Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆசிரியராக உருவெடுத்த சேலம் மாவட்ட ஆட்சியர்

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி ராம்தாஸ் பாஜிபக்கரே பதவியேற்ற நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் தன்னுடைய அதிரடி நடவடிக்கைகளால் சேலம் மக்களை மிகவும் கவர்ந்து வருகிறார். இன்று எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு நினைவாக சேலம் மாவட்ட வனத்துறை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா ஆத்தூரை அடுத்த மல்லிகரை வனப் பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு கலெக்டர் ரோகிணி சேலம் திரும்பிக்கொண்டிருந்தபோது மல்லிகரை ஊராட்சிக்கு உட்பட்ட கருத்த ராஜபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த கலெக்டர் டிரைவரிடம் காரை பள்ளிக்குள் விடச் சொன்னார். பள்ளிக்கூடத்துக்குள் கார் போய் நின்றதும் கலெக்டரைப் பார்த்த குழந்தைகள், ''டேய் நம்ம ஸ்கூலுக்கு புதுசா ஒரு அக்கா கார்ல வந்திருக்காங்க என்று ஒருவருக்கொருவர் முணுமுணுக்க பள்ளிக்குள் அமர்ந்திருந்த குழந்தைகளும் வெளியே ஓடி வந்து கலெக்டரை சூழ்ந்துகொண்டார்கள்.

இதைப் பார்த்த சமையலர்கள் ஓடி வந்து, '' அம்மா நீங்க...,

கலெக்டர்: ''நான் சேலம் கலெக்டர் வந்திருக்கிறேன். குழந்தைகளை யார் பார்த்துக்கொள்கிறார்கள்?''

சமையலர்கள் (பவ்வியமாக) : ''அம்மா இன்று ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்துக்குச் சென்றுவிட்டதால் நாங்கள்தான் பார்த்துக் கொள்கிறோம்''.

கலெக்டர்: ''ஆமாம்! ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்காக போயிருப்பார்கள். இந்த ஸ்கூல எத்தனை குழந்தைகள் படிக்கிறார்கள்?''

சமையலர்கள்: ''மொத்தம் 40 குழந்தைகள் படிக்கிறார்கள்''. என்றார்கள்.
 

இதையடுத்து, கலெக்டர் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள அனைத்துக் குழந்தைகளையும் ஒரே அறைக்கு வரச் சொல்லி, ஒவ்வொரு வகுப்பு குழந்தைகளையும் ஆங்கிலப் புத்தகத்தை படிக்கச் சொன்னதோடு, போர்டில் ஏ,பி,சி,டி எழுதிப் போட்டு ஒரு மணி நேரம் வகுப்பெடுத்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் காட்டுத் தீ போல பரவ டூ விலர் எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வந்துவிட்டார்கள்.

அவர்களைப் பார்த்து நீங்களெல்லாம் எதுக்கு வந்திருக்கீங்க என்று கேட்க, அப்பகுதி மக்கள் ''அம்மா எங்க குழந்தைகளுக்கு நீங்கள் கிளாஸ் எடுத்தது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது'' என்றார்கள். அதற்கு கலெக்டர், ''அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வெளியே குழந்தைகளைப் பார்த்ததும் ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்டுக்குப் போயிருப்பார்கள். குழந்தைகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிப்பதற்காக வந்தேன். அப்படியே குழந்தைகளைப் பார்த்த சந்தோஷத்தில் வகுப்பு எடுக்கத் தொடங்கி விட்டேன். சரி அது போகட்டும் உங்களுக்கு அரசிடம் என்ன உதவி எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டார்.

அப்பகுதி மக்கள், '' அம்மா எங்கள் ஊர்ல சாமி குத்தம் காரணமாக யாரும் மாடி வீடு கட்ட மாட்டோம். அரசு கொடுக்கும் தொகுப்பு வீடோ, பசுமை வீடோ யாரும் வாங்கவில்லை. இந்தப் பள்ளிக்கூடம் கூட கான்கிரீட் போடக் கூடாதுன்னு சொல்லிட்டோம். எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் ஓட்டு வீடு, அட்டை வீடுதான் கட்டுவோம். அதனால் இப்பள்ளிக் கூடத்துக்கு தகர மேற்கூரை போட்டுத் தர வேண்டும்'' என்றார்கள்.

இதைக் கேட்டு வியப்படைந்த கலெக்டர், ''சரி சிறப்புத் திட்டத்தின் கீழ் தகர மேற்கூரைகள் அமைத்துத் தர ஏற்பாடு செய்கிறேன்'' என்று சொல்லிவிட்டு கிளம்பினார். அப்பள்ளியில் ஒருமணி நேரம் குழந்தைகளுக்கு கலெக்டரே கிளாஸ் எடுத்ததை எண்ணி அப்பகுதி மக்கள் மிகுந்த பூரிப்படைந்தார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close