Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"டாக்டர் ஆக முடியலைனு அனிதா அக்கா செத்துட்டாங்களா?" அரசுப் பள்ளி மாணவர்களின் ஆதங்கம்

அனிதா

தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறை செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பலரில் அரியலூர் அனிதாவும் ஒருவர். மருத்துவம் படிக்க வாய்ப்புப் பறிக்கப்பட்டதாகக் கருதி, தன் உயிரையே நீத்துள்ளார். தமிழகம் முழுவதும் இந்த விஷயம் பரவலாக விவாதிக்கப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கோரி தங்கள் குரலை உரக்க ஒலித்து வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்ட அரசுப் பள்ளியில் அனிதாவுக்கு மாணவர்கள் செலுத்தியிருக்கும் கண்ணீர் அஞ்சலியும் அவர்களது கேள்வியும் நம்மை நெகிழவைத்துள்ளது. 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மாணவர்கள்தான் அனிதாவுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர்கள். அந்தப் பள்ளியின் ஆசிரியர் கோபிநாத் இதுகுறித்து பேசினார். 

"நான் காலையில் பள்ளிக்கு வந்தபோது மாணவர்கள் பலரும் அனிதா பற்றி பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. வகுப்பறையின் கரும்பலகையில் அனிதாவின் உருவத்தை ஓவியமாக வரைந்தேன். வரைந்துகொண்டிருந்தபோதே 'இது அனிதா படம்தானே' என மாணவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். 

ஓரிரு மாணவர்களைத் தவிர மற்றவர்கள் உரத்தக் குரலில் 'அனிதா' எனக் கூறினர். இவரின் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது?' என்றேன். டிவி-யில் பார்த்ததாகவும் வீட்டில் பெற்றோர் பேசிக்கொண்டிருந்ததாகவும் கூறினர். ஒரு மாணவன் எழுந்து, "சார், டாக்டராக முடியலைன்னுதான் அனிதா அக்கா செத்துட்டாங்களா?' என்றான். 

அவனின் கேள்வி எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. சிறுவர்களாக இருந்தாலும் இவ்வளவு விவரமாகத் தெரிந்துகொண்டிருக்கிறார்களே என நெகிழ்ந்தேன். 'இவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றைச் சொல்லுங்க' என்றதும், பல மாணவர்களும் தங்களுக்குத் தெரிந்தவற்றைக் கூறினர். 

அனிதா அரசுப் பள்ளி

அனிதா ஏழை வீட்டுப் பெண். 12-ம் வகுப்பு எக்ஸாம் எழுதி பாஸ் செய்தவர். ஆனால், டாக்டருக்குப் படிக்க முடியவில்லை என இறந்துவிட்டார் என்பதே அவர்கள் சொன்னதன் சாராம்சம். சில மாணவர்களுக்கு நீட் எனும் தேர்வின் பெயர் மட்டும் தெரிந்திருந்தது. பிறகு, நான் அவர்களுக்குச் சில செய்திகளைக் கூறினேன். 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களைக்கொண்டு மருத்துவம் படிக்கத் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், இந்த முறை நீட் எனும் நுழைவுத் தேர்வில் எழுத வேண்டும் எனும் புதிய நடைமுறை வந்தது. அதில், அனிதாவால் அதிக மதிப்பெண் பெறமுடியாததால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை' என்று விளக்கினேன். 

நான் கூறி முடித்ததும் ஒரு மாணவி எழுந்து, 'அனிதா அக்கா மார்க் கம்மியாக எடுத்துட்டாங்களா?" என்றார். அனிதா 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்று சாதித்தார். ஆனால், நீட் தேர்வில் அனிதா படித்த பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படாததால் தேர்வாக முடியவில்லை' என்றேன். அதன்பிறகும் மாணவர்கள் பல கேள்விகளை எழுப்பினர். 

நகரத்திலிருந்து வெகுதூரம் தள்ளியுள்ள இந்தக் கிராமத்து மாணவர்கள், அனிதாவின் தற்கொலைக் குறித்த செய்திகளைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியது வியக்கவைத்தது. இதை முன்னிட்டு, கல்விகுறித்த சில விஷயங்களை உரையாடலாக வகுப்பில் நிகழ்த்தினோம். இறுதியில், அனிதாவுக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்" என்றார். 

அடுத்தத் தலைமுறை சமகாலச் சூழல்களை அவதானிப்பு ஆரோக்கியமானது. அதைக் கண்டுணர்ந்து நல்ல உரையாடலாக மாற்றம் செய்யும் ஆசிரியரின் பங்கு பாராட்டுக்குரியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close