Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் தொடங்கியது தேர் பவனி!

வங்கக் கடலோரம் பனை மரங்கள் சூழ்ந்த அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலம். ஆரோக்கியத் தாய், அன்னை வேளாங்கண்ணி மாதா என்று அழைக்கப்படும் புனித கன்னி மரியாள் உலகின் வெவ்வேறு இடங்களில் தோன்றி இறை செய்தி வழங்கியதாகக் கூறப்படுகிறது. அந்தவகையில் அன்னை வேளாங்கண்ணி மாதா காட்சி தந்த ஏழு இடங்களிலும் தேவாலயங்கள் கட்டப்பட்டு புகழ்பெற்று விளங்குகின்றன. அவற்றில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் காட்சி தந்த அன்னை வேளாங்கண்ணி இயேசுவிடம் பரிந்து பேசி அவர் வழியாக ஆரோக்கியத்தைப் பெற்றுத் தருவதில் கருணையின் ஊற்றாகத் திகழ்ந்து வருகிறார்.

வேளாங்கண்ணி

கீழை நாடுகளின் லூர்து நகர் என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்தத் திருத்தலத்துக்கு வரும் மக்களின் வேண்டுதல்களுக்கு மனமிறங்கி அவர்களது துன்பங்களைத் துடைக்கும் தெய்வத்தாயாக விளங்குகிறார் அன்னை வேளாங்கண்ணி.

தஞ்சை மறைமாவட்டத்தின் கலங்கரை தீபமாகத் திகழும் இந்தத் திருத்தலத்துக்கு கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் எல்லா மதங்களையும் சார்ந்த லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து அன்னையின் அருள் பெற்றுச் செல்கிறார்கள். பண்பாடு, மொழி மற்றும் சமயத்தால் வேறுபட்டிருந்தாலும் அனைவரும் ஒரு தாய் மக்களாக வந்து அருள் பெற்றுச் செல்கிறார்கள். இதன்மூலம் மத நல்லிணக்கத்துக்கு ஈடு இணையற்ற சான்றாகத் திகழ்கிறது அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலம்.

இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் `பசிலிக்கா' என்ற பிரமாண்ட கட்டட அமைப்பில் கட்டப்பட்டுள்ள ஐந்து பேராலயங்களில் இதுவும் ஒன்று. ஆண்டுதோறும் அன்னையின் பிறந்தநாளை 10 நாள் விழாவாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பேராலயத்தில் தொடங்கும் தேர்பவனி கடற்கரைச் சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயம் வந்தடைந்தன.  

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரியதேர் பவனி இன்று இரவு சுமார் 7.30 மணி அளவில் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் ஆரோக்கிய அன்னை எழுந்தருள மின்னொளியில் வலம் வருவார். இதையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். நாளை (வெள்ளி) அன்னையின் பிறந்த நாளையொட்டி 10-ம் நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. அப்போது தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் பேராலயத்தில் சிறப்புக் கூட்டுத் திருப்பலி நடைபெறும். அத்துடன் ஜெபமாலை, நவநாள்ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.  

வேளாங்கண்ணி மாதா


விழாவுக்கு வருகை தந்திருக்கும் பக்தர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி புதிய மாதா பேராலயத்திலிருந்து பழைய மாதா பேராலயம் வரை முழங்காலிட்டபடி செல்லும் காட்சி பரவசமாகும். பேராலயம் மட்டுமல்லாமல் விண்மீன் ஆலயம், பழையமாதா கோயில், தியான மண்டபம் எனத் திரும்பும் இடமெல்லாம் மின்விளக்கு அலங்காரத்தால் வேளாங்கண்ணி ஜொலி ஜொலிக்கிறது. 
நாளை நடைபெறவுள்ள அன்னையின் பிறந்த நாள் விழாவுக்காக நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

சென்னை பெசன்ட்நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இவைதவிர ஆரோக்கிய அன்னை பெயரில் உள்ள ஆலயங்களிலும் திருவிழா நடைபெறுகிறது. 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close