Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரட்டை இலை இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க எடப்பாடி பழனிசாமி அச்சம்!

எடப்பாடி

தி.மு.க அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி-யுமான ஆலந்தூர் பாரதி, பாடம் நாராயணன் ஆகியோர் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 4-ம் தேதி தீர்ப்புச் சொல்லி இருக்கிறது.

அரசு தயாராகவில்லை

அந்தத் தீர்ப்பில்,  எந்தவித சமாதானமும் சொல்லாமல் வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். அப்படியும் கூட தமிழக அரசு வழக்கறிஞர், இன்னும் கொஞ்ச நாள்களுக்குத் தேர்தலைத் தள்ளிப்போட வேண்டும் என்றார். 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில் வார்டுகளின் வரையறைப் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால், டிசம்பர் 31 வரை அதற்கு அவகாசம் தேவை என்றும், 2018 ஜனவரியில் தேர்தல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூறினார். ஆனால், இதனை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழக அரசின் வழக்கறிஞரின் வாதத்தை வைத்துப் பார்க்கும்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எடப்பாடி அரசு தயாராக இல்லை என்பது அப்பட்டமாகத் தெரியவருகிறது.  
அரசுக்கு அவமானம்

இதுகுறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் கேட்டோம். "அரசியல் சட்டத்தின் படி, அரசியல்வாதிகள்தான் ஆட்சி நிர்வாகத்தை நடத்துகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க அணிகள் இணைப்பு, உட்கட்சி பிரச்னை இவற்றின் காரணமாக, ஆளும் கட்சியினர் ஆட்சியில் கவனம் செலுத்தவில்லை. இதனால், ஓட்டுநர் உரிமம், காவிரி பிரச்னை உள்ளிட்ட எல்லாப் பிரச்னைகளிலும், இப்போது நீதிமன்றம் தலையிட்டுத்தான் தீர்வு காண்கிறது. இது அரசுக்கு அவமானம். உள்ளாட்சித் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தேர்தல்.
ஆனால், கட்சியின் பெயர், இரட்டை இலைச் சின்னம் ஆகிய பிரச்னைகளில் அ.தி.மு.க அணிகள் சிக்கி உள்ளன. அ.தி.மு.க என்ற பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு முறையான ஆட்சி நடத்தவில்லை. இதனால், இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் தேர்தலைச் சந்திப்பதற்கு அச்சப்படுகின்றனர்.  எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை இல்லாவிட்டால் இவர்களுக்கு மரியாதை ஏதும் இல்லை. அந்தச் சின்னத்தை வைத்துத்தான் அவர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். எனவே, சின்னம் இல்லாமல் தேர்தல் நடத்த இவர்கள் தயாராக இல்லை. அரசின் எந்தப் பிரச்னைகளையும் இவர்கள் கவனிக்கவில்லை. நீட் தேர்வு பிரச்னை இருக்கும் சூழலில்,  ஆயிரம் டாஸ்மாக் கடைகளைத் திறந்திருக்கின்றனர்.
கட்சியின் துணைப்பொதுச்செயலாளரே ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிசெய்கிறார். இதுபோன்ற விநோதம் இந்தியாவில் வேறு எங்கும் நடப்பதில்லை. இந்த அரசியல் கூத்துகளில் இருந்து தமிழகத்தைப் பாதுகாக்க, நீதிமன்றம் கூறியபடி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் இருக்கும் சூழலில் கூட கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது இல்லை. இப்போது உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகள் கையில் இருக்கின்றன. இனிமேலும் தேர்தல் நடத்தாவிட்டால், உள்ளாட்சி அமைப்புகளின் நிலை கேள்விக்குறியாகி விடும்" என்றார்.

நிதி நெருக்கடி

ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சமேளனத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கணேசன், "உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆறு மாதங்களாக நிதி ஒதுக்கவில்லை. தெருவிளக்குகளுக்கான மின் கட்டணம் செலுத்தவில்லை. மின்சார வாரியத்தின் கருணையால்தான் தெருவிளக்குகள் எரிகின்றன. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. எந்தவித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளவில்லை. மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி வீடுகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.  ரிப்பேர் ஆன, ஆழ்துளை கிணறுகளின் மோட்டார்களை சரி செய்யவில்லை. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
சட்டமன்றத்தின் அறிவித்த நிதியைக் கூட நிதி நெருக்கடி காரணமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு வழங்கவில்லை. தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். தேர்தலுக்குப் பின்னர் வரும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள்தான் அரசிடம் நிதியைக் கோரிப் பெற முடியும். கட்சி சின்னம் கிடைக்காததால், அவர்கள் தேர்தலைத் தாமதப்படுத்துகின்றனர். தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய குரலாக இருக்கிறது."
இதற்கிடையே, மாநில தேர்தல் ஆணையத்தைத் தொடர்புகொண்டு, உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் எப்போது நடக்கும் என்று கேட்டோம். "இன்னும் அதற்கான ஆலோசனைகள் தொடங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் உள்ள உள்ளாட்சித் தேர்தல் வழக்கின் தீர்ப்புக்கு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக் கட்டுப்பட்டது என்று நீதிபதிகள் சொல்லி இருக்கின்றனர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 6-ம் தேதி வெளியாக உள்ளது. அதுவரை காத்திருக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close