Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிளைக்கழித்தல் எனும் ஏமாற்றுவேலை... யாருக்காக செய்யப்படுகிறது? #SaveTrees

சாலையோரம் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் மரம் ஒன்றின் கிளைகளை நெடுஞ்சாலைத் துறையினர் வெட்டிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தி அவர்களிடம் விவரம் கேட்டுப்பாருங்களேன், `கிளைக்கழித்தல் செய்கிறோம்.!` என்பார்கள்.

அதென்ன கிளைக்கழித்தல்?

சாலையோர மரங்களின் கிளைகள் போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்து நிற்கும் போது அக்கிளைகளை வெட்டிவிடுவதே கிளைக்கழித்தல். மின்கம்பியில் மரக்கிளை படும்போது அதனை வெட்டிவிடுவதும் இதன் ஒரு வகைதான். இதை ’கவாத்’ செய்தல் என்றும் கூறுவார்கள். ஆனால், சாலையில் நடக்கும் கிளைக்கழித்தலே பெரும்பாலும் நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக நகரத்திற்குள் இருக்கும், ஐம்பது வருட பழமையான பிரம்மாண்ட மரங்களில் மட்டும் தான் இந்த கிளைக்கழித்தல் அதிகமாக நடந்து வருகிறது. ஏனென்றால், பெரிய மரங்களின் பெரிய கிளைகளை வெட்டினால் தானே அது நல்ல விலைக்கு போகும்?

கிளைக்கழித்தல்

யாருக்காக கிளைக்கழித்தல்?

“மரக்கிளைகள் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது, எனவே அதனை வெட்டிவிடுவது இயல்பு தானே” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தக் கிளைக்கழிப்பு பொதுமக்களின் வசதிக்காக நடப்பதில்லை. நகரத்திற்குள் வரும் பெரிய சரக்கு வாகனங்களுக்காகத்தான் நடக்கிறது. அடிக்கட்டை உயரம் சுமார் 18 அடி வரை இருக்கும். அதன் பிறகே கிளைகள் வளர்ந்திருக்கும். இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், வேன் என எல்லா வாகனங்களையும் வரிசையாக  கணக்கு போட்டாலும், அதன் மீது அளவுக்கு மீறிய சரக்குகளை ஏற்றினாலும், அதிகபட்சம் 15 அடிக்கு மேல் அதன் உயரம் செல்லாது. ஆனால் இயல்பாகவே 14 அடி உயரம் வரை கொண்ட பெரிய சரக்கு லாரிகள், தன் மீது சரக்குகளை ஏற்றிக்கொண்டு வரும் போது நிச்சயம் சாலையோர மரக்கிளைகளில் மோதவே செய்யும். ஒரு லாரியின் மீது மரக்கிளை தட்டினால் அவ்வளவு தான். அன்று மாலையே அந்த மரத்தில் கிளை இருக்காது. அடியோடு வெட்டப்படும். அதனோடு சேர்ந்து இரண்டு மூன்று கிளைகள் வெட்டப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஏன் வருகின்ற சரக்கு வாகனங்கள்?

நகரத்திற்குள் வரும் சரக்கு வாகங்கள் எவ்வளவு எடை சுமந்துவர வேண்டும். எவ்வளவு வேகத்தில் வர வேண்டும், எந்தெந்த நேரங்களில் வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்த போதும். அதனை முறையாக பின்பற்றுவதில்லை. பல நகரங்களில் சரக்கு வாகனங்கள் உள்ளே நுழையாமல், புறவழிச்சலைகள் மூலமாக செல்ல வழிவகை செய்யப்பட்டும் கூட ஆக்கிரமிப்பு, மோசமான பராமரிப்பு காரணங்களால் புறவழிச்சாலையை பயன்படுத்தால் நேராக நகரத்திற்குள் வந்துவிடும். சென்னை உள்பட பல நகரங்களில் இதுதான் நிலைமை. சாலை விதிகளை மறந்து, கட்டுப்பாடுகளை புறந்தள்ளி நகரத்திற்குள் நுழையும் சரக்கு வாகனங்களுக்காக பழமையான மரங்களின் பிரம்மாண்ட கிளைகள் வெட்டப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

கிளைக்கழித்தலை முறைப்படுத்த வேண்டும்:

பொதுவாகவே மரத்தின் கிளைகளை வெட்டினால் அதன் உயரம் அதிகரிக்கும். மேலும் சில கிளைகள் உருவாகும். அதே நேரம் ஒரு குறிப்பிட்ட வயதுடைய மரத்தின் கிளைகளை வெட்டினால் அதனால் மற்றொரு கிளையை உருவாக்கிக்கொள்ள முடியாது. எனவே, எவ்வளவு வயதுடைய மரங்களில் கிளைக்கழிப்பை செய்யலாம். எத்தனை வயதுக்கு மேல் உள்ள மரங்களில் கிளைக்கழிப்பு செய்யக்கூடாது என்ற வரைவை அரசு உருவாக்க வேண்டும். அதிக வயதுடைய மரங்களை பாதுகாக்கும் நோக்கில், கொள்கை ரீதியான ஒரு முடிவை எடுக்க வேண்டும். என்னதான் வளர்ச்சிப்பணி என்றாலும் ஆரோக்கியமாக வாழ சுத்தமான காற்று முக்கியம். அதற்கு மரங்கள் அவசியம்.

கிளைக்கழித்தல்

நான்கு வழிச்சாலைகள், அதிவேக விரைவுச் சாலைகள் என சாலைகளின் பரப்பை அதிகரிப்பதாக காரணம் கூறி நகரங்களுக்குள் இருக்கும் முக்கால்வாசி மரங்களை வெட்டிவிட்ட சூழலில், இருக்கும் சில மரங்களையாவது விட்டுவைக்கலாமே. அதிகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை, அதனால் அதிகமாக வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்ஸைடு. அதன் மூலம் உயரும் வெப்பநிலை என வாழத்தகுதியற்ற சூழலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் போது, நம்முடன் இருக்கும் சில மரங்களையாவது பாதுகாத்து பயணிப்போமே!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close