Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”அனிதாவின் இறப்பு கொடுத்த எழுச்சி கல்விக்கான எழுச்சி”: ஆசிரியை சபரி மாலா

”இன்றைக்கு கல்வியின் பெயரால் வளர்ந்ததாக அறியப்படும் நாடுகள் அனைத்தும் செய்த ஒன்று அனைவருக்கும் ஒரே கல்வி என்பதைத்தான். அப்படியான ஒரு சூழல் இந்தியாவில் ஏற்பட்டால் தவிர எந்தவித மாற்றத்தையும் நம்மால் ஏற்படுத்த முடியாது” என்று அரசுப் பணியை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா தெரிவித்திருக்கிறார்.

சபரிமாலா

’நீட்’ தேர்வுக்கு எதிராகவும் ‘இந்தியா முழுவதும் ஒரே கல்வி’ என்பதை வலியுறுத்தியும் திண்டிவனத்தைச் சேர்ந்த ஆசிரியை சபரிமாலா நேற்று தனது 7 வயது மகனுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஆனால், காவல்துறை அந்தப் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுத்து அவரை அங்கிருந்து வெளியேற்றியது. அதையடுத்து துறை ரீதியாகவும் அழுத்தங்கள் வந்துகொண்டிருந்ததால் இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சென்று தனது பணியை ராஜினாமா செய்திருக்கிறார்.

சபரிமாலா

நம்மிடம் பேசிய ஆசிரியை சபரிமாலா, ”அரசுப் பள்ளி குழந்தைகளோ தனியார் பள்ளிக் குழந்தைகளோ, ஒரே கல்வி முறை பின்பற்றப்படவேண்டும். அதை நடைமுறைப்படுத்திவிட்டு நீங்கள் எவ்வளவு கடுமையான தேர்வுகளை வைத்தாலும் அனிதாவைப் போன்ற மாணவிகள் அதில் வென்று வருவார்கள். அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால், அதைச் செய்யாமல் நடத்தப்படும் இப்படியான பொதுத்தேர்வுகள் மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அரசுப் பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தும் அதில் படிக்கும் மாணவர்கள் வெற்றி பெறாதற்குக் காரணம் இந்தக் கல்வி முறை. நான் அரசு ஊழியை. என் கணவர் மத்திய அரசு ஊழியர். எங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தாலும் அதற்கான கட்டணத் தொகையில் 75% அரசு எங்களுக்குத் தரும். நாங்கள் நினைத்தால் என் பிள்ளைகளை எவ்வளவு பெரிய தனியார் பள்ளிகளிலும் படிக்க வைக்கலாம். அப்படி இருந்தும் பல எதிர்ப்புகளையும் மீறி என் மகனை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் எனக்கு வேலை கொடுத்த அந்த ஏழை மாணவர்களுடன் சேர்ந்து பயணிக்கும்போது ஒரு சமூக மறுமலர்ச்சியும் சமத்துவமும் ஏற்பட்டுவிடாதா என்ற நப்பாசையில்தான். என் மகனுடன் படிக்கும் அந்தப் பிள்ளைகள் டாக்டர், கலெக்டர், இன்ஜினீயர்னு பல்வேறு கனவுகளுடன்தான் அன்றாடம் புத்தகங்களை சுமந்து கொண்டு வருகிறார்கள். பல்வேறு தியாகங்களைத் தாண்டி படிக்கவரும் அந்த பிள்ளைகளுக்கும் நாளை இதே நிலைதானே? இதற்குக் கூட நான் குரல் கொடுக்காமல் வகுப்பறையில் சென்று என்ன பாடத்தை யாருக்கு நான் நடத்தப் போகிறேன் ?

இன்றைக்கு கல்வியின் பெயரால் வளர்ந்ததாக அறியப்படும் நாடுகள் அனைத்தும் செய்த ஒன்று அனைவருக்கும் ஒரே கல்வி என்பதைத்தான். அப்படியான ஒரு சூழல் இந்தியாவில் ஏற்பட்டால் தவிர எந்தவித மாற்றத்தையும் நம்மால் ஏற்படுத்த முடியாது. உண்மையில் அனிதாவின் இறப்பு கொடுத்த எழுச்சி கல்விக்கான எழுச்சி. அதனால்தான் என் 7 வயது மகனுடன் தனியாகப் போராட்டத்தில் இறங்கினேன். ஆனால், அரசு ஊழியராக இருந்தால் போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்று சொல்லிவிட்டனர். என் சமூக மக்களுக்கான குரல் கொடுக்க, போராட இந்த அரசுப் பணிதான் தடை என்றால் அந்தப் பணி எனக்குத் தேவை இல்லை என்று தான் ராஜினாமா செய்தேன். நாளை எனது வீட்டின் முன் தனியாக போராட்டத்தைத் தொடங்குகிறேன்” என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close