Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘படைப்புக் குழுமம்’ - இது ஃபேஸ்புக் கவிதையாளர்களின் புரட்சிப் படை!

ஒரு மாலை நேரத்து காபி டைமில் உருவான சின்ன ஐடியாதான் இந்தப் ‘படைப்புக் குழுமம்.’ 

கவிதைகள் மீது ஆர்வம் இருப்பவர்களுக்காக ஃபேஸ்புக்கில் வெறும் 20 பேரை வைத்து தொடங்கப்பட்ட இந்தப் படைப்புக் குழுமத்தில், தற்போது 20,000 பேருக்குமேல் இருக்கிறார்கள். அவர்கள் ஃபேஸ்புக்கில் எழுதிய பல கவிதைகளையும் தொகுத்து கடந்த வாரம் எட்டு நூல்களாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கவிதைப் புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்தும் கவிதை ஆர்வலர்கள் வந்திருந்ததுதான் நிகழ்ச்சியின் ஹைலைட். “இது, ஃபேஸ்புக் கவிதையாளர்களின் புரட்சி” என்றார்கள் விழாவுக்கு வந்தவர்கள்.  

படைப்புக் குழுமம் கவிதை

இது அத்தனைக்கும் காரணம், ஐ.டி துறையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஜின்னா அஸ்மிதான். அவர்தான்  இந்தப் படைப்புக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர். அவர் இந்தப் படைப்புக் குழு தோன்றிய கதையையும் அந்த விழாவைப் பற்றியும் விளக்கினார்.

“ஜின்னா அஸ்மி என்ற பெயரில் முகநூலில் கவிதைகளை எழுதிவருகிறேன். எல்லோரையும்போலவே நானும் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, படித்து... இன்று கணினித் துறையில் பெங்களூரில் வசித்துவருகிறேன். கவிதைகள்மீது தீராத ஆவலும் காதலும் கொண்டிருந்ததால், என்னுடைய 18-வது வயதிலேயே ‘வெளிச்சத்தின் முகவரி’  என்ற கவிதை நூலை வெளியிட்டேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது மாநில அளவில் நடந்த கவிதைப் போட்டியில் முதல் பரிசு வென்றதுதான், எனது கவிதைப் பயணத்துக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

எந்த நாட்டில் இருந்தாலும் ஒருவர் பதியும் கவிதையை அடுத்த நொடியிலேயே நாம் படித்துவிடும் மாயத்தை இந்த இணையம் நமக்குத் தருகிறதே. இதை வைத்து `கவிதைகளை மட்டுமே எழுதிப் பகிரும்/பதியும் ஒரு குழுவை, நாம் ஏன் தொடங்கக் கூடாது' எனச் சிந்தித்தேன். இப்படிப் பல யோசைனைகளுக்கு மத்தியில், ஒருநாள் நண்பர்களுடன் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது யதேச்சையாக வந்த யோசனைதான் இது. தமிழ் ஆர்வமுள்ள மக்களுக்காக உலகம் முழுக்க பொதுவான குழு ஒன்றை ஆரம்பித்து, அதற்கு `படைப்பு' எனப் பெயரிட்டு, கடந்த  2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முகநூலில் `படைப்பு குழு'வைத் தொடங்கினேன். 

இலக்கிய வட்டத்தில் உள்ள என் நண்பர்கள் 20 பேரை இணைத்து உருவாக்கிய குழு, இன்று 20,000 உறுப்பினர்களை கடந்து நிற்கிறது. தொடங்கிய காலத்தில் அனைவரும் தங்களுடைய கவிதைகளைப் பதியத் தொடங்கியதும் ஆர்வமாகக் கருத்திட்டு உற்சாகப்படுத்தினோம். இருப்பினும் அவர்களை வெறும் பின்னூட்டங்கள் மட்டுமே உற்சாகப்படுத்தப்போவதில்லை என உணர்ந்து, குழுவில் பதியப்பெற்ற சிறந்த கவிதைகளைத் தொகுத்து ஒரு மின்னிதழாக வெளியிட்டோம். அந்த மின்னிதழை முகநூல் நண்பர்களுக்கும் பகிர்ந்துவிட, பல நண்பர்கள் இணையத் தொடங்கினார்கள்.

