Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்செங்கோட்டின் பெருமையைக் காத்த செங்கோட்டு வேலவர்

திருவிளையாடல் புராணத்தில், மதுரையம்பதிக்கு வந்த ஹேமநாதப் புலவரிடம் விறகு விற்கும் எளியோனாக வந்து, ஈசன் வென்ற கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். மதுரை மாநகரின் பெருமையைக் காக்கவே இந்தத் திருவிளையாடல் நடந்ததும் உங்களுக்குத் தெரிந்ததே. அதைப் போலவே, ஈசனின் மகனான செங்கோட்டு வேலவர், திருச்செங்கோடு நகரின் பெருமையை உலகறியச் செய்ய ஆடிய திருவிளையாடல் தெரியுமா?  

திருச்செங்கோடு

திருச்செங்கோடு, தேவாரப் பாடல் பெற்ற ஒரு சிவஸ்தலம். அர்த்தநாரீஸ்வரர், பாகம்பிரியாள் ஆளுகைக்கு உட்பட்ட இந்தத் தலத்தில்,  செங்கோட்டு வேலவர் என்ற பெயரில் முருகன் தனிச் சந்நிதிகொண்டு அருள்பாலிக்கிறார். இந்தச் செங்கோட்டு வேலவரின் மீது தணியாத பக்திகொண்டவர்தான், குணசீலர். ஒருமுறை திருச்செங்கோட்டுக்கு பாண்டிப்புலவரேறு என்ற அறிஞர் ஒருவர் வருகை புரிந்தார். இவரை வாதில் வெல்வது என்பது முடியாத காரியம். கல்வியில் இமயமான இவரை எதிர்த்து, எல்லாப் பகுதி புலவர்களும் தோற்றனர். இந்நிலையில்தான், இவர் திருச்செங்கோட்டுக்கு வருகைதந்தார். அப்போது அவர், தன்னை எதிர்க்க திருச்செங்கோட்டில் யாருமே இல்லை என்ற நிலையில் கோயிலுக்கு வந்தார். அங்குதான், குணசீலர் என்ற முருக பக்தரைச் சந்தித்தார். அவர்களுக்குள் எழுந்த வாதம் இறுதியில் சவாலாக முடிந்தது. குணசீலரை நாளை போட்டிக்கு வர அழைப்பு விடுத்தார் பாண்டிப்புலவரேறு. இது என்ன சோதனை என்று குணசீலன் இரவெல்லாம் பதறிக்கொண்டிருந்தார். 

செங்கோட்டு வேலவர்

மறுநாள் காலை, போட்டிக்காக பாண்டிப்புலவரேறு மலையின்மீது ஏறிக்கொண்டிருக்கும்போது, நாத மலையைப் பார்த்து "இது சர்ப்ப சைலம் என்றால் ஏன் படமெடுத்து ஆடவில்லை என்று பொருள் வரும்படிப் பாடினார். "சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே" என்று பாடி முடித்ததும், அந்தப் பாடலை முடிக்க முடியாமல் திணறினார். எத்தனை யோசித்தும் அடுத்த ஆதி வரவே இல்லை. அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் உடனே, "அது, குமரன் திருமருகன் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே" என்று பாடி வியக்கவைத்தான். ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு இத்தனை அறிவா என வியந்து, அவனைப் பற்றிக் கேட்க, அவனோ, தான் குணசீலரின் கடைமாணாக்கன் என்று சொன்னான். புத்தி தெளிந்தது பாண்டிப்புலவரேறு என்னும் புலவருக்கு. வந்திருப்பது முருகன் என்றும், அவனது அருளைப்பெற்ற குணசீலரை எதிர்ப்பது ஆபத்து என்று உணர்ந்தார். குணசீலரிடம் மன்னிப்பு கேட்டு, செங்கோட்டு வேலவரை வணங்கி விடைபெற்றார் அந்தப் புலவர். மலை அடிவாரத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றும் வைகாசிப் பெருவிழாவில் அந்தச் சம்பவம் நினைவு கூறப்படுகிறது. எளியோர்க்கு எளியோனான செங்கோட்டு வேலவன் கூறிய "யாமிருக்க பயமேன்" என்ற வார்த்தை, சத்தியம்தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close