாகனங்களின் வரத்து ஓரளவு குறைந்தபிறகே சாலையைக் கடந்து வந்தது அந்த ஆட்டோ. அருகே வந்ததும்தான் அதன் ஓட்டுநர் பெண் என்பதைப் பார்த்தேன். 

ஆட்டோ வசந்தி

ஆட்டோவில் ஏறியதுமே, “நான் ஒரு அவசர வேலையா போகணும். நீங்க ரோட்டை க்ராஸ் பண்ணவே அஞ்சு நிமிஷத்துக்கு மேல வெய்ட் பண்ணுனீங்களே... சரியான நேரத்துக்கு என்னைக் கொண்டுபோய் விட்டுடுவீங்களா?' என்றேன். பதிலாக ஒரு சிரிப்பை மட்டுமே தந்தவர் தன் ஆட்டோவை முறுக்கிவிட்டார். 'சர் சர்'ரென அண்ணா சாலையைத் தாண்டி சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து வேகமாக விரைந்துகொண்டிருந்தது ஆட்டோ. ஆனால், அந்த வேகத்திலும் நிதானம் இருந்தது. ஆட்டோவை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ''இவ்ளோ நல்லா ஆட்டோ ஓட்டுறீங்க..! நான்கூட மொதல்ல உங்கள கேலியாத்தான் நினைச்சேன்" என்றேன். 

''தம்பி, நான் 10 வருஷமா ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கேன். இந்த மெட்ராஸுல இருக்குற எல்லா எடமும் எனக்கு அத்துப்பிடி. எங்க, எப்படிப் போகணும், எவ்ளோ வேகத்துல போகணும்ங்கிறதெல்லாம் நல்லாவே தெரியும். இங்க எல்லாருக்கும் எல்லாத்துலயும் அவசரம்தான். ஆனா, அவங்க பதட்டப்படுறாங்களேன்னு நான் வண்டிய தாறுமாறா ஓட்டிட்டுப் போக முடியாதுல்ல..? நீ நின்னுக்கிட்டு இருந்த இடத்துல வண்டிகளெல்லாம் ரொம்ப வேகமா வரும். அதனாலதான் கொஞ்சம் நிதானிச்சு வந்தேன். எப்ப, என்ன நடக்கும்னு நமக்கு என்னப்பா தெரியும்? முடிஞ்சளவுக்கு பொறுமையா இருக்கணும் தம்பி. நம்மளால மத்தவங்களுக்குத் தொல்லையாகிடக்கூடாதுல்ல?!” - அவருடைய பேச்சில் தெளிவும் நிதானமும் இருந்தது.  ஆட்டோவை செல்லும் பாதைக்கு ஏற்ப வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் ஓட்டிச்சென்றதில் வெளிப்பட்டது அவர் தொழில் நேர்த்தி.  

அவர் பெயர் வசந்தா என்பதையும் சென்ட்ரல் பகுதியைச் சேர்ந்தவர் என்பதையும் ஆட்டோவில் ஒட்டியிருந்த ஓட்டுநர் விவரத்தை வைத்துத் தெரிந்துகொண்டேன். நான் செல்லும் இடம் வர இன்னும் கொஞ்ச நேரம் இருந்ததால் தொடர்ந்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். 

ஆட்டோ பெண்

“சென்ட்ரலாண்ட இருக்குற பல்லவன் சாலையிலதான் கண்ணு என் வீடு. ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. என் வீட்டுக்காரரு 15 வருசத்துக்கு முன்னாடியே இறந்துபோயிட்டாரு. அப்போ மூணும் சின்னப் புள்ளைங்க. அதுங்களை வளக்குறதுக்காண்டி வீட்டு வேலைக்கும் கொத்து வேலைக்கும் போனேன். வீட்டு வேலை பாக்குற எடத்துல ஓனர் அம்மா நல்லவங்களா இருந்தாங்க. ஆனா, அவங்க வீட்டுக்காரரு தப்பானவரா இருந்தாரு. கொத்து வேலை பாக்குற எடத்துல ஐயா நல்லவரா இருந்தாரு. ஆனா, கூட வேலை பாக்குறவங்க வேற மாதிரி நடந்துக்கிட்டாங்க. புருசன் இல்லாம தனியா இருக்குற பொம்பள... என்ன பண்ணுனாலும் ஒத்துழைச்சுப்பான்னு சில பாழாப்போன ஆம்பளைங்க நினைக்குறாங்க. அதனாலதான், இனி யார்ட்டயும் வேலை பாக்கக்கூடாது, சொந்தமா எதாவது செய்யணும்னு முடிவு பண்ணி ஆட்டோ ஓட்ட கத்துக்கிட்டேன். 

எங்க வீட்டான்ட வெள்ளக்காரங்க ஒரு ட்ரஸ்ட் நடத்துறாங்க. அவங்க மூலமாத்தான் ஆட்டோ கெடைச்சது. ரெண்டு லட்ச ரூவா வண்டி. ஆட்டோ கைக்கு வந்த ரெண்டு வருசத்துலயே கொஞ்சம் கஷ்டப்பட்டு அந்த ரெண்டு லட்ச ரூபாயை அடைச்சேன். என் பசங்களை ப்ளஸ் டூ வரை படிக்க வச்சேன். பொண்ணை கல்யாணம் கட்டிக் கொடுத்தேன். எல்லாமே கை காய்ச்சுப்போக இந்த ஆட்டோ ஓட்டுன காசுலதான் நடந்துச்சு” என்றவரிடம், ''ஆட்டோ ஓட்டும்போது ஏதாச்சும் பிரச்னையாச்சாம்மா..?" என்றேன். 

“இந்த 10 வருசத்துல எந்தப் பிரச்னையும் வந்ததில்ல தம்பி. இங்க நல்லவங்களும் இருக்காங்க, கெட்டவங்களும் இருக்காங்க. எல்லாமே நாம நடந்துக்குற முறையிலதான் இருக்கு. இந்த ஆட்டோவ ஓட்டுற மாதிரிதான் தம்பி என் வாழ்க்கையையும் ஓட்டிக்கிட்டு இருக்கேன். பிரச்னை வரும்னு தெரியுற இடத்துல நிதானத்தைக் கையாண்டா அதைக் கடந்து போயிக்கிட்டே இருக்கலாம்!” 

இறங்கியபோது, இந்த 20 நிமிட ஆட்டோ பயணமும் வசந்தா அம்மாவின்  அனுபவ வார்த்தைகளும், எனக்குக் கொஞ்சம் வாழ்க்கைக் பாடம் கற்றுக் கொடுத்திருந்தன. 'வர்றேன் தம்பி...' என்று ஆட்டோவை முறுக்கிச் சென்றார் வசந்தா அம்மா!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close