Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

25 கல்லூரிகள்.. 2000 மாணவர்கள்.. தாமிரபரணி ஆற்றைச் சுத்தப்படுத்த களமிறங்கும் புதிய படை!

தாமிரபரணி

தாமிரபரணி நதியைச் சுத்தப்படுத்தும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் வரும் 9-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதில், 25 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழக எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓடி தமிழக எல்லையிலேயே கடலில் கலக்கிறது. ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடும் இந்த ஆறு மாசுபட்டு இருப்பதால், அதைச் சுத்தம் செய்யும் பணியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆர்வம் காட்டினார். அதன்படி கடந்த ஜூலை 16-ம் தேதி தாமிரபரணி ஆற்றைச் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அதில் சுமார் 8 கி.மீ தூரத்துக்கு ஆற்றில் இருந்த குப்பைகள் மற்றும் கழிவுகள் சுத்தம் செய்யப்பட்டன. 

சுத்தப்படுத்தும் பணி

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மீண்டும் தாமிரபரணி நதியைச் சுத்தப்படுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக தூய்மைப்படுத்தும் பணிக்கான வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 25-க்கும் அதிகமான கல்லூரிகளின் மாணவர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசுத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோரைக் கொண்டு இந்தப் பணிகள் நடைபெற உள்ளன.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பல்வேறு கல்லூரிகளின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ’தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் முதல்கட்டப் பணிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தன. அதேபோல இரண்டாம் கட்டப் பணியைச் சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதில் பங்கேற்பவர்களிடம் நதியின் பெருமைகளைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும். அதன் மூலம் அவர்கள் ஆர்வத்துடன் இந்தப் பணிகளில் ஈடுபடுவார்கள். 

ஆலோசனைக் கூட்டம்

ஆற்றில் 25-க்கும் அதிகமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கல்லூரிகள், மற்றும் தொண்டு நிறுவனத்தினர், அரசு ஊழியர்களுக்கு எனத் தனித்தனி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அந்தந்த இடங்களில் அவர்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். சுத்தம் செய்யும் பணிகளை மட்டும் அல்லாமல், குப்பைகள் சேருவதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். அத்துடன், சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் நதியின் பெருமைகளைத் தெரிவித்து குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ளுமாறு தெரிவிப்பது அவசியம். தேவைப்படும் இடங்களில் குப்பைத் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்தப் பணிகளில் 2000-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்க இருக்கிறார்கள். 9-ம் தேதி காலை 7.30 மணிக்குத் தொடங்கும் பணிகள் பகல் 10.30 மணிக்கு முடிவடையும். இதில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இந்தப் பணியில் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும், மாணவ, மாணவியருடன் இணைந்து செயல்பட வேண்டும்’’ எனத் தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close