Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''அனிதாவுக்குச் செய்ய வேண்டிய கைம்மாறு என்ன..?'' - வேல்முருகன்

வேல்முருகன்


''கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வந்தால்தான், அனிதாவின் மரணம் போன்று இனி நடக்காமல் தடுக்க முடியும். நடந்துவிட்ட அவரது மரணத்துக்கும் நீதியைப் பெற முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இதுவே அனிதாவுக்கு நாம் செய்யும் கைம்மாறாகும்'' என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நீட் தேர்வால் மாணவி அனிதாவுக்கு ஏற்பட்ட மரணம் தற்கொலை அல்ல; கொலை. ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் சேர்ந்து நடத்திய படுகொலை. அதாவது, நடுவண் பா.ஜ.க மோடி அரசு, தமிழக அ.தி.மு.க எடப்பாடி அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை நடத்திய கூட்டுக் கொலை. இதைத் தற்கொலை என்பார்களானால் அப்படிச் சொல்பவர்களும் இந்தக் கொலைக்கு உடந்தையானவர்களே. அனிதாவின் படுகொலைக்குக் காரணமே மாநில அதிகாரங்கள் பட்டியல் பிரிவு 11-ல் இருந்த கல்வியை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பொதுப் பட்டியலுக்கு எடுத்துக்கொண்டதுதான். தன் சொந்த காரணங்களுக்காக அவசரநிலை பிறப்பித்த அவர், 1976-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி அரசியல் சாசனம் 42 வது சட்டத் திருத்தத்தின் மூலம் இதைச் செய்தார். மருத்துவக் கல்வி உள்பட உயர் கல்வித்துறையே மாநிலங்களின் கைவிட்டுப்போனது.

இப்போது மாணவி அனிதாவின் மரணத்தால், நீட்டை விலக்க தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியான போராட்டம் வெடித்துள்ளது. அதில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இணைந்துள்ளது. அதேநேரம் போராட்டங்கள் குறித்த மோடி அரசின் அணுகுமுறையை ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் பார்த்தோம். இப்போது மாதக்கணக்கில் நடைபெற்றுவரும் நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களிலும் பார்க்கிறோம். ஜல்லிக்கட்டுகூட தமிழ்நாட்டில் மட்டும்தான் நடத்த முடியும். பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் நினைத்தால் அங்கெல்லாம் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது. எனவே, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தினால் ஜல்லிக்கட்டுக்கு முழு சுதந்திரமோ விடுதலையோ கிடைத்துவிடவில்லை என்பதுதான் உண்மை. எதனால் இப்படி என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அதற்குரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

தமிழகத்தின் பிரச்சனைகளுக்கெல்லாம் நடுவண் அரசே காரணமாய் இருக்கும்போது அதற்கான போராட்டங்களை எப்படி அது கண்டுகொள்ளும். எனவே, தமிழ்நாட்டின் தன்னாட்சிக்கான போராட்டம்தான் பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வாக இருக்க முடியும். இதுவே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுதியான நிலை. அதன் மூலமே கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர முடியும். அனிதாவின் மரணம் போன்று இனி நடக்காமல் தடுக்க முடியும். நடந்துவிட்ட அவரது மரணத்திற்கும் நீதியைப் பெற முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இதுவே அனிதாவுக்கு நாம் செய்யும் கைமாறாகும் என்பதையே வலியுறுத்திச் சொல்கிறோம்'' என்று கூறியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close