Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை - மத்திய அரசுக்கு 4 வார காலஅவகாசம்

ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு தொடர்பான அறிக்கையை தாக்கல்செய்ய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 4 வார கால அவகாசம் வழங்கியுள்ளது. 
 

 

நெல்லை – ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் உள்ள ’ஆதிச்சநல்லூர் ‘உலக நாகரிகத்தின் தொட்டில்’ என அழைக்கப்படுகிறது. ஹரப்பா, மொகஞ்சதாரோவை ஆய்வுசெய்த வங்கதேசத்து அறிஞரான பானர்ஜியே, இவற்றுக்கு முன்னோடியாக விளங்கிய நாகரிகம் ஆதிச்சநல்லூர் நாகரிகம்தான் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் ‘மெசபடோமியா’ பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை ஒத்துள்ளதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆதிச்சநல்லூரில் கடந்த 2004 பிப்ரவரியில் நடந்த அகழாய்வில் 115 ஏக்கர் பரப்பளவில் பழைமையான இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதிலிருந்து பழங்கால முதுமக்கள் தாழிகள், பழங்காலப் பொருள்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இதுவரை நடைபெற்ற நான்கு கட்ட அகழாய்வுகள் குறித்து தொல்லியல் துறை அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. இங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருள்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் உள்ளன. 

இந்தநிலையில், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தக் கோரி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்காலப் பொருள்களைக் காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 


அப்போது தொல்லியல்துறையின் இயக்குநர் தரப்பில், ஆதிச்சநல்லூர் பகுதியின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அகழாய்வு ஆகியவை மாநில அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய அரசு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டால் அதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாக பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசுத் தரப்பில் ஏற்கெனவே மேற்கொண்ட அகழாய்வுப் பணிகளின் அறிக்கையைத் தாக்கல் செய்யவும், இதுகுறித்து பதில் அறிக்கை தாக்கல் செய்யவும் 4 வாரகால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிமன்றம், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close