Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வுக்கு எதிராகத் தூக்கில் தொங்கும் போராட்டம்!

நீட் தேர்வுக்கான போராட்டம்

நீட் தேர்வை எதிர்த்த மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும், நீட் தேர்வை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் கடந்த 6 நாள்களாகப் போராடிவருகின்றனர். மாணவர் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல கல்லூரிகள் நான்கு நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன.

அனிதா மரணத்துக்கு நீதிகேட்டும், நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரியும் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவைச் சேர்ந்த தினேஷ், ஜீவானந்தம், சேக்அப்துல்லா, சூர்யா, ரியாத் நிஷா உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள், கடந்த 6 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள், மாணவர்கள் ஆதரவு பெருகிவருகிறது. மேலும், இங்கு போராட்டம் நடத்தும் இவர்கள், மத்திய, மாநில அரசுகள் எந்த அசைவும் இல்லாமல் பிணமாக இருப்பதைப்போல, நேற்று முகத்தில் கரியைப் பூசி போராட்டம் நடத்தினர்.

நேற்று ஐந்தாம் நாள் போராட்டத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சூர்யா மயங்கிவிழுந்தார். அதைத் தொடர்ந்து மயக்கமடைந்த சூர்யா, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து,  காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மீண்டும் இறங்கினார். 6-ம் நாளான இன்று, மத்திய -மாநில அரசுகளைக் கண்டித்து தூக்குப்போட்டு சாகும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் ஆதரித்தார். செய்தியாளர்களிடம் மகேந்திரன் கூறுகையில், “தமிழ்நாடே நீட் தேர்வுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அ.தி.மு.க பல சூழ்ச்சிகளைச் செய்கிறது. உலக ஜனநாயக சாம்ராஜியங்களில் நடந்த சூழ்ச்சியாக இதைப் பார்க்கவேண்டியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக 7 கோடி மக்கள், மாணவர்கள் தெருவில் நிற்கிறார்கள். திருச்சியில் உண்ணாவிரதம் இருக்கும் இளைஞர்கள், உயிரையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். இதுபோன்று, தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடக்கின்றன. இதைப் பற்றி கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள், யார் காலை யார் வாருவது என்கிற மோசமான சூழல் நடக்கிறது. இந்தப் போக்கை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் பிரச்னைக்காக 7 கோடி தமிழர்களும் ஒன்று திரண்டு, நீட்டை நிரந்தரமாக ரத்து செய்யும்வரை ஓயமாட்டோம். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்தில் கட்டமைக்கப்பட்டது. இது, ‘யூனிட்டி அரசாங்கம் இல்லை. பெடரல் அரசாங்கம்.

ஒரு மாநில மக்கள், தங்களுக்கான கல்வியைத் தீர்மானிக்க வேண்டும். அதை மறுக்கும் மத்திய அரசு, இந்தியைத் திணிக்கவும், இந்துத்துவத்தைச் செயல்படுத்தத் துடிக்கிறது. அதனால்தான், மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்களில் களமிறங்கி உள்ளார்கள். இதை எதிர்த்து, குடியாட்சியின்மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் ஒன்றாகச் சேர்ந்து போராடத் தயாராக வேண்டும்.

தமிழக அரசு, நீட் தேர்வுக்காக பயிற்சி மையம் அமைக்கப்படும் என அறிவிப்பது, அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மக்கோல் மிதக்க விட்டதுபோல, இப்போது பயிற்சி மையம் என்பதை மிதக்க விடுகிறார்கள். இந்தியாவிலேயே அதிகமாக, தமிழகத்தில் மட்டும்தான் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அதிகம் உள்ளது. இதைச் சீர்குலைக்க நினைக்கும் மத்திய அரசு, நீட் மூலம் வெளிமாநில மாணவர்களைத் தமிழகத்தில் சேர்க்கத் துடிக்கிறது. அதோடு, பல மாநிலங்களில் வினாத்தாள்கள் லீக் செய்யப்படுவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதைத் தமிழகத்தின் தரம்வாய்ந்த மருத்துவத்தை ஒழிக்கும் சூழ்ச்சியாகத்தான் பார்க்கிறேன்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close