Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'10 கோடி பணத்தை விட 100 புத்தகங்கள் இருப்பதுதான் பெரியது' - இயக்குநர் மிஷ்கின் பேச்சு

நேஷ்னல் புக் டிரஸ்ட் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் இணந்து மாபெரும் புத்தகத் திருவிழாவை திருவண்ணாமலையில் நடத்தின. புத்தகத் திருவிழாவின் கடைசி நாளில் திரைப்பட இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, "புத்தகத் திருவிழாவின் கடைசி நாள்தான் அறிவின் முதல் நாள். வாழ்க்கையில் மக்கள் காட்சிப் படிவங்களாக இருக்கிறார்கள். உண்மையில் வாழ்க்கை 10 ஆயிரம் பக்கங்களைக் கொண்டது. இன்றைய காலக்கட்டத்தில் புத்தக வாசிப்பு பலருக்கு தூக்கத்தை கொடுக்கிறது. அதேசமயம் டிவி பார்ப்பது எந்த அலுப்பையும் கொடுப்பதில்லை. இப்போது பெற்றோர்கள், நல்ல விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க நேரமில்லை. நான் பேன்ட், சர்ட் போட்ட ஆண் பாட்டி. வாழ்நாள் முழுவதும் நான் கதை சொல்வேன். நான் 72 தொழில் செய்திருக்கிறேன். நான் செய்யாத தொழிலே கிடையாது. அவை என் வயிற்றுப் பிழைப்புக்காக செய்தேன். 73-வது தொழில்தான் சினிமா.

6-வயது சிறுவன் சினிமாவைப் பார்த்து தனது தலைவனைக் கண்டுபிடிக்கிறான். 60 வருடமாகியும் நாம் நமக்கான தலைவனைக் கண்டு பிடிக்கவில்லை. மனம் இளக்கமாக, அறிவுத் திடமாக மாற புத்தகம் வாசிக்கவேண்டும். குழந்தைகள் நல்ல இலக்கியங்களைப் படித்தால் அவர்களது வாழ்க்கை நீளும். அதைதான் இலக்கியங்கள் கற்றுக் கொடுக்கிறது. கோபத்தை கையாள இலக்கியம் கற்றுக் கொடுக்கிறது.10 கோடி பணம் இருப்பதை விட 100 புத்தகம் இருப்பதுதான் பெரியது. குழந்தைகளைப் பற்றிதான் அதிக இலக்கியங்கள் வந்துள்ளன. குழந்தைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. குழந்தைகளை இலக்கியங்களைப் படிக்கச் சொல்லுங்கள். 

ஒரு புத்தகம் குடும்பத்துக்கு அவசியம். கோயிலில் பணம் போட்டால் எந்த பிரயோஜனம் இல்லை. பணம் இருத்தால் புத்தகங்களை வாங்கி கிராமங்களுக்கு கொடுங்கள். அறிவைப் பற்றி மட்டும் கவலைப்படுபவன் இலக்கியவாதி. இலக்கியத்தின் வழியே சமூகத்தை உற்றுப் பாருங்கள். வலதுக் கைக்கு தெரியாமல் தர்மம் செய்த கதையை சொல்லிக் கொடுத்த இந்த நாடு. இப்போது கர்சிப் போட்டு சீட் பிடிக்கிறது. இலக்கியவாதிகள் தலைகுனிந்து எழுதி சமூகத்தை தலை நிமிற வைக்கிறார்கள். தேடுதலுக்கான கேள்வி- பதில் இலக்கியத்தில்தான் கிடைக்கும்.

நான் 19 வயது முதல் புத்தகங்களைச் சேர்க்கிறேன். புத்தகங்கள் கலங்கரை விளக்கம், வாழ்க்கைக்கு ஒளி தரும் ஓடம். பத்து ஆண்டுகளில் 25 பேரை புத்தக வாசிப்பாளராக மாற்றி விடுவேன். தோல்வியில் இருந்துதான் வாழ்க்கை தொடங்குகிறது. வெற்றி மறைந்து போகிற விட்டில் பூச்சி. பிள்ளைகளை கலைஞராக வளருங்கள். எப்போதும் கலைஞன் குழப்புவான். அதனால்தான் அவன் கலைஞன். டால்ஸ்டாய் கதைகள் தற்கொலையில் இருந்து திருப்பும்.150 ரூபாய் கொடுத்து சினிமா பார்க்கும் இந்த சமூகத்துக்காக நல்ல கதைகளை நான் யோசிக்கிறேன். குழந்தைகளை அறம் சார்ந்த புத்தகங்களைப் படிக்கச் சொல்லுங்கள். இருட்டை வெளிச்சமாக மாற்றுவது புத்தகங்கள் மட்டும்தான்" என்று பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close