Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆணவக் கொலை குற்றவாளிகளின் ஜாமீனை ரத்துசெய்ய வேண்டும்: மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை!

'ஆணவக் கொலை குற்றவாளிகளின் ஜாமீனை ரத்துசெய்ய வேண்டும்' என்று மக்கள் உரிமை கூட்டமைப்புச் செயலாளர் சுகுமாரன் மற்றும் மனித உரிமைக் காப்பாளர் பாபு ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள், "கடந்த 2003-ம் ஆண்டு, கடலூர் மாவட்டம் புதுகூரைப்பேட்டையைச் சேர்ந்த முருகேசன் - கண்ணகி இருவரும் சாதி மாறி திருமணம் செய்துகொண்டனர். இதற்கு, கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இருவரின் காதுகளிலும் விஷத்தை ஊற்றி கொலைசெய்து உடலை எரித்துவிட்டனர். 2004-ம் ஆண்டு, இவ்வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இதில், கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டியன் உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தது. தற்போது இவ்வழக்கு விசாரணை, கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 28-ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதுவரை எட்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு பிறழ் சாட்சியளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ போலீஸார், குற்றவாளிகள் சாட்சிகளை மிரட்டுவதாக, அதற்கான செல்போன் உரையாடலை ஆதாரமாகவைத்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


முருகேசன் - கண்ணகி கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த முக்கிய சாட்சியான செல்வராஜ், கடந்த 31-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். குற்றவாளிகள் மிரட்டியதால்தான் தற்கொலை செய்துகொண்டார் என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். குற்றவாளிகள் சமூகரீதியாக செல்வாக்கு உடையவர்கள் என்பதோடு, பண பலம் படைத்தவர்கள். அவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க, சாட்சிகளை மிரட்டிவருகின்றனர். இந்நிலையில், குற்றவாளிகள் வெளியில் இருந்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படுவதோடு, முறையாக நடைபெறாது. சாட்சிகளும் தைரியமாக சாட்சியளிக்க முன்வர மாட்டார்கள். அதனால், சாட்சிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இவ்வழக்கில் உள்ள குற்றவாளிகளின் ஜாமீனை ரத்துசெய்ய சி.பி.ஐ சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்கள்.
                              

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close