Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரியில் மோடி, அமித்ஷாவுக்கு சவப்பாடை ஊர்வலம்!

’நீட்’ தேர்வுக்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரியும் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் நடைபெற்ற போராட்டத்தில், பிரதமர், மத்திய அமைச்சர்களின் உருவபொம்மை எரிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

neet protest

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதையடுத்து, தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலங்களில் ’நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. புதுச்சேரியில், கடந்த இரண்டு நாள்களாக வகுப்புகள் புறக்கணிப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை மாணவர்கள் முன்னெடுத்துவருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சுதேசி மில்லில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாணவி அனிதாவின் தற்கொலைக்குக் காரணமான மத்திய அரசு ‘நீட்’ தேர்வுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நீட் எதிர்ப்பு இயக்கம் மற்றும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest

 

தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலிருந்து பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரது உருவ பொம்மைகளைச் சவப்பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கிழக்குக் கடற்கரை சாலை வழியாக எடுத்துச்செல்ல முயன்றபோது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்துநிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

protest

 

அதனால் ஆர்ப்பாட்டத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்டவர்கள், சவப்பாடையில் இருந்த உருவ பொம்மைகளைத் தீயிட்டு எரித்ததோடு, மோடிக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். அதையடுத்து மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரது உருவப் படங்களை அவமானப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக, புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close