படைப்புக் குழுமம் கவிதை

மின்னிதழை வெளியிட்டதும் அதில் வெளியான சிறந்த கவிதைகளில் யாருடைய கவிதை மிகச் சிறப்பு, யார் சிறந்த படைப்பாளி என அங்கீகரிக்கத் தோன்றியது. இதற்காக ஒரு சான்றிதழைத் தயார் செய்தோம். இந்த அங்கீகாரத்தின் அடுத்த நகர்வுதான் விருது. படைப்பாளிகளின் கவிதைகள் விருதுக்குத் தகுதியானவையா என்பதை  மக்களுக்குப் புரியவைக்க வேண்டுமென்றால், அந்தப் படைப்புகளை ஆய்வுசெய்ய வேண்டும். இதன்படி மாதம் ஒரு படைப்பாளியின் மொத்த படைப்புகளையும் அலசி ஆராய்ந்து அவர்களின் கவிதைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்க  ஆய்வுக் கட்டுரை எழுதி, பிறகு `கவிச்சுடர்' என்ற விருதை அளிக்கலாம் என முடிவுசெய்து விருது கொடுக்கத் தொடங்கினோம். 

இந்தப் புதுமைகள், படைப்புக் குழுமப் படைப்பாளிகளிடையே ஒருவித எதிர்ப்பார்ப்பையும் நம்பிக்கையையும் எழுப்பின. படைப்பாளிகளிடையே பரிசுப் போட்டிகளை நடத்தி, கவிக்கோ அப்துல் ரகுமான் அய்யா பிறந்த நாளில் பரிசு வழங்கினோம். கவிக்கோவின் இறுதி காலத்தில், அவருக்குப் பிறந்த நாளைக் கொண்டாடிய வரலாற்றுப் பெருமை படைப்புக் குழுமத்தையே சேரும்.

சமீபத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் சிறந்த கவிதை படைப்பாளிகளுக்கான விழா நடைப்பெற்றது. விழாவுக்கு வந்திருந்த படைப்பாளிகளைப் பார்த்து சிறப்பு விருந்தினர் பாடலாசிரியர் யுகபாரதி, `'ஜல்லிக்கட்டுக்குப் பிறகு தமிழகத்தில் தமிழ் ஆர்வம் உள்ள இத்தனை மனிதர்கள் ஒரே இடத்தில் கூடினார்கள் என்றால், அது படைப்பு ஆண்டு விழாவாகத்தான் இருக்கும்' மகிழ்ந்ததாகக் கூறினார்'' ஜின்னா.

தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் குறிப்பாக சீனா, இலங்கை, பஹ்ரைன், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலிருந்து பல படைப்பாளிகள் விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில், `இந்தப் பூமிக்கு வானம் வேறு', `நிசப்தங்களின் நாட்குறிப்பு', `இலைக்கு உதிரும் நிலம்', `நிலவு சிதறாத வெளி', `நினைவிலிருந்து எரியும் மெழுகு', `உடையாத நீர்க்குமிழி',  `நதிக்கரை ஞாபகங்கள்', `மௌனம் திறக்கும் கதவு' என எட்டு கவிதை நூல்களையும் வெளியிட்டனர்.  

சிறப்பு விருந்தினர்களாக  கவிஞர் யுகபாரதி, கவிஞர் சல்மா, தமிழன் பிரசன்னா, ஈரோடு மகேஷ், பாடலாசிரியர் அறிவுமதி, இயக்குநர் பிருந்தா சாரதி, கவிஞர் அருண்பாரதி, இயக்குநர் ஆண்டாள் செழியன், கவிஞர் காசி முத்துமாணிக்கம், கவிஞர் இசாக், துணை ஆட்சியர் ரவிக்குமார் (ஆண்டன் பெனி), கவிஞர் அகன் போன்றோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். “250 கவிஞர்களுக்குமேல் ஒரே இடத்தில் காண்பதே ஒரு படைப்பின் சாதனை” என்று கவிஞர் ஈரோடு தமிழன்பன் பெருமிதம்கொண்டார்.

“உறுப்பினர்களின் கூடிவரும் எண்ணிக்கையை மனதில்வைத்து இந்தக் குழுமம் வளர்ந்து விரைவில் ஒரு வலைதளமாக உருவெடுக்கும் காலமும் நெருங்கிவருகிறது” என்கிறார்கள் இந்தப் படைப்பு குழுமத்தில் உள்ளவர்கள். 
 
வாழ்த்துகள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close